Thursday, August 30, 2012

திரவப்பொருளாய் நான்.....


திருமணச் சந்தையிலே - நான்
நறுமணப் பொருளானேன்...
தினந்தோறும் வரன் கொடுமையிலே - நான்
திரவப் பொருளானேன்..
 
கொடுத்த வாக்குறுதியில்

கடுகளவு தங்கம் குறைந்ததால்
குறை கூறும் வாய்களுக்கு
பிறையாகி தேய்ந்து போனேன்...
பொழுது புலர்ந்தால்
மாமியாரின் அர்ச்சனைகள்
அந்தி வந்தால்
அத்தானின் இச்சைகள்

மிச்சமான வேளைகளில்

புக்ககத்தாரின் வசவுத் தோரணங்கள்
எச்சமான பொழுதுகளில்
ஏனையோரின் கணக்கில்லாக் காரணங்கள்!
இருப்போரை குளிர்விக்க
நெருப்போடு வேகின்றேன்
மறுப்பேதும் சொல்லாமல்
விருப்பின்றி புரிகின்றேன்

பெண்ணினமே பெண்களை

மிதித்துப் பார்க்குதடி
நம்மினமே நம்மவருக்கு
கொடுமை செய்து ரசிக்குதடி!
பசுமையாய் வளர்ந்த இனம்
பட்டமரமாய்ப் போனதடி
சுடரொளியாய் நிற்கும் இனம்
சுட்ட சங்காய் ஆனதடி...

ஆறுதல் சொல்லி அரவணைக்க

யாருமிங்கு இல்லையடி!
ஊறு விளைவித்து மகிழ்ந்திடவே
பாரினில் பெண்கள் அதிகமடி...

2 comments:

sinnathambi raveendran said...

Fantastic Poem. real y appreciate ur poem

பிரேமி said...

நன்றி தோழமையே. தொடர்ந்து காதலாற்றுப்படையுடன் இணைந்திருங்கள்...:-)