Monday, August 13, 2012

கண்ணீரின் கவித்தூறல்கள்....

சொல்லின் முள்ளினில்
தாவர முள்ளின்
வலிமையையும் தாண்டிய வலி!
இதயத்தினுள் இறங்கிய - உன்
சொற்கொடுக்கை
கண்டுவிட்டுப் பயந்தோடுகிறது

குளவி!

நோக்கமின்றி
பயணிக்கும் திசையில்
பாதை பிரிந்தால்
நெஞ்சுக்குள் ஏற்படும்
கலவரம் போல் - உன்
தற்காலப் பிரிவினில்
என் பொற்காலம்
பொழிவிழந்து கலங்குகிறது!

மனக்கண்ணில்

அந்தக் காட்சிகள் கரைய
என் காலத்திரையோ
புகைபடிந்த சுவராய்
பூச்சற்று நிற்கிறது!

கால்கள் மண்ணில் புதைய

நீ நடந்த அதே
கடற்கரையில் நானும் நடக்கிறேன்
மிச்சப்பட்டுக் கிடக்கும் - உன்
பாதச்சுவட்டைத் தேடியபடி....


காட்சிச் சதுரத்திற்குள்
நீ - நான்
மட்டுமல்ல!
எல்லோரும் வந்து போகின்றனர்!
ஆனால்
உன் மௌனம் மட்டுமே
அங்கு பெரிதாக விமர்சிக்கப்படுகிறது!

அவசரத்தில் அள்ளித்தெளிக்கும்

வார்த்தைகளையும்
நழுவி விழும் உண்மைகளையும்
பொறுமையாக
என் கண்ணீரில் மாலையாய்த்
தொடுக்கத் தயாராகின்றேன்...!


இலையைத் தென்றல்
அசைப்பது போல்
மலரைச் சூரியன்
மலர்விப்பது போல்
என் கண்ணீரின்
கவித்தூறல்கள் உன்னைக்
கொஞ்சம் அசைக்காதா...??

No comments: