Sunday, June 19, 2022

விருட்சமாய்...

 

யாருமே வேண்டாமென்று

விலகிச் சென்ற புத்தராய்

இருக்க விரும்பவில்லை!

வீழ்ந்த விதையின் ஓர்

விருட்சமாய் நின்று 

உறவாடிடவே விரும்புகிறேன்! இரங்கற்பா....

பூத்திருந்து விழுதாய்

நின்றிருப்பாய் என்றுதானே 

அனுப்பி வைத்தோம்

சருகாய் விழுந்திடவா

சாதனைகள் செய்தாய்

சென்ற இடம் தெரியாமல்

சேதி சொல்ல முடியாமல்

விம்முகிறது நெஞ்சம்

மீண்டு வா மகளே

பேச நிறைய இருக்கிறது
 😭😭😭Friday, May 8, 2020

எம் இல்லத்து பூந்தளிர்கள்

எம் இல்லத்து பூந்தளிர்கள்
********************************
உள்ளமொன்றும் புறமொன்றும்
பாராமல்
வெள்ளையுடை தரித்து வலம் வரும்
வெண் தேவதைகள்!
செவிலியர் என்றாலே சேதாரமானவள்
என்ற வார்த்தையை வெட்டியெறிந்த
எங்கள் தேசத்தின்
எல்லை அம்மன்கள்!
துயரோடு வாழ்ந்தாலும்
அந்நியர் உயிரோடு போராடும்
உயிரோவியக் காவியங்கள்!
பரமக்குடி மாநகரில்
ஆறு புஷ்பங்களாய் மலர்ந்த
எங்கள் இல்லத்தில் செவிலியராய் 
முப்பெருந்தேவியராய் நிற்கின்றனர் மூவர்!
பயணச்சேவை முடியவில்லை...
வாரிசுகளும் மருத்துவச்சியாய்... செவிலியராய்..
இவர்களின் இரத்த பந்தமாய்
இருப்பதில் பெருமையோடு
கர்வமும் கூடுதலாய்... 👍   

Tuesday, September 22, 2015

பிரிவின் வலி.......இன்று ஒரு சிக்கல்
என் எழுதுகோல்
எழுதிப் பழகியதுண்டு
ஆனால்
அழுது பழகியதில்லை..

எண்ணக்கருவறையில்
உதித்து நின்ற
வார்த்தைக் கருக்களெல்லாம்
வலிமையிழந்து வலியோடு
கரைகின்றன....

விரலுக்கும் எழுதுகோலிற்கும்
இடையே இருந்த நெருக்கம்
உனக்கும் எனக்குமானது…
ஆனபோதும்

கைவிட்ட விரலை நினைத்து
எழுதுகோல் கலங்குகிறதா, - இல்லை
கண்டு கொள்ளாத
உன்னை நினைத்து கண்ணீர் சிந்துகிறதா
தெரியவில்லை…

”இருந்தும் இல்லாமலிரு” வள்ளலார்
வாசகம் கற்றவன் நீ…- உன்
வாசகியாய் வந்தவளை வாசிக்கத்
தவறிவிட்ட தமிழன் நீ…!!

பாட்டும் தொகையுமாய் படித்த தமிழை
என் செவியோடு சேர்த்தவன் நீ… - உன்
பாட்டும் கவியுமாய் இருந்தவளை
கண்ணாக காக்க மறந்த கவிஞன் நீ…

எங்கெல்லாமோ சுற்றி வந்து
கதை சொன்னவன் நீ… - உன்
கதையின் நாயகி நானே என்றவன்
சுபம் போட்டு சுழிக்காதவன் நீ…

நாளும் இரண்டுமாய் பேசி
‘நா’ நயத்தோடு வாழ்பவன் நீ… - என்
சுகமோ துக்கமோ நீயிருப்பதினால்
எதுவும் என்னை பாதிக்கவில்லை…

பிரிவின் ஆறு இலக்கணமும்
உன்னிடம் தோற்று நிற்கிறது - இது
இலக்கணம் மீறிய செயலானாலும்
உன் புன்னகையால் சோகம் துறந்தது…

அணைப்பதும் ஆளுமை செய்வதும்
உன் பேரன்பினால் மட்டுமே என்பதினால்
மறந்த தருணங்களும் உணர்ந்த பொழுதுகளும்
இங்கு மோட்சமடைகின்றன….

துளிப்பாக்கள்....

இணையாமல் காத்திருக்கின்றன
இமைகள் இரண்டும் - உன்
ஒற்றை முத்தத்தில்
இணைவதற்காய்....!

வெளுத்துப்போன வாழ்க்கை
எப்போதும் ஒப்பனையில்
விலைமாதர்கள்...!

சுடும் வெப்பத்திலும்
குளிர் அரங்கேறுகிறது
அலைபேசியில் நீ...!

நாட்குறிப்பின் இடையில்
நீ கொடுத்த மயிலிறகு!
இனவிருத்தி செய்யாத
இறகுகளுக்கிடையே - உன்
நினைவுகள் விருத்தியாய்....!!

பொக்கிச நினைவுகள்....            
                 


இதயச்சுமைகளை
பேனா முனையில்
இறக்கி வைக்கும்போதெல்லாம்
எதிரே வந்து விடுகின்றாய்...

உன்னால்
இரணமான இதயத்தை
ஆற்ற ஆயத்தமாகி விடுகின்றாய்...

என் தவிப்பும் தவமும்
உணர்ந்த நீ வரைகின்றாய்
எனக்காய் ஓர்
எதிர்க்கவிதை...!

முறிந்து கிடந்த சிறகுகள்
மீண்டும் உயிர்ப்பெற
யார் சொன்னாலும்
கேட்காத பெண் மனம்
நீ இரந்தால் மட்டும்
இறவாமல் பச்சையாகிறது...

எப்போதும் என் இதயக்கூட்டினுள்
தென்றலாய் உன் நினைவுகள்
தீண்டித் தீண்டி இளைப்பாருகின்றன…

மடிப்புச்சேலையின் நூலோடும்
துடிக்கும் இதயத்தின் நரம்போடும்
உன் தீண்டல்கள் பூபாளமிசைக்கின்றன…

என் ஞாபகச்சிறகுகள் எங்கும்
உன் நேசத்தின் வண்ணங்கள்
பூக்களாய் மலர்ந்து சிரிக்கின்றன….

வேரில் ஈரமிருந்தால்
விதைக்கு சோரமில்லை – உன்
இதயத்தினுள் ஈரமிருந்தால்
என் விழிக்கு ரோகமில்லை...

ஆதலால்தான் - அன்பே
புரிந்த உறவினுள்
புதைந்து கிடக்கிறது – உன்
பொக்கிச நினைவுகள் புதையலாய்…

நீயற்ற நிகழ்காலம்...
பனி பொழியும் குளிர் காலத்தில்
பார்வை மறைத்துப் போகிறது

நீயற்ற நிகழ்காலம்...

உன் அருகாமையற்ற நேரத்தை
செலவிடுதலின் தாக்கத்தை
வீட்டிலிருக்கும் சோடிப்புறாக்கள்
சொல்லி சொல்லி கதைக்கின்றன...


கடந்த காலக் காதலின் கவித்துவத்தை
கண்ணிற்குள் கொண்டுவரும் போதெல்லாம்
தடுமாறும் என் நடமாட்டத்தை
கடவுள் மட்டுமே கண்டறிவார்...


உன் வசனங்கள் நிறைந்த பேச்சாற்றலை
தனித்திருக்கும் போதெல்லாம்
உள்வாங்கிக் கொள்கின்றேன்...


நீ என் அருகிலிருந்த
அந்த நோன்பு நாட்களாகட்டும் - என்
கரம் பிடித்து கோயிலை
வலம் வந்த பிரகாரமாகட்டும்
இன்னும் நினைவில் நீண்டநிழலாய்
நின்று கொண்டுதானிருக்கிறது...


அப்போதிருந்த உனது புன்னகையை
இப்போது காணவில்லை தோழா...!
உன் பொருட்டு ஒவ்வொரு நாளும்
ஒரு பொய்யைச் சொல்லி கடத்துகிறேன்...


ஆடை மாற்றும் நேரத்தில்
காதலை மாற்றிக் கொள்ளும்
பாதகம் நானறியேன்...


என்னையறிந்த நீயுமிதை அறிவாய்...
ஆன போதும்
ஏனிந்த மௌனம்....?