Saturday, October 13, 2012

காதலின் சிதை.....

தனிமையின் தாழ்வாரத்தில்
உலவுகிறபோதெல்லாம் - என்
உணர்வுகளை இரணமாக்கிய
அந்த ஆனந்த நாயகனை
நினைக்காமலிருக்க முடியவில்லை!
ஆன்மாவைக் காயப்படுத்திவிட்டு
அவசரமாய்ப் பிரிவதில்
அவனிற்கு நிகர் அவனே....
 எண்ணங்களின் நினைவுக்கூட்டிற்குள்
கைகூடாத கனவுகளே கருமையாய்
வியாபித்திருப்பதால்
காலமரத்தில் கண்டவையெல்லாம்
இலையுதிர்க்காலங்களே...! - அவனால்
ஒவ்வொரு தாக்குதலிலும்
ஏற்பட்ட காயங்களை அடுத்தவர்
அறியாமல் அடைகாத்து வருகின்றேன்...!

முற்றிய கதிர்களின் சுமையைத் தாங்காத
நெற்பயிரின் தலை சாய்ந்து நிற்பதுபோல்
அவனாலான சோகங்களின் கனம் தாங்காமல்
சோர்ந்தே சுயமிழக்கின்றேன்...
உள்ளுறுத்தும் ஊமைக்காயங்களை
திரைபோட்டு மறைத்து சிரித்திட
உதடுகளில் புன்னகையின் ஊர்வலத்தை
வீரியமாய் நடத்தி வருகிறேன்...

என்னவனிற்கு மண்ணால் செய்த பொம்மையும்
உணர்ச்சிகளான பெண்மையும் ஒன்றே...
காலம் முழுவதும் உன்னோடு
நானிருப்பேனென்று சுகராகமாய்
வார்த்தை வரம் வழங்கியவன் - இன்று
இடம் மாறி நிறம் மாறிப் போனான்..!
காதல் என்னவனிற்கு கதையானது
எனக்கு அதுவே சிதையானது....!!

Friday, September 28, 2012

அன்பெனும் வரம்....

இங்கு யாவரும்
இடம் பெயர மட்டுமே
பொழுதுகள் புலர்கின்றன!
இயற்கையை ரசிக்க இங்கு
இமைகளுக்கு நேரமில்லை!
இதயம் கூட இயந்திரமாய்
இயங்குவதால் பயத்தோடே
வாழ்க்கையும் பயணமாகிறது...
வானத்து ஓவியங்களை ரசிக்க
நாட்காட்டியில் நாள் பார்க்கபடுகிறது...
தாயின் மடிதேடும் குழந்தைக்கும்
குறிக்கப்படுகிறது ஞாயிற்றுக்கிழமை!
வாரநாட்களில் அவர்கள் வளர்வதற்கு
விலை பேசப்படுகிறார்கள்....

இருவர் ஒருவராகும்
இரவு உறவும் இறுகிப்போக
இதய உறவுகளில் கருமை படர்கிறது...
விரல் அழுக்கை அகற்ற
நகத்தை வெட்டி எறிவதுபோல்
விவாகப் பிணைப்புகள்
எப்போது வேண்டுமானாலும்
வெட்டி எறியப்படுகின்றது..
கூட்டுக் குடும்பங்கள்
ஏட்டுச்சுரைக்காயாய்த் தெரிவதால்
பண்பாடுகள் அனைத்தும்
மண்ணிற்குள் புதைந்து கிடக்கிறது...
குறை கூறுவதே இங்கு
நிறையாய் ஊறிக்கிடக்கிறது...
அவசியத் தேவைக்கு மட்டுமே
அன்பு அலைமோதுகிறது...
காட்சிகள் எல்லாம் பிழையாய்த் தெரிவதால்
பட்சிகள் கூட இங்கு பாம்பாய்த் தெரிகின்றது...
உருவாகும் உயிர்களனைத்தும்
உருகித்தவமிருப்பதோ
அன்பெனும் வரத்தைப் பெறுதற்கே...

Thursday, September 20, 2012

நம் பயணம்.....


  
    நீ   
    ஒவ்வொருமுறையும்
    ஊருக்குப் பயணிக்கும்போதும்
    என்னோடு சேர்ந்து
    நம் தலையணையும்
    அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறது
    

    சுவடு படிந்த நிலையில்
    நீ அமர்ந்த இருக்கை
    தூசு படிந்த நிலையில்
    நீ உபயோகித்த கணிணி
    எண்ணெய் இருந்தும்
    ஏற்றப்படாத காமாட்சி விளக்கு
    ஏக்கத்தில் நான் - என
    அத்தனையும் ஒப்புவிக்கின்றன
    நீ ஊருக்குச் சென்றதை!
    
    வாசல் வழியே வந்து
    வசவோடு எட்டிப்பார்க்கும் கதிரவனும்
    முற்றத்துக் கூடத்தில் வந்து
    முனங்கியபடியே நகரும் நிலவும்
    மாலை நேரத்திலும் மலராமல்
    இதழ்களை அடக்கியிருக்கும் அல்லியும்
    உன் மேல் நான் கொண்ட காதலை
    நியாயப்படுத்தி - நீ
   இல்லாமலிருப்பதற்காக
    தர்ணா நடத்திப் பார்க்கின்றன!


     இரவு நேர
    பயணத்தின் போது
    நீ
    உரையாடும் அந்த
    கைபேசிக் காதல் மொழிகளை
    ஆராய அடுத்த அகராதியை
    நான்
    தேடிக்கொண்டிருப்பேன்
    விடியும்வரை விடாமல்
    நீ
    சேருமிடம் வந்தபின்புதான்
    நானும் உணர்வேன்
    உன்
    பயணம் என்னோடுதான் என்பதை...
    
    ஆன போதும்
    எத்தனை உறவுகள்
    எங்கெல்லாமோ பயணிக்கின்றனர்
    அத்தனைக்கும் கலங்காத மனசு
    உன் பயணத்தில் மட்டும்
    கொஞ்சம் ஆடித்தான் போகிறது!
    நீ
    பயணிக்கும் திசையெல்லாம்
    என்
    மனசும் உன்னோடு பயணிக்க
    நம்
    பயணத்தோடு காலமும் நமக்கு
    சுருதி சேர்த்து சுகமாக்குகின்றது...!!
    

Saturday, September 15, 2012

அப்பாவிற்கு ஓர் இரங்கற்பா

கசப்பான நினைவுகளைக்
காலங்கள் கரைத்துவிடலாம்
ஆனால்
பாசத்தாலான நினைவுகளை
எப்படி மறப்பது?

நாழிகைகள் கரைவதில்
துயரங்கள் கரைய மறுக்கின்றன...
சோகநிகழ்வுகள் பொதிசுமந்த
பாரமாய் நெஞ்சில் நிறைந்துள்ளன...

எப்படியாவது ஏதாவது ஒருவிதத்தில்
அப்பாவின் நினைவுகள்
அழுத்தமாய் வந்து ஒட்டிக்கொள்கின்றன!

புகைப்படத்தில் மட்டுமல்ல எப்போதும்
நேரிலும் சிரித்திருக்கும் அப்பா
மரணத்தின் வாசலிலும் சிரித்திருந்ததை
மனம் மறக்க மறுக்கிறது..

கம்பீரமாய் மட்டுமல்ல மென்மையாய்
அழைக்கும்போதும்
அப்பாவின் குரல் ஓங்கியே இருக்கும்..

அப்பாவிற்கிருந்த மரியாதையை
வந்துசேர்ந்த எண்ணிலடங்கா
மலர் வளையங்கள் சொல்லியழுதன
அவர் வாழ்ந்த மாசற்ற வாழ்க்கையை...

மாலை வரை வந்து சேர்ந்த மாலைகளில்
அப்பாவின் நட்பின் பலமறிந்தோம்...
வந்திருந்தோர் மட்டும் கரையவில்லை
வானமும் கரைந்து அழுதது...

விருந்தோம்பலில் அப்பாவிற்கு நிகர் அப்பாவே!
அப்பாவின் இதயத்துடிப்பு ஒலியிழந்தாலும்
அவரின் கைக்கடிகாரம் ஒலியிழக்கவில்லை..!!

உரிமையானோருக்கு மட்டுமல்ல
உறவானோருக்கும் உயிரான அப்பா - இன்று
எல்லோர் உயிரையும்  உருகச்செய்து சென்று விட்டார்....

ஒவ்வொரு மேடைப்பேச்சுக்கும் முன்பும்
அப்பாவின் முன்புதான் அரங்கேற்றம் - இங்கு
அவர் மூச்சில்லாதபோது என் பேச்சும் மௌனமாய்...

எப்போதும் அப்பாவால் பூத்துக்குலுங்கிய
எங்களது நந்தவனம் - இன்று
பாலையாய் அலைமோதுகிறது...!!

என் எழுத்துக்களை நேசித்த
என் முதல் வாசகன் என் அப்பா - இன்று
யோசித்து எழுதினாலும் எழுத்துச்சிதறல்களில்
அப்பாவே ஐக்கியமாகின்றார்...

மரணத்தின் பிடியில் அப்பா பிடித்திருந்த
கட்டிலின் விளிம்புகளில் அவரது கைரேகைகள்!
தடவிப்பார்த்து தவிக்கையில் உள்ளிருந்த
உயிர் நழுவி விழுகிறது...

மீளாத்துயிலில் அப்பா சென்றுவிட்டு
ஆறாத்துயரத்தில் எம்மை ஆக்கிவிட்டார்
காலத்தின் எல்லையை கணக்கிட்டிருந்த
அப்பாவும் ஓர் தீர்க்கதரிசியே....

ஏனையோருக்கும் அப்பாவைப்
பிடித்திருந்ததால் என்னவோ
எமனிற்கும் பிடித்துவிட்டது....

வந்தது அப்பாவிற்கு இறப்பென்றால்
வந்திருப்பது எங்களுக்கு பேரிழப்பு
கடவுளிற்கும் கண்ணீர் வருமென்றால்
அது அப்பாவின் விதி முடிவால்...











Saturday, September 1, 2012

என் இதய ஒசை கவிதையாய்...

கணநேரம்தான் வாழ்க்கை
அதற்குள்
காயங்கள் மட்டுமே ஆயிரம்
தினம் தினம்
சிலுவை சுமந்தாலும்
எனக்குள் நானே உயிர்தெழுந்து
பீனிக்ஸ் பறவையாகின்றேன்!
சுமைகள் தாங்கியே
சுகவீனமாகுவதால்
சிறிய இளைப்பாறலுக்கு
இடம் தேடுகின்றேன்....
எனக்கான பாகம் பிரிக்கப்படுகிறது
பாலையும், நெருப்புமாய்.....!!
சுண்ணாம்பிற்கும், வெண்ணெய்க்கும்
வேறுபாடு தெரியும்போது
நிசத்தின் வெளிச்சம்
வலியாய்க் கண்களைத் தாக்குகிறது!
 கண்ணீரை
ஊராருக்குக் காட்ட - நான்
முயற்சிப்பதில்லை!
அது
இதயத்தில் வடிவதை யாரும்
அறிந்து கொள்ள
ஆசைப்பட்டதுமில்லை!
கண்ணீரற்ற கண்களின்
வடுக்களை சாயம்பூசி
மறைத்து சிரித்திடுவேன்!
தேங்கி அழுவதைவிட
நகர்ந்து வாழ்வது நல்லதென
தீர்மானித்து திங்காளானேன்!
 வலி நிறைந்த நினைவுகள்
நீக்கமற நிறைந்திருந்தாலும்
சலனத்திற்கு இடமளிப்பதில்லை!
பறக்கும் அளவிற்கான
ஆகாயப் பரப்பைத் தீர்மானிக்கும்
ஓர் பறவையாய்....
வீசும் திசையைத் தானே நிர்ணயிக்கும்
ஓர் காற்றாய்....
இந்தப் பிரபஞ்சத்தில் வலம் வருவேன்!
சப்தமற்ற சலங்கையாய் - என்
மௌனம் ஒலிக்க
இசையை எழுப்பும் - என்
இதய ஓசை கவிதையாய்.......

Friday, August 31, 2012

முத்துச்சரமும் நானாவேன்...!

பொட்டுமேலே பொட்டுவச்சு
பொட்டலிலே போறசாமி
பொட்டுவச்சு எனை கரைசேர்க்க-உன்
பொட்டுருகத் தோணலையா...

ஆலமரக்கிளையினிலே
ஊஞ்சல் கட்டி ஆடயிலே
உம் ஓதும் குரல் கேட்டு
உண்மையுடன் காதலானேன்...
அத்துவானக் காட்டுக்குள்ளே
ஆயர் குழல் ஊதையிலே
சாடை சொல்லி ஊதினாலும்
சாமத்திலே நான் வருவேன்...

படுத்தால் பலநினைவு

பாயெல்லாம் கண்ணீரு!
உண்டாலும் உறக்கமில்லை
துவண்டாலும் தூக்கமில்லை...!
சேர்ந்திருந்தோம் சேர்ந்திருந்தோம்
செடியிலிட்டப் பூப்போல.....
செடியறுந்து பூ உதிர்ந்தா
சேருவது எப்போது?

கூடுனமே கூடுனமே-நாம்

கூண்டு வண்டிக் காளைபோல!
ஆகாத காலம் வந்து-நாம்
ஆளுக்கொரு சீமையானோமே...!
பட்சத்தோடு பயமிருக்கு
பறக்கச் சிறகிருக்கு!
எண்ணமிருக்கு-நம்
எழுத்துவிதி எப்படியோ?

மண்ணெதிரி, மரமெதிரி

மாந்தரெல்லாம் என்னெதிரி
புல்லும் எதிரியல்லோ!
பூலோகத்தில் ஏன் பிறந்தேன்?
நன்றாயிருந்தோம்
நாள்தோரும் சிரித்திருந்தோம்
ஊருபட்ட கண்ணாலே
தனிச்சுத்தான் தவிக்கிறோமே.....

உணர்வுக்கும், ஆசைக்கும்

விதைபோட்டு நின்றோமே....
விளைந்ததை விழுதாக்க
வழியமைத்து வாழ்வோமே...

அத்திமரம் நானாவேன்

அத்தனையும் தேனாவேன்
நத்திவரும் மச்சானுக்கு
முத்துச்சரமும் நானாவேன்...!

நான்.....

விளக்கைத் தேடி வந்து
விதியை முடித்துக் கொள்ளும்
விட்டில் பூச்சியல்ல நான்...!

வசந்தத்தைத் தேடி வந்து


வலைக்குள் சிக்கிக் கொள்ளும்
வண்ணத்துப் பூச்சியல்ல நான்...!

வருணத்தைத் தேடி வந்து

சிறார்களிடம் சிக்கித் தவிக்கும்
தும்பியுமல்ல நான்...!

மண்புழுவைத் தேடி வந்து

தூண்டிலில் சிக்கிக்கொள்ளும்
சிறு கெளிறுமல்ல நான்...!

அளவில்லா ஆசைக்கு
அடிமைப்பட்டு ஆனந்தக்கூத்தாடும்
அற்ப அரிவையல்ல நான்...!

அயோத்தியோ அசோகவனமோ

அன்பின் வலியோன் அகத்தினில்
நீங்காமல் நிறைந்திருக்கும்போது

சிகரமே சில்லென்று கீழிறங்கினாலும்

சீண்டிப்பார்க்காத சீதரனின்
பத்தினி சீதை நான்...!

கோட்டைத் தாண்டினாலும்

கோடகம் மீறாத கொற்றவனின்
கொற்றவை கோதை நான்...!

எத்தனை இன்னல்கள் வந்தாலும்

எண்ணங்களை மாற்றாமல்
என்னவனின் நினைவோடு
வாழ்ந்து கிடக்கும் வாழ்வரசி நான்....!!

எனக்கருள்வாயா தேவனே...... ??

என் எண்ணங்கள்
விண்ணிலிருந்து இறங்கி வரவில்லை
என் விதியின்
வேர்களிலிருந்து புறப்பட்டவை
நகர்ந்த பொழுதுகள்
சேமித்து வைத்திருக்கும்
சங்கடமான சங்கதிகளையும்
நடப்புப் பொழுதுகள்
கற்றுத்தரும் கணக்கற்ற பாடங்களையும்தான்
கிறுக்கல்களாக்கிக் கொண்டிருக்கிறேன்
நேற்றைய கடனை அடைக்க
இன்று கடன் வாங்கும்
பாமரனைப் போல்
நேற்றைய பிரச்சினை முடியாமலிருக்க
இன்று இன்னுமோர் பிரச்சினை..!
இதயத்தில் நெருப்பை வைத்துக்கொண்டு
கரங்களுக்குளிருக்கும் மலரை
காப்பாற்ற முயற்சிக்கின்றேன்
இதயத்து இருப்பினில் எல்லாம்
பற்றுகளே நிறைந்திருக்க
வரவுகளுக்கு வழியில்லாமல்
கணக்கும் அநாமத்தாய் நிற்கிறது!

http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/300302_404996502895542_715019747_n.jpg

செல்லரித்துப் போன நெஞ்சினுள்
புல்லரித்த கற்பனைகள்
பூந்தென்றலாய் புதுமலராய்
உன் நேசத்தின் வாசத்தினில்
இடறிவிழுந்தன வார்த்தைகள்!
உள்ளத்தினுள் உன்னோடு ஓடிக்கொண்டிருக்கும்
உரைநடைச் செய்திகளை
எழுத்தினில் வடிவமைக்கின்றேன்
எப்போதும் என்னை விட்டகலாத
என் பேனாவிற்கும், எண்ணத்திற்கும்
புது வலிமை வந்தது நீ வந்ததினாலே...!
எத்தனை நந்திகள் வந்து
வழியினில் படுத்திருந்தாலும்
பக்தருக்கருளும் பரமனாய்
எப்போதும் எனக்கருள்வாயா தேவனே...... ??



Thursday, August 30, 2012

திரவப்பொருளாய் நான்.....


திருமணச் சந்தையிலே - நான்
நறுமணப் பொருளானேன்...
தினந்தோறும் வரன் கொடுமையிலே - நான்
திரவப் பொருளானேன்..
 
கொடுத்த வாக்குறுதியில்

கடுகளவு தங்கம் குறைந்ததால்
குறை கூறும் வாய்களுக்கு
பிறையாகி தேய்ந்து போனேன்...
பொழுது புலர்ந்தால்
மாமியாரின் அர்ச்சனைகள்
அந்தி வந்தால்
அத்தானின் இச்சைகள்

மிச்சமான வேளைகளில்

புக்ககத்தாரின் வசவுத் தோரணங்கள்
எச்சமான பொழுதுகளில்
ஏனையோரின் கணக்கில்லாக் காரணங்கள்!
இருப்போரை குளிர்விக்க
நெருப்போடு வேகின்றேன்
மறுப்பேதும் சொல்லாமல்
விருப்பின்றி புரிகின்றேன்

பெண்ணினமே பெண்களை

மிதித்துப் பார்க்குதடி
நம்மினமே நம்மவருக்கு
கொடுமை செய்து ரசிக்குதடி!
பசுமையாய் வளர்ந்த இனம்
பட்டமரமாய்ப் போனதடி
சுடரொளியாய் நிற்கும் இனம்
சுட்ட சங்காய் ஆனதடி...

ஆறுதல் சொல்லி அரவணைக்க

யாருமிங்கு இல்லையடி!
ஊறு விளைவித்து மகிழ்ந்திடவே
பாரினில் பெண்கள் அதிகமடி...

என்னில் நீயடி....

வானத்து வீதியிலே
வானம்பாடியின் சங்கீத ஊர்வலம்
இதயத்து வீதியிலோ
இளையவனின் நினைவுகள் ஊர்வலமாய்
வெற்றிடங்களை மொத்தமாக
இரண்டும் இசையால் நிரப்புகின்றன
நேற்றைய இரவினில்
என் காதருகில் - நீ ஓதிய
காதலின் கவிராகம்
வேதமாய் நெஞ்சுக்குள் ரீங்காரமிடுகின்றன..!
"செல்லமே...!!
உன்
எண்ணத்தில்  விளைந்த முத்துக்களை
என்னோடு பகிர்ந்திடவே விளித்தேன்...
உன்னிதழ் வழியே  உதிர்ந்ததுவோ
உன்னுயிரோட்டம் - உணர்ந்ததும்
உறைந்து உருகலானேன்
களமிறங்கி களையெடுக்க வந்தவன்
கவி கேட்டு கரைகின்றேன்
ஏனடி வதைக்கின்றாய்...
இலக்கை அடைய நினைத்தவனை
இதயத்தினுள் அடைத்து விட்டாயே...
வீரியமாய் விளைந்திருந்தவனை - உன்னில்
பாரியின் முல்லையாய் படரச்செய்தாயே...
யாகம் செய்து எனை ஆட்கொண்டவளே
மோகம் கொன்று முத்தமிடுகின்றேன்
காதல் சொன்ன கனியிதழ்களை
என்னிதழ்களோடு சிறைபிடிக்கின்றேன்
தயக்கம் தவிர்த்து தமிழால் - என்
தாகம் தீர்த்த தமிழச்சியே....
என்னில் நீ எப்போதும் இருப்பாயடி"....!!
தேய்ந்துபோன இசைத்தட்டாய் - உன்
காதல் வேதங்கள் இன்னும் என்
இதயத்தினுள் இசைத்துக்கொண்டே.......
 
 
 

Friday, August 24, 2012

நான்தான் உன் உலகம்....

விடியலில் வரும்
கதிரவனைக் கண்டு
நட்சத்திரங்கள் வேண்டுமானால்
காணாமற் போகலாம்!
ஆனால்
என் விடியலின்
விடிவெள்ளியே நீதானே...
ஒளியினில்
இருள் மறைவது போல்
உன்
ஒலியினில்
என்
சோகம் மறைந்தே போகலாம்...
ஓடி வரும் நதி
எதிரில் இருக்கும்
தடைகளைக் கடந்து
இளைப்பாறாமல் கடலை நோக்கி
பயணிப்பது போல்
என் இளைப்பாரற்ற
பயணமும்
உன்னை நோக்கியே இருக்கும்..
எப்பொழுதும்
எனது எல்லாக் காரியங்களும்
நீ இல்லாத போது
நிகழ்ந்து விடுவதில்லை...
ஒவ்வொரு முறையும்
முயன்றுதான் பார்க்கிறேன் 
இங்கு
ஆணிவேரே அறுந்துபட்டால்
மரம்
எங்கிருந்து தழைக்கும்?
நீயே
இல்லையென்றால்
நான்
எங்கிருந்து வாழ்வது?
நான் உன்னிடம்
துளையில்லாத மூங்கிலாக
இருக்க விரும்பவில்லை
உன் உயிரின் ஒலியில்
இனிய இசையைத் தரும்
புல்லாங்குழலாய்
இருக்கவே விரும்புகிறேன்...
உன்னைக் காணும் போதெல்லாம்
மௌனத்தில்
என் மனம் பேசுவதை
நீ
அறியவில்லையா?
உயிருக்கும் உடலுக்கும்
உள்ள தொடர்புதான்
உனக்கும் எனக்குமான தொடர்பு!
எனது கவிதைகள்
அறியும் என் நேசம் - ஆனால்
எப்போதும் என்னை
அறிந்ததில்லை நீ...!!
இருப்பினும்
இன்னும் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
நான்தான் உன் உலகம் என்று....!!

காதல் மான்களாகிய நாம்.....

உள்ளங்கைக்குள் உலகமாம்
எல்லாம் கணப்பொழுதினுள்
எத்தகைய பொய்யிது..!
எப்போதும் உன் நினைவான
தருணங்களுடனேயே இருப்பதால்
நினைவு சுழற்சிக்குள்
கனவுப் பொருளாகிக் காணாமலேயே
போகின்றேன்....
எனக்கும் உனக்குமான
இடைப்பட்ட பயணமோ
உயிர் துறக்கும் தூரம்
யார் அறிவார் இதனை?
நுனிப்புல் மார்கழியில்
பனித்துளியால் கொஞ்சப்படும்
அந்த அழகான காலையை
பார்க்கும் பொழுது - உன்
நேசத்தின் வாசம்
என்னை மெல்லமாய்
தழுவிச் செல்லும்....!
ஒவ்வொரு நாளும்
என்னை செதுக்கி வைத்து
சேமித்துக் கொண்டிருக்கின்றேன்
நீ வந்து நிற்பாய்....- ஒரு
சில வினாடிகளிலேயே
உன் இதழ் பிரியா புன்னகையில்
நான் மொத்தமாய் கலைந்து கிடப்பேன்...
நீ விதைக்கும் புன்னகையில்தான்
அன்பின் அகராதியை அறிகின்றேன்...
உன்னைப்பற்றிய தீராத நினைவுகள்
திமிறியபடி கிடப்பதால்
மறதிக்கு மார்க்கமின்றி அலைகின்றேன்......
என்னுடைய நேற்று மட்டுமல்ல
இன்றும் - நாளையும் கூட
நீயாகத்தான் இருப்பாய்....!!
நிலவொளிரும் இரவுகளில்
வடதிசையிலிருந்து
பாதி இரவுகளுக்கு அப்பால்
கண்விழித்து - நீ
எழுதுகிற கடிதங்களில் எல்லாம்
உன்
காதலைக் கொட்டித் தீர்த்திருப்பாய்!
அப்போதெல்லாம்
வடதிசையில் தான்
எனக்கு சூரியோதயம்....!!
அன்பே....
எவை கிடைத்தாலும்
எவற்றை இழந்தாலும்
பசிக்கு குட்டை நீரைக்குடிப்பதாய்
போக்குக்காட்டிய
காதல் மான்களாய்
விட்டுக்கொடுத்து வாழும்
நம் காதல் யாரிடமிருக்கு...!!??

கண்ணாளனே.....


 குழலானவனே!  நின்னுடைய கவிக்
கடலில் யானொரு சிறு நுரைச்சிதறல்
தேனைச்சுவையும் ஈப்போல் மொய்த்து
தோடிராகம் இசைத்திடுவேன்; யாரிதையறிவர்...?

எழுது என்கின்றாய்; எங்ஙனம் எழுதுவேன்?
உண்மை அறிந்திலர் உலகத்தார்...
எழுத்துப் பொருள் நீயானால்
எழுது பொருள் நானாவேன்....!

குழலாய் நான்; ஊதும் குமுதவாய் நினது..!
நரம்பாடும் வீணையாய் நான்; ஆட்டுபவன் நீ..!
ஓவியத்திலகமாய் நான்; தூரிகையாய் நீ..!
பசுமையாய் நான்; ஒளிச்சேர்க்கையாய் நீ..!

வல்லவனே வல்லவற்கும் நல்லவனே
சொல்லவனே சொல்லிற்கும் தூயவனே
தேனொழுகும் தமிழில் நீயே என் கர்த்தா
யானெழுதிய மொழியினில் நீயே என் கருத்தாய்

காலையில் கவிக்கதிராய் கலப்பதும்
மாலையில் மோன மயக்கத்தில் அணைப்பதும்
அள்ளித் தெளித்த முத்தத்தில் நனைந்தவளாய்
வெள்ளிச் சிதறலாய் எனை ஆட்கொள்வாய்
சங்கடங்கள் சத்தமின்றி செத்தொழிந்திட
சங்கீதங்கள் யுத்தமின்றி கரை புரண்டோடிட
உள்ளத்து உணர்ச்சிகள் வெள்ளமாய் வெளியேறிட
அள்ளிச்செல்லும் உன் அணைப்பு மெல்லமாய்....

ஒலிற்றவள் கேட்ட வர்ணனையாய்
ஒளியற்றவள் பார்த்த வண்ணமாய்
காலற்றவள் ஆடிய நாட்டியமாய் - உன்
காதலினில் கரைந்தே போகின்றேன்...




எல்லை தாண்டிய காதல்...

சூரியப்பார்வையில் அரும்பும் ஆளானது - இந்த
ஆரியனின் பார்வையில் நானும் பெண்ணானேன்....
வேலிக்கும் எல்லையுண்டு - இந்த
பொலிவிற்கும் அவிழ்ப்புண்டு!
கம்பியின் கரங்கள் நெறித்தாலும்
வெம்பி விடாமல் மீறிடுவேன் - உன்
கரங்களுக்குள் மலர்ந்திடுவேன்...!
பாக்களை நீ தொடுத்து வைத்தால்
பூக்களாய் உன் மடியில் விழுவேன்...!
தென்றலாய் நீ தழுவிச் செல்ல - உன்
மன்றம் வந்து சேருவேன் செல்லியாய்..!
பனித்துளியில் பூ சிரிப்பது போல் - உன்
கனிச்சிரிப்பில் நான் மலர்ந்திடுவேன்...!
எல்லைகள் எத்தனையானாலும் - என்
செல்லைகள் தவிர்த்து உனைச்சேருவேன்...
 










வைகறை....

கனவில் வாழ்ந்த வாழ்க்கை
கலையட்டும் வைகறையில்...
அரும்புகள் அனைத்தும்
பெருகிச்சிரிப்பது வைகறையில்...
விடியாத இரவுக்கும்
விடியல் கிடைப்பது வைகறையில்...
வாசலிலே வண்ணக்கோலம்
வாசமாய் நான் வரைவதும் வைகறையில்...
எந்த வாழ்விலும் ஏற்றமுண்டு
அந்த சொல்லுக்கு அழைப்பது வைகறையை..
அதுபோல்
எனக்கு எப்போதும் நீயே வைகறை..!





Monday, August 20, 2012

பிறன் மனை நோக்கியப் பெண்பித்தர்கள்...


நோக்கிய இடமெல்லாம் கண்டேன் பிறன்மனை
நோக்கிய பெண் பித்தர்களை
இல்லத்திலொரு தமயந்தி இருந்தாலும்
இவன் நாடுவது என்னவோ நளதமயந்திகளையே...
இவனிற்கு சீர்கொண்டு வந்தவள் சீதைகளாக
இருக்கட்டும் என்பான்...!
இராமனை இராமாயணத்தில் யாரென்பான்...??
கீதையின் சாரத்தை எகத்தாளம் செய்வான்
கீதையின் நாயகர்களாய் இருந்திட ஏங்கிடுவான்
ஐவருக்கும் ஒருத்தியை அங்கீகரிப்பான்...!
சிலம்பின் புலம்பலுக்கு எரிச்சலைடைவான்
கலங்கும் கண்ணகியை கண்டித்து
மாதவிக்காய் மருகிடுவான்...!
திருக்குறளின் நெறிகளை பின்பற்றமாட்டான்
திருவள்ளுவரின் பத்தினியைப் பெருமையாய் பிதற்றிடுவான்...
அம்பிகை போல் அரிவையிவளிருந்தாலும்
இவனாட்சி என்னவோ எழினியையே விழிக்கும்...!
தோழி என்று கள்ளமாய் கதைத்திடுவான்
கூட்டாளி கிடைத்தால் குள்ளநரியாய் மாறிடுவான்...!
மனம்விட்டுப் பேசும் மங்கையையும்
மனதிற்குள் நிர்வாணமாக்கி ரசித்திடுவான்...
பயணத்தின் பக்கத்தில் தேவதையாய் இவனில்லாள்
பயணித்தாலும் இவனது விழிகள் விதியினை மீறிப்
பயணிக்கும் மங்கைகளின் அங்கங்கள் மீது...!!
கிலிமிகுந்த பேதைகளுக்கு பசுத்தோல் போர்த்திய
புலியே புருசர்களாய் வீற்றிருக்க - அவர்கள்
புகுந்த இடமும் புற்றுச் சுவராகிறது...!
மண்டியிட்டு மனையாள் இவனைத் தொழுதாலும்
சண்டியிட்டு இவன் நாடுவதென்னவோ
பிறன் மனை நோக்கியே....
வாழ்வதே வாரிசுகளுக்காய் என்றென்னும்
வாழ்வரசிகளை வணங்கத்தான் வேண்டும்
எத்தனையோ பெண் பித்தர்கள் இருந்தாலும்
இன்னும் பெண்மையை மதிக்கும் நேசிக்கும்
எங்களின் பிறன்மனை நோக்காப் பேராண்மைகள்
இருக்கும் வரை எங்களவர் பெண்டிர்கள்
பாரினில் பலமாய் வாழ்ந்திடுவோம்....


என் எழுத்து விதி எப்படியோ...?

பொட்டுமேலே பொட்டுவச்சு
பொட்டலிலே போறசாமி
பொட்டுவச்சு எனை கரைசேர்க்க-உன்
பொட்டுருகத் தோணலையா...

 
ஆலமரக்கிளையினிலே
ஊஞ்சல் கட்டி ஆடயிலே
உம் ஓதும் குரல் கேட்டு
உண்மையுடன் காதலானேன்...

அத்துவானக் காட்டுக்குள்ளே

ஆயர் குழல் ஊதையிலே
சாடை சொல்லி ஊதினாலும்
சாமத்திலே நான் வருவேன்...

படுத்தால் பலநினைவு
பாயெல்லாம் கண்ணீரு!
உண்டாலும் உறக்கமில்லை
துவண்டாலும் தூக்கமில்லை...!

சேர்ந்திருந்தோம் சேர்ந்திருந்தோம்

செடியிலிட்டப் பூப்போல.....
செடியறுந்து பூ உதிர்ந்தா
சேருவது எப்போது?

கூடுனமே கூடுனமே-நாம்

கூண்டு வண்டிக் காளைபோல!
ஆகாத காலம் வந்து-நாம்
ஆளுக்கொரு சீமையானோமே...!

பட்சத்தோடு பயமிருக்கு
பறக்கச் சிறகிருக்கு!
எண்ணமிருக்கு-நம்
எழுத்துவிதி எப்படியோ?

மண்ணெதிரி, மரமெதிரி
மாந்தரெல்லாம் என்னெதிரி
புல்லும் எதிரியல்லோ!
பூலோகத்தில் ஏன் பிறந்தேன்?

நன்றாயிருந்தோம்
நாள்தோரும் சிரித்திருந்தோம்
ஊருபட்ட கண்ணாலே
தனிச்சுத்தான் தவிக்கிறோமே.....


உணர்வுக்கும், ஆசைக்கும்
விதைபோட்டு நின்றோமே....
விளைந்ததை விழுதாக்க
வழியமைத்து வாழ்வோமே...

அத்திமரம் நானாவேன்
அத்தனையும் தேனாவேன்
நத்திவரும் மச்சானுக்கு
முத்துச்சரமும் நானாவேன்...!

Thursday, August 16, 2012

பதியெனும் காதலில்.....


உதடுகள் ஊறும் அமிழ்தத்தில்
உயிர் வரைந்த ஓவியமாய்
ஊதக் காற்றில் மிதந்து வந்த
உன் பொன் தமிழில் கரைந்தேன்

எங்கிருந்தோ ஆசைகள்
எல்லையில்லாமல் எழுந்துவர
ஏகாந்த ஏக்கத்தில்
எண்ணமெல்லாம் மேலெழும்ப

ஐம்புலன்களும் அமைதியிழந்து
ஐயமின்றி உனைச்சேர
உயிர் மூச்சை உள்ளிழுத்து
உதடுகளால் மொழி பெயர்த்த

உன் காதலின் கவித்துவத்தை
என் இதழ்களில் சுவைக்கின்றேன்
தமிழுக்கும் மணமுண்டு என்பதை
உன் மன மொழியில் அறிகின்றேன்


இளந்தளிராய் இலை வடிவாய்
கிளைகளுடன் கொண்டாடினேன் - உன்
ஒளிச்சேர்க்கையின் புரிதலில்
என் உயிர்மூச்சை பெற்றிருந்தேன்

என் விழிச்சிவப்பினில்
கண்ட காதல் கனவுகளை
உன் இதழ்களின் தூரிகைகள்
நனவினில் எழுதத்தயாராகின்றன...

வேதம் ஓதிய உதடுகள்

காதல் கீதம் பாடும் என்பதை
காசினியறியும் போது
காதலி நானுமறியலானேன்...

விதியெனும் விளையாட்டை
விரித்திட வேண்டாமிங்கு
பதியெனும் காதல் செய்து
வாழ்ந்திடுவோமே....

இன்பமும் வேண்டாம் - உலகத்
துன்பமும் வேண்டாம்
அன்பெனும் மதுவினுள் மூழ்கி
அகநிறைந்திடுவோம் அன்பே...



 

Tuesday, August 14, 2012

உண்மையின் ஓலம்.....

ஒவ்வொரு புல்லையும்
நுகர்கின்றேன்...
பசுமையின் நுனியில்
பனித்துளியின் பிரசவம்...
பார்த்து ரசிக்கும் கண்கள்
பயனற்றுக் கிடக்கின்றன...
பெய்த மழையில்
பெருகிய ஓடையில்
வாடைக்காற்றின் வானொலியில்
இந்தப் பேதையின்
கண்ணீரும் கரைகின்றது...
 
எனது நம்பிக்கைத் திசைகளில்
பூத்திருந்த மலர்களெல்லாம்
பூவிதழ் சுருங்கி மடிகிறது....
நினைவுகளில் உலரும்
உயிர்க்கனவுகளை
ஈரப்படுத்த இப்போது
கண்ணீரால் மட்டுமே
மொழிபெயர்க்கப்படுகிறது....
இந்தத் திசையெங்கும்
ஏகமாய் பறந்து கொண்டிருப்பவை
உனக்காக வரையப்பட்ட
எனது
காகிதச் சிறகுகள்...
சிறகுகளை சுற்றி
பறந்து கொண்டிருப்பதோ
பருந்துகளின் பரிவாரங்கள்...
என் விழிகளில்
முட்டி நிற்கும்
கண்ணீர் ஊடகத்தின் வழியே
அழகிய வெண்புறாவைத் தூதுவிட்டால்
பருந்துக்கு முத்தமிட்டு பரவசமடைகின்றாய்....
உலகம் அறியாது
உள்ளத்தினுள் திணிக்கப்பட்ட
ஒப்பந்தத்திற்குக் கீழே
மிதிபட்டுத் துடிக்கும்
உண்மையின் ஓலம்...!
எனது கரைகளுக்கே
எட்டாத போது
உனது கரைகளைத்
தொட்டாவிடும்...??
நாளைய பொழுதில்
எனது வரிகள்
இங்கு சாட்சியாய் நிற்கும்!
அந்தப் பிரபஞ்ச வெளியில்
உன்னைத் தழுவி
என்னை ஆசுவாசப்படுத்த
எனது சிறைகளை
உடைத்தெறிந்து
எனது சிறகுகளை
தயார்படுத்துவேன்....
அதுவரை உறையாமல்
இரத்தமாகவே இரு.....!!

 
 

நானுமோர் அகதியாய்.....


கோடைக்கும் குளிருக்கும் ஏற்றதாய்
வாழ்வை ரசிக்கும் உலகில்
குளிர் காலத்துச் சலனமேதுமில்லை
என்னிடம்...!
குளிருக்குப் பயந்து
தூரதேசம் போன சூரியனின்
துயில் கண்டே தூக்கணாங்குருவிக்கும்
தாகமெடுக்கிறது!
ஞாயிறோ, திங்களோ-எல்லாமே
ஒன்றாகிப் போனதால்
எதையும் உள்ளிருத்திப் பார்க்கவில்லை
நானும்..!
பார்க்குமிடமெல்லாம்
பகலவன் ஒளி பரவ - என்
துயில் மட்டும் எப்போதும்
கலைந்து எழுவதில்லை!
பனிபோர்த்தி நின்ற மரங்களின்
தேகத்தில் மீண்டும்
பூக்களின் வாசம் பிறக்கும்!
மரங்களும், செடிகளும்
நிலமும், காற்றும் கூட
கோடையில் வளர்ந்து
குளிரினில் தழுவும்!
கோடைக்கும், குளிருக்கும்
அர்த்தம் ஏதுமில்லை
என்னிடத்தில்...!
கோடையும் குளிருமாய்
வாழ்வு கிழிபட
நெஞ்சுக்கூட்டினில்
அடைகாத்த கனவுமுட்டைகள்
கூழாகி உடையும்
கொஞ்சம் கொஞ்சமாக....
கோடையில் துயருற்று
குளிரில் ஆதரவற்று
இப்போது நானுமோர்
அகதியாய்.......

Monday, August 13, 2012

கண்ணீரின் கவித்தூறல்கள்....

சொல்லின் முள்ளினில்
தாவர முள்ளின்
வலிமையையும் தாண்டிய வலி!
இதயத்தினுள் இறங்கிய - உன்
சொற்கொடுக்கை
கண்டுவிட்டுப் பயந்தோடுகிறது

குளவி!

நோக்கமின்றி
பயணிக்கும் திசையில்
பாதை பிரிந்தால்
நெஞ்சுக்குள் ஏற்படும்
கலவரம் போல் - உன்
தற்காலப் பிரிவினில்
என் பொற்காலம்
பொழிவிழந்து கலங்குகிறது!

மனக்கண்ணில்

அந்தக் காட்சிகள் கரைய
என் காலத்திரையோ
புகைபடிந்த சுவராய்
பூச்சற்று நிற்கிறது!

கால்கள் மண்ணில் புதைய

நீ நடந்த அதே
கடற்கரையில் நானும் நடக்கிறேன்
மிச்சப்பட்டுக் கிடக்கும் - உன்
பாதச்சுவட்டைத் தேடியபடி....


காட்சிச் சதுரத்திற்குள்
நீ - நான்
மட்டுமல்ல!
எல்லோரும் வந்து போகின்றனர்!
ஆனால்
உன் மௌனம் மட்டுமே
அங்கு பெரிதாக விமர்சிக்கப்படுகிறது!

அவசரத்தில் அள்ளித்தெளிக்கும்

வார்த்தைகளையும்
நழுவி விழும் உண்மைகளையும்
பொறுமையாக
என் கண்ணீரில் மாலையாய்த்
தொடுக்கத் தயாராகின்றேன்...!


இலையைத் தென்றல்
அசைப்பது போல்
மலரைச் சூரியன்
மலர்விப்பது போல்
என் கண்ணீரின்
கவித்தூறல்கள் உன்னைக்
கொஞ்சம் அசைக்காதா...??

உரிமையும், புரிதலும் உன்னிடத்தில் ....

நீரூற்றாய் இதயம் பொங்கி எழ
பூங்காற்றாய் உணர்வுகள் உயிர்ப்பெற
பற்றற்ற மோகங்கள் பண்பாட
மற்றுமொரு வார்த்தை சொல்ல வழியின்றி
சட்டென்று பேசிய உன் காதல்மொழி கண்டு
கட்டவிழ்ந்த தென்றலாய் தடுமாருகின்றேன்
மொட்டவிழ்ந்த மலராய் இதயம் மலர
பொட்டொன்று வைத்து பூரிக்கின்றேன்....

நொய்யலாற்றின் ஓரத்தினில் - நீ
தந்த நிகழ்வுகளை சுமந்தபடி
நொடிக்கொருதரம் உன் நினைவோடு
போரிட்டே புகையாகின்றேன்...!

இதயமென்னும் மேடையில் - என்
கவிதைகளை செதுக்கிவைக்க
தமிழ் முழங்கும் மேடையில் - அதை
பொழியச் சொல்லி விளிக்கின்றாய்..!
பாடிய பாட்டின் பொருளெல்லாம்
உனைச் சார்ந்தே இருந்திருக்க
பாவலரும் ஏவலரும் சூழ்ந்திருக்கும்
சபைதனிலே பாடத்தான் வேண்டுமோ...?

போட்டி-பொறாமை, வஞ்சம்-சூழ்ச்சி
அறியாத பெண்மைக்கு அறியவைத்து
பாசம் - வேசம் உள்ளிருக்கும்
பேதத்தை உணர்த்திய பெருந்தகையே....

கணக்குகள் போட்டே வாழ்க்கை
வழக்காடிக் கொண்டிருக்கிறது!
சரியான விடையை கணக்கிடாமல்
உரிமையும் பிழையாகி நிற்கின்றது...!

உரிமையும், புரிதலும் உன்னிடத்தில்
இருப்பதினால் - என் தெளிதலும்
தீர்க்கமாகி உன் பின்னே மௌனமாய்
பயணிக்க பழகிக்கொண்டிருக்கிறது.....

நினைவாலயம்.....

அன்பென்னும் ஆயுதம்
நுட்பத்திலும் நுட்பமானது
அன்பென்ற விதையை
இருவரும்
தூவிக்கொண்டோம்..- செடி

துளிர்த்து வளர்ந்தது
நாளுமாய்...
உன்னை நேசித்தவள்
உலகையே நேசிக்கலானேன்
அன்பே அனைத்துமாய் நின்றது...
அன்பே வேருமாகி
அன்பே விருட்சமுமாகி...
நமது அன்பென்னும் ஆலயம்
படர்ந்தன எல்லையில்லாமல்....
நிலைகொள்ளாமல் வீசுகின்ற
காற்றினைப் போல்
அங்குமிங்குமாய் அலைக்கழிந்த நான்
உன் அன்பினால்
உன்னைச் சுற்றியே பனியானேன்..
என் இமைகளின் துடிப்பிலும்
உன் பெயர் அன்பாய் ஒலிப்பதால்
வார்த்தைகள் இல்லா கவிகளையே
வடிவமைக்கின்றேன்....
உன் அன்பான அசைவுகளில்
என் ஆத்மாவும் அசைவதால்-என்
சீவனின் அலைகள்
உன் பாதங்களைத் தொட்டே
பயணிக்கின்றன....
அன்பின் வழியில்
விருட்சமளவு உன்னைப் புரிந்திருந்தாலும்
என் புரிதலுக்கு அப்பால் அல்லவா!
நீ இருந்தாய்! நீயொரு மர்மதேசம்!
இந்த இரகசியமே - இன்றும்
நம் காதலைக் காத்து வருகிறது!
தண்ணீராய் நின்றவனே...
என் செந்நீரில் கலந்தவன் நீ!
இந்த இரத்தத்தின் இவ்வுறவு - ஒரு
அன்பின் - காதலின்
நினைவாலயமாய்த் திகழட்டும்...

உயில் ஒன்று என்னவனிற்கு.....

உயிரில் கலந்த என்னவனிற்கு
உயில் ஒன்று எழுதுகிறேன்
துயில் கொள்ளும் முன்பு - இந்த
மயில் சொல்லும் வார்த்தைகளை
வாசித்து வசப்படு...!


கண்ணிற்குத் தெரியும்
பூக்கள் அல்ல நீ.....
காய்த்துத் தொங்கும்
கனியல்ல நீ....
மாறாக
மண்ணுக்குள் நெளிந்தோடும்
வேர்களல்லவா நீ..!!

பட்டாடை உடுத்தி பகட்டு பேசும்
பெண் பித்தனல்ல நீ.....
எளிய ஆடை அணிந்து
ஏற்றமிகு செயல் செய்யும்
செயல் வீரனல்லவா நீ..!!

செய்யும் காரிய காரணங்களை
கருத்தாய் என்னோடு பகிர்வது
உன் பெருமையென்றால்
உனக்கு மட்டும் சேவகம் செய்து
படைத்தளபதியாய்
இருப்பதில் எனக்கும் பெருமையே....

என் நெஞ்சோடு உனை
புதைத்து வைத்திருக்கிறேன்...
நீ பத்திரமாய் இருக்கிறாய்!
என் எண்ணங்களோ
அலைந்து திரிகிறது
உன் பின்னால்....

ஆதவனின் முகங்கண்டு
அடங்கிப்போகும் வெண்மதியாய்
அம்புலியைக் கண்டு மலரும் அல்லியாய்
மாறிக்கொண்டேயிருக்கின்றேன்....

என் இதயத்தை உடைத்து
வெளியேறிச் செல்ல
உன்னால் ஒரு போதும்
இயலாது....




மனதில் அல்ல மாயவனே!
ரத்தத்தில் கலந்து
உடம்பு முழுக்க
ஓட
வைத்திருக்கிறேன்
என் காதலை....


அது எப்போதும்
உன்னை காக்கும்
என்ற எண்ணத்தோடு
காத்திருக்கின்றேன்
உன் காதலுக்காய்....

பொய் ஒன்று சொல்கின்றேன்....

விடியலில் வரும்
கதிரவனைக் கண்டு
நட்சத்திரங்கள் வேண்டுமானால்
காணாமற் போகலாம்!
ஆனால்

என் விடியலின்
விடிவெள்ளியே நீதானே...
ஒளியினில்
இருள் மறைவது போல்
உன்
ஒலியினில்
என்
சோகம் மறைந்தே போகலாம்...

ஓடி வரும் நதி
எதிரில் இருக்கும்
தடைகளைக் கடந்து
இளைப்பாறாமல் கடலை நோக்கி
பயணிப்பது போல்
என் இளைப்பாரற்ற
பயணமும்
உன்னை நோக்கியே இருக்கும்..
எப்பொழுதும்
எனது எல்லாக் காரியங்களும்
நீ இல்லாத போது
நிகழ்ந்து விடுவதில்லை...
ஒவ்வொரு முறையும்
முயன்றுதான் பார்க்கிறேன் ...
இங்கு
ஆணிவேரே அறுந்துபட்டால்
மரம்
எங்கிருந்து தழைக்கும்?
நீயே
இல்லையென்றால்
நான்
எங்கிருந்து வாழ்வது?
நான் உன்னிடம்
துளையில்லாத மூங்கிலாக
இருக்க விரும்பவில்லை
உன் உயிரின் ஒலியில்
இனிய இசையைத் தரும்
புல்லாங்குழலாய்
இருக்கவே விரும்புகிறேன்...
உன்னைக் காணும் போதெல்லாம்
மௌனத்தில்
என் மனம் பேசுவதை
நீ
அறியவில்லையா? 
உயிருக்கும் உடலுக்கும்
உள்ள தொடர்புதான்
உனக்கும் எனக்குமான தொடர்பு!
எனது கவிதைகள்
அறியும் என் நேசம் - ஆனால்
எப்போதும் என்னை
அறிந்ததில்லை நீ...!!
இருப்பினும்
இன்னும் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
நான்தான் உன் உலகம் என்று....!!