Friday, September 28, 2012

அன்பெனும் வரம்....

இங்கு யாவரும்
இடம் பெயர மட்டுமே
பொழுதுகள் புலர்கின்றன!
இயற்கையை ரசிக்க இங்கு
இமைகளுக்கு நேரமில்லை!
இதயம் கூட இயந்திரமாய்
இயங்குவதால் பயத்தோடே
வாழ்க்கையும் பயணமாகிறது...
வானத்து ஓவியங்களை ரசிக்க
நாட்காட்டியில் நாள் பார்க்கபடுகிறது...
தாயின் மடிதேடும் குழந்தைக்கும்
குறிக்கப்படுகிறது ஞாயிற்றுக்கிழமை!
வாரநாட்களில் அவர்கள் வளர்வதற்கு
விலை பேசப்படுகிறார்கள்....

இருவர் ஒருவராகும்
இரவு உறவும் இறுகிப்போக
இதய உறவுகளில் கருமை படர்கிறது...
விரல் அழுக்கை அகற்ற
நகத்தை வெட்டி எறிவதுபோல்
விவாகப் பிணைப்புகள்
எப்போது வேண்டுமானாலும்
வெட்டி எறியப்படுகின்றது..
கூட்டுக் குடும்பங்கள்
ஏட்டுச்சுரைக்காயாய்த் தெரிவதால்
பண்பாடுகள் அனைத்தும்
மண்ணிற்குள் புதைந்து கிடக்கிறது...
குறை கூறுவதே இங்கு
நிறையாய் ஊறிக்கிடக்கிறது...
அவசியத் தேவைக்கு மட்டுமே
அன்பு அலைமோதுகிறது...
காட்சிகள் எல்லாம் பிழையாய்த் தெரிவதால்
பட்சிகள் கூட இங்கு பாம்பாய்த் தெரிகின்றது...
உருவாகும் உயிர்களனைத்தும்
உருகித்தவமிருப்பதோ
அன்பெனும் வரத்தைப் பெறுதற்கே...

Thursday, September 20, 2012

நம் பயணம்.....


  
    நீ   
    ஒவ்வொருமுறையும்
    ஊருக்குப் பயணிக்கும்போதும்
    என்னோடு சேர்ந்து
    நம் தலையணையும்
    அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறது
    

    சுவடு படிந்த நிலையில்
    நீ அமர்ந்த இருக்கை
    தூசு படிந்த நிலையில்
    நீ உபயோகித்த கணிணி
    எண்ணெய் இருந்தும்
    ஏற்றப்படாத காமாட்சி விளக்கு
    ஏக்கத்தில் நான் - என
    அத்தனையும் ஒப்புவிக்கின்றன
    நீ ஊருக்குச் சென்றதை!
    
    வாசல் வழியே வந்து
    வசவோடு எட்டிப்பார்க்கும் கதிரவனும்
    முற்றத்துக் கூடத்தில் வந்து
    முனங்கியபடியே நகரும் நிலவும்
    மாலை நேரத்திலும் மலராமல்
    இதழ்களை அடக்கியிருக்கும் அல்லியும்
    உன் மேல் நான் கொண்ட காதலை
    நியாயப்படுத்தி - நீ
   இல்லாமலிருப்பதற்காக
    தர்ணா நடத்திப் பார்க்கின்றன!


     இரவு நேர
    பயணத்தின் போது
    நீ
    உரையாடும் அந்த
    கைபேசிக் காதல் மொழிகளை
    ஆராய அடுத்த அகராதியை
    நான்
    தேடிக்கொண்டிருப்பேன்
    விடியும்வரை விடாமல்
    நீ
    சேருமிடம் வந்தபின்புதான்
    நானும் உணர்வேன்
    உன்
    பயணம் என்னோடுதான் என்பதை...
    
    ஆன போதும்
    எத்தனை உறவுகள்
    எங்கெல்லாமோ பயணிக்கின்றனர்
    அத்தனைக்கும் கலங்காத மனசு
    உன் பயணத்தில் மட்டும்
    கொஞ்சம் ஆடித்தான் போகிறது!
    நீ
    பயணிக்கும் திசையெல்லாம்
    என்
    மனசும் உன்னோடு பயணிக்க
    நம்
    பயணத்தோடு காலமும் நமக்கு
    சுருதி சேர்த்து சுகமாக்குகின்றது...!!
    

Saturday, September 15, 2012

அப்பாவிற்கு ஓர் இரங்கற்பா

கசப்பான நினைவுகளைக்
காலங்கள் கரைத்துவிடலாம்
ஆனால்
பாசத்தாலான நினைவுகளை
எப்படி மறப்பது?

நாழிகைகள் கரைவதில்
துயரங்கள் கரைய மறுக்கின்றன...
சோகநிகழ்வுகள் பொதிசுமந்த
பாரமாய் நெஞ்சில் நிறைந்துள்ளன...

எப்படியாவது ஏதாவது ஒருவிதத்தில்
அப்பாவின் நினைவுகள்
அழுத்தமாய் வந்து ஒட்டிக்கொள்கின்றன!

புகைப்படத்தில் மட்டுமல்ல எப்போதும்
நேரிலும் சிரித்திருக்கும் அப்பா
மரணத்தின் வாசலிலும் சிரித்திருந்ததை
மனம் மறக்க மறுக்கிறது..

கம்பீரமாய் மட்டுமல்ல மென்மையாய்
அழைக்கும்போதும்
அப்பாவின் குரல் ஓங்கியே இருக்கும்..

அப்பாவிற்கிருந்த மரியாதையை
வந்துசேர்ந்த எண்ணிலடங்கா
மலர் வளையங்கள் சொல்லியழுதன
அவர் வாழ்ந்த மாசற்ற வாழ்க்கையை...

மாலை வரை வந்து சேர்ந்த மாலைகளில்
அப்பாவின் நட்பின் பலமறிந்தோம்...
வந்திருந்தோர் மட்டும் கரையவில்லை
வானமும் கரைந்து அழுதது...

விருந்தோம்பலில் அப்பாவிற்கு நிகர் அப்பாவே!
அப்பாவின் இதயத்துடிப்பு ஒலியிழந்தாலும்
அவரின் கைக்கடிகாரம் ஒலியிழக்கவில்லை..!!

உரிமையானோருக்கு மட்டுமல்ல
உறவானோருக்கும் உயிரான அப்பா - இன்று
எல்லோர் உயிரையும்  உருகச்செய்து சென்று விட்டார்....

ஒவ்வொரு மேடைப்பேச்சுக்கும் முன்பும்
அப்பாவின் முன்புதான் அரங்கேற்றம் - இங்கு
அவர் மூச்சில்லாதபோது என் பேச்சும் மௌனமாய்...

எப்போதும் அப்பாவால் பூத்துக்குலுங்கிய
எங்களது நந்தவனம் - இன்று
பாலையாய் அலைமோதுகிறது...!!

என் எழுத்துக்களை நேசித்த
என் முதல் வாசகன் என் அப்பா - இன்று
யோசித்து எழுதினாலும் எழுத்துச்சிதறல்களில்
அப்பாவே ஐக்கியமாகின்றார்...

மரணத்தின் பிடியில் அப்பா பிடித்திருந்த
கட்டிலின் விளிம்புகளில் அவரது கைரேகைகள்!
தடவிப்பார்த்து தவிக்கையில் உள்ளிருந்த
உயிர் நழுவி விழுகிறது...

மீளாத்துயிலில் அப்பா சென்றுவிட்டு
ஆறாத்துயரத்தில் எம்மை ஆக்கிவிட்டார்
காலத்தின் எல்லையை கணக்கிட்டிருந்த
அப்பாவும் ஓர் தீர்க்கதரிசியே....

ஏனையோருக்கும் அப்பாவைப்
பிடித்திருந்ததால் என்னவோ
எமனிற்கும் பிடித்துவிட்டது....

வந்தது அப்பாவிற்கு இறப்பென்றால்
வந்திருப்பது எங்களுக்கு பேரிழப்பு
கடவுளிற்கும் கண்ணீர் வருமென்றால்
அது அப்பாவின் விதி முடிவால்...Saturday, September 1, 2012

என் இதய ஒசை கவிதையாய்...

கணநேரம்தான் வாழ்க்கை
அதற்குள்
காயங்கள் மட்டுமே ஆயிரம்
தினம் தினம்
சிலுவை சுமந்தாலும்
எனக்குள் நானே உயிர்தெழுந்து
பீனிக்ஸ் பறவையாகின்றேன்!
சுமைகள் தாங்கியே
சுகவீனமாகுவதால்
சிறிய இளைப்பாறலுக்கு
இடம் தேடுகின்றேன்....
எனக்கான பாகம் பிரிக்கப்படுகிறது
பாலையும், நெருப்புமாய்.....!!
சுண்ணாம்பிற்கும், வெண்ணெய்க்கும்
வேறுபாடு தெரியும்போது
நிசத்தின் வெளிச்சம்
வலியாய்க் கண்களைத் தாக்குகிறது!
 கண்ணீரை
ஊராருக்குக் காட்ட - நான்
முயற்சிப்பதில்லை!
அது
இதயத்தில் வடிவதை யாரும்
அறிந்து கொள்ள
ஆசைப்பட்டதுமில்லை!
கண்ணீரற்ற கண்களின்
வடுக்களை சாயம்பூசி
மறைத்து சிரித்திடுவேன்!
தேங்கி அழுவதைவிட
நகர்ந்து வாழ்வது நல்லதென
தீர்மானித்து திங்காளானேன்!
 வலி நிறைந்த நினைவுகள்
நீக்கமற நிறைந்திருந்தாலும்
சலனத்திற்கு இடமளிப்பதில்லை!
பறக்கும் அளவிற்கான
ஆகாயப் பரப்பைத் தீர்மானிக்கும்
ஓர் பறவையாய்....
வீசும் திசையைத் தானே நிர்ணயிக்கும்
ஓர் காற்றாய்....
இந்தப் பிரபஞ்சத்தில் வலம் வருவேன்!
சப்தமற்ற சலங்கையாய் - என்
மௌனம் ஒலிக்க
இசையை எழுப்பும் - என்
இதய ஓசை கவிதையாய்.......