Tuesday, November 29, 2011

உயிரோட்டமாய் ஓர் கடிதம்...

http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/s320x320/313561_248546288540565_100001555869268_672078_458079142_n.jpg
கதவோரம் கதவாய்
நின்று கொண்டிருக்கும் - என்
இனிய செல்லத்திற்கு....

சேகரித்து வைக்கின்றேன்
கனவுகளை பொக்கிசமாக....
இறந்து போன நிமிடங்களை
இயக்கிப் பார்க்கும்
இதயத்து நினைவுகள்....
இரவின் பிடியினில்
இலவசமாய் தாரை வார்க்கும்
பனித்துளிகளின் மத்தியில்
உனக்கு
உயிரோட்டமாய் ஓர் கடிதம்...

உடல் நலம் எப்படி? - இங்கு
அது நல்லபடி.....
மன நலம் எப்படி? - இங்கு
அது உன் வசப்படி....
விரைவில் உன்னிடம்
நான்....
வந்தபின் நம் செயல்பாடுகள்
இப்படியே.....

காற்றுக்குள் ரகசியமாய்
காதல்கதை பேசிடுவோம்
கவலைகளைத் தொலைத்துவிட்டு
கனவுகளை விதைத்திடுவோம்
பொன்தமிழில் பாடிடுவோம்
பூமியெங்கும் வலம் வருவோம்

வரவொன்றும் செலவொன்றும்
வகை வகையா செய்திடுவோம்
வயசோட கனவுகளை
வரமாக செதுக்கிடுவோம்
சுதி வேறு லயம் வேறாய்
சுவரமாக இணைந்திடுவோம்...

மவுனத்தின் மயக்கத்தை
மனசாலே போக்கிடுவோம்
பருவத்தின் தோட்டத்திலே
பல கலைகள் விளைச்சிடுவோம்
வெட்கங்கள் சூழ்ந்தாலும்
வேலியதை கலைந்திடுவோம்

உருவத்தின் நிழல்களை
உயிராக வளர்த்திடுவோம்
உலகத்தின் பார்வையினில்
உணர்வுகளை செதுக்கிடுவோம்
பழங்காதல் பெருமைகளில்
புதுவாழ்வைக் கண்டிடுவோம்


பொழுது விடியவேண்டும்....

http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/388516_248499145211946_100001555869268_671744_2134297394_n.jpg

கூரையிலிருந்து
விழும் நீரை சேமிக்க
பல வடிவப் பாத்திரங்களை
பாதுகாப்பாய் வைக்கின்றேன்!
விழுந்த நீர்
உடைசல் வழியே
வீட்டிற்குள் ஓர்
ஓடம் அமைக்கிறது..!

ஒட்டுத் துணியும்
நனைந்து கொண்டிருக்க
விட்டுப்போன
நெருப்பை மூட்ட முயற்சிக்க
நனைந்த தீக்குச்சி
நக்கலாய் நகைக்கிறது!

ஈரமான மண் அடுப்பினுள்
குளிருக்கு பயந்து போய்
ஒண்டியிருக்கும் பூனைக்குட்டியை
புறப்பட வைக்க
மனம் இசையவில்லை!
விரிந்த சுவர் வீரியமாய்
பதம் பார்ப்பதற்குள்
வீட்டை சரி செய்ய வேண்டும்...

காலமெல்லாம் காதல் செய்து
வாழ்ந்து பார்க்க கரம் பிடித்து
கூட்டி வந்தவனை
காலன் கூட்டிச்சென்றுவிட்டான்
காலராவினில்...
காரணத்தைக் கேட்டால்
சுற்றுப்புறம் தூய்மையில்லை
வந்தது பதில் வலுவாய்...

வக்கத்த எங்களைக் காட்டி
ஓட்டுக்கேட்ட சீமான்கள்
எங்களையும் கவனிக்கவில்லை
எங்கள் சுற்றுப்புறத்தையும்
சுற்றிப்பார்க்கவில்லை
அவர்கள்
சுற்றுவது எல்லாமே
அயல் தேசமே....

உள்ளூரில் உப்பிற்குக் கூட
வழியில்லாமல்
நாங்கள் பிழைப்பு நடத்துகிறோம்...
பொறுப்பாய் வாழ்ந்த
மச்சான்
பொருமையின்றி
பூமியிலே எனைத்தவிக்கவிட்டு
பரலோகம் சென்றுவிட்டான்

நாளெல்லாம் வாழ்வது
நரகத்தில் என்றால்
நனைந்த பாயின்
ஓரங்களில்
நாயகனின் வாசமோ நளினமாய்...

ஆசையாய்ப் பிறந்த மகனையும்
மச்சானின் மானத்தையும்
அணைத்துக் கொண்டு
கிடக்கின்றேன்...
அடுத்த ஈரம் கண்களின்
வழியே மகனை நனைப்பதற்குள்
பொழுது விடியவேண்டும்
எங்களுக்கும் சேர்த்து.....

Friday, November 25, 2011

இன்னொரு பிறவியும் வேண்டும்......

http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/386738_246304122098115_100001555869268_666884_2085412291_n.jpg


என் காலத்திற்குரியவனே....
நீ
இமை விரித்துப் பார்க்கையிலே
என்னிதயம் மட்டுமல்ல
என் வாழ்வும் ஒளி பெறுகிறது...
ஆனால்
என் பார்வையோ பழுதாகிறது...
உன்
வருகைக்குப் பின்னேதான்
நந்தவனங்களாய்
என் காலங்கள்
பூத்துக்குலுங்கின...
நொந்த இதயமோ
துளிர் விட்டு
தூறலாய் இசைத்தன....
நீ
தலை நிமிர்ந்து நடக்கையில்
உன் பாதையின் நிழலாய்
தலை குனிந்தே தொடர்கின்றேன்
நீ
அடி எடுத்து உள்ளே நுழைந்தாய்
என் இல்லமும் இதயமும்
அகலிகைகளாய்
சாப விமோசனம் பெற்றன....
உனக்கு
பௌர்ணமி இரவுகள்
இன்பத்தை இழைத்தாலும்
எனக்கு
உன் பொன் தமிழ் மட்டுமே
எழுச்சியை அளிக்கின்றது...
எத்தனையோ
சிந்தனைகளில் - நீ
ஆழ்ந்திருந்தாலும்
இலைமறை காயாக
உன் புன்முறுவலை
எனக்கு விட்டுச்செல்வாயே
அதை மீண்டும் வாங்குவதற்கு
இன்னொரு பிறவியும்
வேண்டுமென்று - உன்
ஆண்டவனை அணுகுகின்றேன்...
உன்
வெயில்காலப் பார்வையில்
பயந்து ஒதுங்கி பயணித்தாலும்
உன்
குளிர்கால மவுனத்தில்
குறைந்தே போகின்றேன்....
ஆயினும்
எந்த நிலையிலும்
என்னோடு நீயிருந்தால்
என் காலங்கள்
வசந்தமாகும்...
என் உணர்வுகள்
உயிர்ப்பெறும்!

Sunday, November 20, 2011

உன் கவியே ஆறுதலய்யா......

http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/304122_243208315741029_100001555869268_658261_1555613096_n.jpg

வாக்கு சொல்லி வன்மையாய் வம்பளந்தவரே
போக்கு காட்டி பொழப்புத்தனம் செய்தவரே
இட்டுக் கட்டிப் பாடுற புள்ளையை
சட்டென விட்டுப் போறதென்னவோ?

பட்டணத்து வண்டியிலே பவுசாகப் போறவரே
விரைவு வண்டி நீயேறி விரைவாகப் போகையிலே
குருத்தான எம் மனசும், சிறுத்தான என்னுடம்பும்
கருத்தேதான் போகுமய்யா; கரையேறி வாருமய்யா

கரை வேட்டி கட்டிக்கிட்டு கரம் தூக்கி
கடவுளை நீ கும்பிடுகையில்
கருப்பண சாமியா கண்முன்னே
காட்சியா நிற்குறீரே......!!

ஒத்தையிலே நானிருந்தாலும்
சத்தான உம் பேச்சும் சங்கடமில்லாமலே
முத்தாக முறையாக இனிக்குமய்யா...
மத்ததெல்லாம் மறந்தேதான் போச்சுதய்யா....

சொப்பனத்திலே நான் மிதந்தேன்
சொந்தமாக உனை நினைச்சு
கப்பங்கட்டும் அடிமை போல
கருக்களிலும் காத்திருப்பேன்...

ஊட்டி மலைச் சாரலிலே
பாட்டுக் கட்டி இருந்திருப்பேன்
அலையடிக்கும் கடல் போல
அடிமனசில் தவிச்சிருப்பேன்

உம் பேச்சு கேட்காமல்
ஒரு நாழி இருந்ததில்லை!
மௌனத்தில் நீ போய் உட்கார்ந்தா
மரணத்தோட பேச்சு வார்த்தை நடத்திருவேன்....

மூவாறு நாளைக் கடத்திட
வழியேதும் தெரியவில்லை....
மூணு ஜென்மம் கடந்தது போல்
முழியும்தான் பிதுங்குதய்யா...

பொட்டச்சியின் பொலம்பலில்
பொட்டல் வெளியும் நடுங்குது
சொந்தமென்று யாருமில்லை - என்
சொர்க்க புரியும் நீதானய்யா...!

கால நதியின் கார்மேகமே - என்
கண்ணீரின் அருமருந்தே
கரம் பிடித்து நீ சொன்ன - உன்
கவியே என் ஆறுதலய்யா...!

தாலி ஒண்ணு கட்டிக்கிட்டு
தாரமாய் உன்னோட வாரேனய்யா
தங்கமகன் நீ இல்லேனாலும்
தரம் கெட்டுப் போகமாட்டேனய்யா.....

Wednesday, November 16, 2011

உனக்காய் ஒரு கவிதை

http://img.phombo.com/img1/photocombo/6644/cache/Art_of_Painting__Chinese_Girl_Illustration_wallpapers_1280_x_960_pictures-4.jpg_romance_girl_bi41162_wallpaper_display.jpg

வீரியமாய் பெய்யும் மழைக்கு
ஒரு கவிதை
மெலிதாய் விழும் தூரலுக்கு
ஒரு கவிதை
சில்லென்று வீசும் தென்றலுக்கு
ஒரு கவிதை
மெல்லமாய் எட்டிப்பார்க்கும் கதிரவனிற்கு
ஒரு கவிதை
வெட்கமாய் மறைந்து செல்லும் நிலவிற்கு
ஒரு கவிதை
மழையை சபித்துப் பறக்கும் பட்சிக்கு
ஒரு கவிதை
பரந்து கிடக்கும் இலைச்சருகுகளுக்கு
ஒரு கவிதை
மழை நீரில் விளையாடும் மழலைக்கு
ஒரு கவிதை
என்னை அறிமுகம் செய்த அப்பா அம்மாவிற்கு
ஒரு கவிதை
இத்தனையும் கொடுத்த பரம்பொருளுக்கு
ஒரு கவிதை
பார்த்து ரசிக்கும் பலவற்றுக்கு
ஒரு கவிதை
தினமும் இப்படித்தான்
எழுத எத்தணித்து அமர்கின்றேன்
காகிதத்தில் நீ...
அத்தனையும் மறந்தபடி
ஆரம்பிக்கின்றேன் மறுபடியும்
உனக்கான கவிதையை!!