Tuesday, May 24, 2011

தவிப்புகள் தொடர வேண்டாமே....

காரிருளாய் இருந்த வாழ்வில்
கதிராய் வந்தவனே...
மலருக்குள் சிக்கிய
வண்ணத்துப் பூச்சியாய்
எனக்குள் சிக்கிய

கவிதை நீ...

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTq0hdwm7-PVlyuwTwdXoCGJlMtLOesWb4lJ5q5nEEGMBVx6Ay7ig
உன்னருகில் நிற்கும் போதெல்லாம்
இடம் மாறத்துடிக்கும் இதயம்
உன் மலராத விழிகள் கண்டு
இடிந்தேதான் போகிறது....
பழகிய காலங்கள் எல்லாம்
பார்வையில் மேய்ந்து செல்கின்றன...

எங்கே என் மனம்?
இதயத்தின் இரைச்சல்
மென்மையாக
உருகி விழிவழியே
வெளிவந்தபடியே..
ஈரத்தின் தளும்பல்
கன்னங்களில் கண்ணீராய்..

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcS7aRcjz-kGgmLwYds7J1vhdpkK7eYuZzZGOorux3KbScsf-QS8
உன் அழைப்பை
இன்று, நாளை - என
எதிர்பார்த்து எதிர்பார்த்து
என் அலைபேசியும்
அடங்கிவிட்டது!
உன்னைத்தவிர
எந்த அழைப்பையும்
ஏற்க அதுவும் மறுக்கிறது
என்னைப்போல்!

எதிர்பார்ப்பற்ற
இதயத்தில்
எண்ண அறுவடைகள்
ஏகாந்தமாய்...ஏகமாய்
விளைச்சலின் காரணம்
நீயல்லவா..!!

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSWH8nqXQawPRo4DfrhgCrFa8COb0HvPnhKtnYGpKCQSpGtlVSV
எழுதும் எழுத்துக்களெல்லாம்
உன்னைச் சார்ந்தே இருப்பதினால்
என் பிறப்பின் ரகசியமானாய் நீ..
தேடல்களின் நாடல்கள்
தொடரட்டும்
தவிப்புகள் தொடர வேண்டாமே....
தயவுசெய்து தொடர்ந்துவிடு
உன் பார்வைப் பனிக்கட்டிகள்
பரிவோடு படட்டும் - என்
ஜீவ தாகத்தைக் கொஞ்சமேனும்
தணிக்கட்டும்.....

Monday, May 9, 2011

நீயே என் சந்நிதி....

அந்தி மறைந்து
இருள் சூழ்ந்த தருணம்
இயல்பாய் உன் ஞாபகக்கீற்றுகள்
என் இமைகளுக்குள் தென்றலாய்...

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRUz3vmiYV_vxLUF_8UJj1SfQ0GeLPTKSsz5Fy2HQVQ_JJ-0s_GTw
நதியின் போக்கை தடுத்து
நிற்கும் மலைப்பாறையாய்
என் போக்கை தடுத்து நிறுத்தியது
உன் போக்கு...!!
என் ஆழ்மனமோ
உன் போக்கில் மட்டுமே பயணித்தது!

உன் கண்கள் பேசிய
காதல் மொழியில் கட்டுண்டு
நான் கிடக்கின்றேன்...
நீயோ எனை பார்த்தபடியே
விலகிச் செல்கின்றாய்....
இன்றாவது காதலைச் சொல்லலாம்
என்றிருந்தேன்...பாழாய்ப்போன
தயக்கம் வந்து என்னை
தனியே நிற்கவைத்துவிட்டது

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRb6fH__U-l86cTk0RXmb_qw6LweeSWpFg79XWWLBPCRR0-waJK
நெருப்பை புகை
மறைப்பது போல் எப்போதும்
என் காதலை
மறைக்க இயலவில்லை!
உன் இணக்கமான பேச்சு
தற்காலிக சந்தோஷமாக
இருந்தே மறைந்து போகின்றன!
கலப்படமற்ற சந்தோஷம் காண
உன் நேசம் ஒன்றே சுகமாகும்!

சொற்களைக் கூட்டினால்
சுலோகம்!
கற்களைக் கழித்தால்
சிற்பம்!
கூட்டலும் கழித்தலும்தானே
காதலின் வலிமை!
சுலோகமும் சிற்பமும்
இணைந்தால் அது
தெய்வத்தின் சந்நிதியாகும்!

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTbwBg4TtPmboYUU78OwxE-Dfqeh2fvoUquSGYewdHdoHqXWneUYw
உன் பெயரும், உன் உருவமுமே
எனக்கு
சுலோகமும், சிற்பமுமாகும்
நீயே என் சந்நிதியாவாய்...

Friday, May 6, 2011

விழியும், இதயமும் நீயானாய்...!

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcReAhphhEBmVEDf_DyTWZ6klvZhzNeSMR9mNt3q6dwraxJ_aF16
தேவனே....
உன் அறிவிப்பை
எடுத்துச் சொல்லும்
பெரும் காற்று - என்
திசையெங்கும் பரவும்
அப்புறம்!!
நீ வருவதை தென்றலைத்தவிர
வேறு யாரால் மென்மையாய்
சொல்லமுடியும்??

பாசாங்கு அற்ற
பச்சை மனிதனாய்
உன்னைப் பார்த்தமுதல்
எனது
இதயத்திற்கும், விழிகளுக்கும்
ஒரு சின்ன சண்டையானது!
யார்
உன்னை முதலில்
தன்வசம் கொள்வதென்று...
மொத்தத்தில்
என் விழியும், இதயமும்
நீயானாய்...!
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQfXJ0IN5vsekPZxioIxcxjXAmItPsZohdnCnaiapqrWrpECHqu-g
புதிதாய்ப் பிறந்த ஆட்டுக்குட்டி
நிற்பதற்கு முன் தடுமாறுவதுபோல்
புதிதாய் பிறந்த காதலில்
நிற்பதற்கும் தடுமாறித்தான்
போகின்றேன்...
தடுமாறும் என்னை உன் கரங்களுக்குள்
எப்பொழுது அடைக்கலம்
அளிப்பாய்?....?


என் இதய இருட்டறையில்
உனக்கான காதலை
விதைத்துள்ளேன்! - உன்
விழி வழியால் என்னை
ஒளிரச்செய்தால்
விதை விருட்சமாகிவிடும்..!

செய்யும் செயல் எதுவாயினும்

அது உனக்கானதாகிவிட்டது!
அதனால்தான் என்னவோ
மற்றவைகளின் மேல்
பற்றற்ற தன்மையே வருகிறது!
என் உலகப்பார்வையின் கீழ்
நீ ஒருவன் மட்டுமே
தேவனாகின்றாய்....!
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQsS0P2HPLkvEMNJn-YP6hq53CMdbbYlbqCTPXgT_ThVLphlHrZ
என் எண்ணத்திற்கென்று
ஏதுமில்லை
எல்லாம் உன் வசமானதால்...
விருப்பு வெறுப்பிற்கு
அப்பாற்பட்டவளானேன்
எல்லாம் உன் பொறுப்பானதால்
என்னில் நீயாய்
உன்னில் நானாய்....
உயிரும், மெய்யும் இணைந்த
காவியமாய்....
என் தமிழ் மொழியாய்...
அழியாக்காதலாய்....
கவிபுனைந்து, காதல் செய்து
இளைப்பாறுவோம்...!!!



Wednesday, May 4, 2011

என் இதயத்தில்...


http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT-dvdw_JE9GPuecbjnmgEch280MG2lzvINTYmvmVlcGAa2oIIG

சாம்பல் நிற இரவு
சோம்பலாய் கண்மூடி
கிடந்தாலும் மனம்
தாயின் அரவணைப்பைத்தேடும்
குழந்தையாய்....
என் ஞாபகக் கல்லறையில்
உன் வண்ண நினைவுகள்
கண்துயில மறுக்கின்றன!
உறக்கமில்லா இரவில்
என் கண்கள் அழுவதை
என்னால் கூட
அறியமுடியவில்லை!
ஆனாலும் ஏனோ கண்ணீர்
கசிந்தபடி....
காதலின் விரல் நகங்கள்
குத்திக் கிழிக்கின்றன
என் இதயத்தில்...
அன்பு காட்டியது குற்றமா?
அன்பு கேட்டது குற்றமா?
இன்னும் புரியவில்லை...
தொலை தூர சுகத்தை
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாற்ற ஏக்கங்களே
மிச்சமாகின்றன!
உள்ளிருக்கும் கவலையுடன்
உன் கவலையும் இப்போது
ஒட்டிக்கொண்டது!
ஒவ்வொரு கணமும்
இறந்த காலம்
நினைத்து நினைத்தே
நிகழ்காலம்
நிஜமிழந்து நிற்கின்றது
எதிர்காலம்
சூனியமாய் சுற்றுகின்றது!
என் மனத் தடாகத்தில்
தொடர்ந்து
உன்னைத்தவிர யாரும்
சங்கமிக்க முடியாது!
உன்னைப் போன்றதொரு
பாதுகாப்பான
சரணாலயம் வேறென்ன
இருக்கிறது எனக்கு?
மேகத்தில் மறைந்திருக்கும்
மழைநீரைப் போல்
எனக்குள்
நிறைந்திருக்கும்
உன்னை
இறக்கிவிடத் துணியவில்லை..!
காலங்கள் இறந்தாலும்
என் காதல்
ஒருபோதும் இறப்பதில்லையடா...!