Saturday, October 13, 2012

காதலின் சிதை.....

தனிமையின் தாழ்வாரத்தில்
உலவுகிறபோதெல்லாம் - என்
உணர்வுகளை இரணமாக்கிய
அந்த ஆனந்த நாயகனை
நினைக்காமலிருக்க முடியவில்லை!
ஆன்மாவைக் காயப்படுத்திவிட்டு
அவசரமாய்ப் பிரிவதில்
அவனிற்கு நிகர் அவனே....
 எண்ணங்களின் நினைவுக்கூட்டிற்குள்
கைகூடாத கனவுகளே கருமையாய்
வியாபித்திருப்பதால்
காலமரத்தில் கண்டவையெல்லாம்
இலையுதிர்க்காலங்களே...! - அவனால்
ஒவ்வொரு தாக்குதலிலும்
ஏற்பட்ட காயங்களை அடுத்தவர்
அறியாமல் அடைகாத்து வருகின்றேன்...!

முற்றிய கதிர்களின் சுமையைத் தாங்காத
நெற்பயிரின் தலை சாய்ந்து நிற்பதுபோல்
அவனாலான சோகங்களின் கனம் தாங்காமல்
சோர்ந்தே சுயமிழக்கின்றேன்...
உள்ளுறுத்தும் ஊமைக்காயங்களை
திரைபோட்டு மறைத்து சிரித்திட
உதடுகளில் புன்னகையின் ஊர்வலத்தை
வீரியமாய் நடத்தி வருகிறேன்...

என்னவனிற்கு மண்ணால் செய்த பொம்மையும்
உணர்ச்சிகளான பெண்மையும் ஒன்றே...
காலம் முழுவதும் உன்னோடு
நானிருப்பேனென்று சுகராகமாய்
வார்த்தை வரம் வழங்கியவன் - இன்று
இடம் மாறி நிறம் மாறிப் போனான்..!
காதல் என்னவனிற்கு கதையானது
எனக்கு அதுவே சிதையானது....!!