Wednesday, March 30, 2011

விழித்துக்கொள் மானிடா!


http://2.bp.blogspot.com/_1-xvEOICRwA/TQT0M0YXpRI/AAAAAAAACzo/vn2ypQq5S6M/s1600/naxalite-rule.jpg


விழித்தெழுந்து விழித்துக்கொள் மானிடா!
பொய்ச்சொல் வீரர்கள்
பொடிநடையாய் வருகின்றனர்....
தேடியதை தருகின்றனராம்.... - நம்
உழைப்பில் வாங்கி நமக்கே....

கூவி கூவி விற்கின்றனர் - நமது
தன்மானத்தை இந்த புண்ணியவான்கள்!
சுயமரியாதை சுவரொட்டி
விளம்பரமாய் சிரிக்கின்றது!
நாளுக்கொன்றாய் நமது உரிமைகள்
நாட்காட்டியாய் கிழிக்கப்படுகிறது!

மனித நேயம் முற்றிலும் மறந்து
மனமற்ற சமுதாயமே மலர்ந்துள்ளது!
பாரதம் இங்கு பங்கு போடப்படுகின்றது...
கேட்கும் திறன் இல்லையென்றாலும்
கேள்வி கேட்க கற்றுக் கொள்ளுவோம்...

பொறுத்தாள்வார் பூமி ஆள்வார் - இங்கு
பொறுத்திருந்தால் பூமியே புதைந்துவிடும்
அகிலத்தில் அநியாயம் ஆட்டம் போடுகிறது!
அடங்கி இருந்தால் அடிவானமும் அழிந்துவிடும்!
அங்கிருக்கும் விண்மீன்களும் விலை பேசப்படும்!
சொல்லிச்சாகும் நானே இதற்கு துணிவாய் நின்று
தரகு பேச தயாராகிவிடுவேன் தயக்கமின்றி...

கள்ளங்களும், கயமைகளும் நிறைந்த - இந்த
உரசியல் கொண்ட அரசியல் நமது
வெள்ளை நிலவையும் விட்டுவைக்காது...!
வேரில் நெருப்பு வைத்தால்
விளைச்சல் எங்கிருந்து வரும்?
என் தேசத்தை சுவைத்துப் பார்க்க
பூவா தலையா போட்டுப் பார்க்கின்றனர்!

தொய்வடைந்த தோழர்களே!
சட்டங்களும், திட்டங்களும் போட்டு
கேலிச்சரித்திரம் பேசும் - இந்த
போலிச் சமுதாயத்தை மாற்றிடுவோம்..!

Thursday, March 24, 2011

விட்டு விட்டுத் தொடர்வதில்....

விட்டு விட்டுத்
தொடர்வதில்
நீயும் என் தந்தையும்
ஒன்றுடா...
என் காதலை
எப்படி விட்டு விட்டு
ஏற்கிறாயோ
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcS-f6elC2ZK0fNbTtoYX-2k9hW2sYL4yS3BZKqBaT59exZil9zD
அப்படியே
சிறுமியாய் இருக்கும்
காலச் சூழ்நிலையில்
தந்தையின் கைவிரல்பிடித்து
நடக்கையில்
எதிர்திசையில் வரும்
வணக்கங்களுக்கு
பதில் வணக்கம் சொல்வதிலேயே
என் தந்தையின் கைவிரல்கள்
எனக்கு கிடைக்காமலேயே
போய்விடும்....
உன் காதலும் அப்படித்தானோ...

Wednesday, March 23, 2011

வயக்காட்டு ஓரத்திலே

http://a34.idata.over-blog.com/600x406/3/05/97/00/Wf9.jpg
ஆண்: வயக்காட்டு ஓரத்திலே
வண்டிகட்டி வந்திருக்கேன்
வாடிபுள்ளே என்னைத் தேடி புள்ளே
உனை கட்டிக்கிட்டு சோடி போட்டு
போகப் போறேன் வாடி புள்ளே
எனைத் தேடிபுள்ளே...

பெண்: பருத்திக்காட்டு பக்கத்திலே
பட்டுக்கட்டி வாரேன் மச்சான்
உனைத் தேடி மச்சான் - எனை
கட்டிக்கிட்டு கூட்டிப் போனால்
தாரேன் மச்சான் என்னைத்
தாரேன் மச்சான்...

(வயக்காட்டு ஓரத்திலே )


ஆண்: தென்னங்காத்து அடிச்சுப் போச்சு
தெருவெல்லாம் உறங்கிப் போச்சு
வந்த நிலவும் மறைஞ்சு போச்சு
வாசமுள்ள ரோசாவே நீ எங்கிருக்க
வாட்டமுள்ள மச்சான் நான் இங்கிருக்கேன்...

பெண்: ஊருசனம் உறங்க்கிக் கிடக்கு
உறவுசனம் முழிச்சுக் கிடக்கு
உன்னை நினைச்ச மனசு கூட தவிச்சுக்கிடக்குது
என் ஆசை ராசா..கூண்டுக்குள்ளே நானிருந்தாலும்
கோழி கூவும் முன்னே வந்து நிற்பேனே...(வயக்காட்டு ஓரத்திலே)ஆண்: பச்சை மலை இருளும் கூட பயமிருக்கும்
ஆந்தை சத்தம் அலரல் கூட அரட்டலாக்கும்
எட்டுக்கட்டும் வெட்டியான் பாட்டு கூட பயமுருத்தும்
ஒத்தையடிப் பாதையிலே ஒத்தை சனம் காணலியே
என் அனிச்சம் பூவே எப்படி நீ வந்து சேரப் போறியோ
இந்த மாமன் மனசும் கூட நடுக்கமாகுதே....
பெண்: பச்சை மலை இருளிலும் நம்ம
பேச்சியம்மன் காத்து நிற்பா
ஊருசுத்தும் சுடலை சாமி
என்கூடத்தானே சேர்ந்து வராரு
எட்டு அடி எடுத்து வச்சா நம்ம
காவக்கார அய்யனாரும் சேர்ந்துருவாரு
மிரட்டும் சத்தம் எல்லாம் என்
மாமன் பேரைக் கேட்டாலே மிரண்டு போகுமே
மின்னும் பூச்சி வெளிச்சத்திலே - உன்
கண்ணுக்குள்ள வந்து நிப்பேன்
கலங்காதே என் கருத்த மச்சானே...!


(வயக்காட்டு ஓரத்திலே)
Thursday, March 17, 2011

"மா" தவம்

http://upload.wikimedia.org/wikipedia/commons/5/57/Ranilaxmibai-1.JPG
மாதராய்ப் பிறந்திட "மா" தவம்
செய்ததும் உண்மையே...

பாரதி கண்ட புதுமைப் பெண்ணும் நானே..
பாசத்தில் என் தாய்வழி வந்த
அடிமைப்பெண்ணும் நானே...
வீட்டில் காணும் சிறுபூச்சிக்கும்
பயப்படுவேன்...
நாட்டில் காணும் விஷப்பூச்சியுடனும்
போரிடுவேன்!!

அந்த மூன்று நாட்களில்
முட்டிபோட்டு அழுதாலும் - எங்களவர்
பெண்மையை சீண்டும்பொழுது
சிலிர்த்தெழுந்து சிப்பாயாய்
வெட்டிப்போட்டு விரைந்திடுவேன்!

வறுமைவந்து வாட்டினாலும்
என் கருப்பையைக் கூட விலைபேசுவேன்!
ஒருவருக்குப் புண்ணியமாய்..! - ஆனால்
ஒருபோதும் என் கற்பை விலைபேசமாட்டேன்...

இலக்கியத்தில் நுகர்பொருளாய்
வலம் வந்த போதும்
நடைமுறை வாழ்க்கையில் மறைமகளாகவே
வலம் வருவோம்...

மாதராய்ப் பிறந்திட "மா" தவம்
செய்ததும் உண்மையே...

Wednesday, March 9, 2011

ஆணிவேரானவன் நீ!http://4.bp.blogspot.com/_BdMqXnxTYiM/SyAcflUX0TI/AAAAAAAAAKY/paAvYu9XMv4/s320/sad.jpgசெல்லமே....
இரவுப் பொழுது மெல்லமாய்
இறக்கின்றது....ஆனால்
என் இரவு மட்டும் எப்போதும்
வெளிச்சமாகவே இருக்கின்றது!

இயலாமையிலேயே
இதயமும் கிடப்பதால்
எனது காகிதப்பேடும்
வெற்றிடமாகவே கிடக்கிறது...

உன் ஞாபக சின்னங்கள்
நெஞ்சோடு சிதறிக்கிடப்பதால்
என் கண்ணீரின் தூறலில்
கரைந்தே போகின்றேன்...

உன் முகம் மட்டுமல்ல
நீ விடும் மூச்சுக்காற்றும்
எனக்கு ராசிதான் - அதையே
நான் சுவாசிப்பதால்...

என் குலசாமிக்கும் உனக்கும்
ரொம்ப வித்தியாசமில்லையடா
நான் உன்னைக் கேட்டு
கையேந்தினால் சாமியும்
உன்னைப்போலவே எப்போதும்
கல்லாகவே நிற்கின்றது....

நீயோ
எனை காக்க வைத்து
களிப்டைகின்றாய்...
நானோ காத்திருந்து
காயமடைகின்றேன்...
என் தேசம் மட்டுமல்ல
என் நேசமும் தப்பானதல்ல!!

உனக்காய்
காத்திருக்கையில்
நான் காணாமலே ஆகலாம்
ஆதலால் அன்பே - நான்
மறையுமுன் வந்துவிடு
என் சாம்பலையாவது
தொட்டுவிட்டுப் போ
எனக்கு மோட்சம் கிடைக்கட்டும்

நேற்றைய நினைவிலும்
நாளைய கனவிலும்
காலத்தை கழிக்கின்றேன்
என் எண்ணத்தின்
ஆணிவேரானவன் நீ!

என் ஆவியை உன்னிடம்
தொலைத்ததால் பார்ப்பவர்களுக்கு
நான் பாவியானேன்!

தொலைதூர இடத்தில் நீ

இருந்தாலும்
தொலையாத நினைவுகளுடன்
உன்னை தொடர்கின்றேன்

எனை நினைக்க மறந்து
நீ பறந்தாய்!
நினைத்தே இருப்பதால்
நான் இறந்தேன்.....