Monday, June 4, 2012

வெட்டப்படுவதையே எதிர் நோக்குகின்றேன்.....
 
வெயிற்கால இரவின் தாக்கம்
முன்பனி பெய்யும் நேரத்திலும்
முழுமையாய் மனதினுள்....
"பகைவருக்கருள்வாய்" வேதாந்தம்
புரியாமல் விழிக்கையில்
சொந்தங்களின் போக்கில்
வேதாந்தம் விளங்குகிறது...
 
மொத்த பொழுதுகளும்
ஒற்றை வரிசையாய்
அழுது தொலைக்கின்றன...!
வரப் போகும் நாட்களை
பயத்தோடு எதிர்பார்த்தாலும்
இதயத்தில் இடைவெளியில்லாத
குருட்டு நம்பிக்கை
எதையும் கடப்பேன் என்று...!
 
மறக்க முடியாத நிகழ்வுகள்
மனக்கண்முன் நிழலாட
இன்னல்களை மட்டுமே சந்தித்த 
பாவப்பட்ட இதயம் பண்பட்டு
அன்பிற்கான வட்டியினை
கடந்த பொழுதுகளிலிருந்து
கொடுக்கக் கற்றுக்கொண்டேன்
 
ஒவ்வொரு முறையும்
யாரோ ஒருவரால்
வெட்டப்பட்டாலும் மீண்டும் 
தழைத்து  விடுகின்றேன்....
சில நேரங்களில், தழைப்பதற்கு
நாட்களாகவோ மாதங்களாகவோ.....
ஆனாலும் தழைத்து விடுகின்றேன்!!
 
இயல்பு நிலையிலிருந்து
எப்போதும் எதற்காகவும்
மாற விரும்பவில்லை..
ஆகவே
வெட்டப்படுவதையே
எதிர் நோக்குகின்றேன்.....
மீண்டும் தழைப்பதற்கு....!! 
 
ஆத்மார்த்த  சிநேகிதனே .......
 
தண்ணீரின்  தழும்பல்கள்
விழிகளில்...
வெப்பத்தின் விழுதுகள்
இதயத்தில்....
ஈரத்தின் போக்குகள்
கன்னங்களில்...
இழப்பின் ஆக்கங்கள்
உச்சத்தில்....
அச்சங்கள் எச்சமாக
மிச்சமிருப்பது என்னவோ
மச்சமான வலிகளின் பொழுதுகள்.....!!
வீறுநடைபோடும் விதியின் 
வலிமையை கிலியோடு கவனித்திருக்க
வார்த்தைகளில் வசப்படுத்துவாய்
வாஞ்சையாய் தலை கோதுவாய்
வஞ்சனையில்லாமல் 
இதயச்சுமை ஏற்பாய்!
துக்கம் மறந்து
இளைப்பாருகின்ற
தாய் மடியாய்
தாங்கிப்பிடிப்பாய்
முழுமையாய் அங்கீகரித்து
அன்பிற்குள் அரவணைப்பாய்....
நீயிருக்கும் தைரியத்தில்
கண்ணீரும் கரைமீறத் தயங்கும்!
ஆத்மார்த்த சிநேகிதமாய்
உன்னைவிட வேறென்ன
வேண்டியிருக்கு...!!

 


கண்வளராயோ கற்பகமே.....
சிறுமீனு கடிச்சிருச்சோ - உன்
மேனியெல்லாம் நடுநடுங்க...
சிறு பூச்சி கடிச்சிருச்சோ - உன்
தேகமெல்லாம் நடுநடுங்க...
வலிபொறுக்காமல்
நீயழுத கண்ணீரு ஆறாகப்பெருகி
அலை அலையா அடிக்குதம்மா...!
கிலியோடு அழுகதகண்ணீரு
குளமாகத் தேங்கியிங்கு
கொசுவெல்லாம் வளருதம்மா...!
பூக்கவிருக்கும் பொன்னரும்பே - என்
பொக்கிசமே கண்வளராய்..!
மனமே மருக்கொழுந்தே
மண்மணக்கும் மல்லிகையே - என்
மைவிழியோடு கண்வளராய்....!!
வாடாத பூவே-வளரும் பிறையே
வருணத்தின் துளியழகே கண்வளராய்...!!
நாலூரும் மயங்கிநிற்கும்
நளினத்தின் நடையழகே கண்வளராய்...
போகாத  நிலமில்லே -நான்
நீந்தாத நீரில்லே, மண்மயங்கும் பேரழகே 
மதி மறையும் முன்னே கண்வளராய்..!
நந்தவனம் பூஞ்சோலை
நாலுபக்கம் உண்டுபண்ணி 

நாள்தோறும் வாசம் மாறாமல்  
காத்திருப்பேன் கண்வளராய்....
பலநூறு வேலைகள்
தெரிஞ்சவரு உங்கப்பா....
பாலும் நீரும் பக்குவமா பிரிப்பாரே....
கலந்திருக்கும் நீரெல்லாம்
உன் கண்ணீர்தானென்றால்
கலங்கித்தான் போவாரே....
விடியும் வரை விசும்பாமல் நீயுறங்கு.!
விடிந்த பின்னே வீதியோரம்
உன் விருப்பம்போல விளையாடு....!!