Saturday, November 30, 2013

உன்னைத் தவிர்ப்பதில்லை.....




எழுத்துக்களால் நடனம்புரியும்
என் வார்த்தைகளுக்கிடையில்
உன் மௌனமொழி கண்டு
முடங்கித்தான் போனேன்...

தினமும் ஒருமுறையாவது
உன் விழிகள் என்னை
விசாரிக்காமல் போனால்
என் விதியை விமர்சிக்கின்றேன்...

இந்த இதய இயந்திரம்
உன்னால் மட்டும் இயக்கப்படுவதால்
என் மனக்குதிரையும் உன் முன்னே
மண்டியிட்டுக் கொள்கிறது...!

எப்போதும் உன் நினைவுச் சுவடுகளை
சுமந்து கொண்டிருப்பதால்
தப்பாமல் ஒலிக்கும் இதயமும்
உன் பெயரையே உச்சரித்து உயிர்தருகிறது!

ஆனாலும் எதிர்பாராத தருணங்களில்
எதிர்பாராமல் எது நடந்தாலும் - ஒருபோதும்
காகிதப்பூவிற்கு நீர்வார்த்து
மூலிகைச்செடியை மிதிப்பதில்லை அன்பே...

Friday, May 3, 2013

நீரூறும் கண்கள்....

இதயச் சுமைகளை
இறக்கி வைத்து இளைப்பாற
இன்னுமோர் இடம்
கிடைத்தபாடில்லை!

வாடிக்கொண்டே வளரும்
வாழ்க்கையில்
வசந்தத்தின் பக்கம்
அசதிக்குக்கூட அருகில்
வந்தபாடில்லை!

கனவுகளெல்லாம்
உணவுகளோடு செரிமாணமாக
ஆசைகளெல்லாம்  நிராசைகளாய்
நெஞ்சுக்குள் புதைந்து கிடப்பதை யாரும்
அறிந்தபாடில்லை!

தண்ணீருக்காய் தவமிருக்கும்
கற்றாழைச் செடியைப்போல்
அன்பிற்காய் தவமிருந்து
தரிசு நிலமாய்க் கிடப்பதை ஒருவரும்
உணர்ந்தபாடில்லை!

நெஞ்சில் தூக்கிச் சுமந்த துயரங்கள்
நெருஞ்சி முள்ளாய் நெருடுகையில்
நீரூறும் கண்கள் கண்ணீரில்
கரையாமலிருக்கட்டும்..!
இருதயமோ உடைந்து
போகாமலிருக்கட்டும்...!!





 

நீ மட்டும்தானடி.....


ஏனடி பெண்ணே..!

உனக்கும் எனக்குமான
நெருக்கத்தில் என்ன உரசல்?
இடைவெளியற்ற இடத்தில் ஒரு
குழப்பம் ஏற்படுகிறது கண்ணே...!

எப்படியோ... உள்ளிற்குள்
உருண்டு திரண்டு ஏதோ ஒன்று
நம்மை இணைத்து வைக்கிறது
இருந்தும் நெருங்க மறுக்கின்றாய்..

என் இடப்பக்கத்திற்குரியவளே...
அக்கம் பக்கம் ஆனவளே..
உன் நினைவுச் சிதறல்களுடனேயே
இடவலமெங்கும் நகர்வலம் போகின்றேன்!

வலுவான என் காதலில் வாழ்பவளே ..
என் எண்ணங்களுக்குள் விழுந்தவளே..
வண்ணங்கள் கொண்ட வாழ்க்கையில்
பிணக்கங்கள் வேண்டாமடி சகியே...!

அன்னமிடும் வேல்விழியே...
ஆலம் விழுதுகளாய் - உன்
ஞாபகங்கள் ஓயாமல் தேயாமல்
ஓங்கியே நிற்கிறது கிளியே...!

அரும்பினிலே முதிர்ந்தவளே..!
அமுதத்தினிலே நிறைந்தவளே..
கடன்பட்டவனானேனடி - உன்
காதலின் வலிமையிலே...

என் காலக்கடலோடு கலந்தவளே...!
மனம், உடம்பு, நேரத்தின் மீது
ஆதிக்கம் செலுத்திய தமிழச்சியே!
என்னோடு எப்போதும் நீ மட்டும்தானடி..!!

மங்கைவுடுங் கண்ணீரய்யா...!

மண்ணுக்கு உள்ளார
மழைத்தண்ணீ போல் போகுதய்யா
மழைத்தண்ணீ இல்லீங்கய்யா - இந்த
மங்கைவுடுங் கண்ணீரய்யா...!
கல்லரிசி மாலக்கட்டி
கழுத்துக்கொரு குஞ்சங்கட்டி
கழுத்தழகு பாக்காம - என்ன
கனிஞ்சியழ வச்சீகளே...!
நெல்லரிசி மாலக்கட்டி
நெருங்க சரந்தொடுத்து
நெல்லழகு பாக்காம - என்ன
நெனச்சியழ வச்சீகளே...!
சிண்டுலேயும் அரும்பெடுத்து
சில பூசை செய்யப் போனேன்
படியில அரும்பெடுத்து - நானும்
பாத பூசை செய்யப்போனேன்...!
பூசைக்கு பூத்த பூவை
பொறிக்கத்தான் போகயிலே
பூ நாகம் தீண்டுச்சய்யா - நானும்
பூ நாராய்ப் போனேனய்யா...!

செப்புத்தோண்டி கண்டெடுத்து
செவுந்திக்கே தண்ணீ  மொண்டேன்
செப்புத்தோண்டி ரெண்டொடஞ்சா
செவுந்திக்கே சேதந்தானே...!
பரியம் போட சாமரியில வந்தவர
எரிவரியன் தீண்டிச்சாக
அரியனோட பரிவட்டம் இறங்கிப்போச்சு - என்
மதியும்தான் மரிச்சுப்போச்சு...!

அறுகரிசியோட வந்த மக்க
பொறியரிசித் தூவி நிற்க
தூவானமும் தொடங்கிருச்சு
சுத்தியுள்ளவுக கண்ணுக்குள்ள...!



Saturday, January 5, 2013

காதல் கீதம்....


முகில் கண்டு நடமாடும்
மயில் போல - உன்
விழி கண்டு மலராடும்
என் மென்மை....

இருளோடு இணைந்தாடும்
மதி போல - உன்
அருளோடு வழிந்தோடும்
என் கண்கள்...

ஒளியோடு சுழன்றாடும்
கதிர் போல - உன்
ஒலியோடு சதிராடும்
என் சலங்கை...

மழையோடு நனைந்தாடும்
நிலம் போல - உன்
இழையோடு நுழைந்தாடும்
என் தேகம்...

பனியோடு நிறைந்தாடும்
இலை போல - உன்
கவியோடு மலர்ந்தாடும்
என் சோலை...

பொருளோடு கலந்தாடும்
கவி போல - உன்
கருவோடு உறவாடும்
என் பெண்மை....

தெரியவில்லை.....

பாதங்கள் நனைய
இறங்கும் வரை தெரியவில்லை
பாசியின் வலிமை

கரங்கள் நகர்ந்து
தொடும் வரை தெரியவில்லை
நெருப்பின் தன்மை

கண்கள் பனிக்க
காணும் வரை தெரியவில்லை
காட்சிகளின் பொய்மை

அலைகள் அசைய
ஆடும் வரை தெரியவில்லை
ஆழத்தின் ஆளுமை

பார்வைகள் ஒளிர
பழகிய வரை தெரியவில்லை
இருதயம் உடைவதை

ஒரு முகம் காண
ரசிக்கும் வரை தெரியவில்லை
பன்முகச் சாயலை

நம்பிக்கை சிதைய
நெஞ்சு வெடிக்கும் வரை தெரியவில்லை
துரோகத்தின் வன்மை.