Tuesday, September 22, 2015

நீயற்ற நிகழ்காலம்...




பனி பொழியும் குளிர் காலத்தில்
பார்வை மறைத்துப் போகிறது

நீயற்ற நிகழ்காலம்...

உன் அருகாமையற்ற நேரத்தை
செலவிடுதலின் தாக்கத்தை
வீட்டிலிருக்கும் சோடிப்புறாக்கள்
சொல்லி சொல்லி கதைக்கின்றன...


கடந்த காலக் காதலின் கவித்துவத்தை
கண்ணிற்குள் கொண்டுவரும் போதெல்லாம்
தடுமாறும் என் நடமாட்டத்தை
கடவுள் மட்டுமே கண்டறிவார்...


உன் வசனங்கள் நிறைந்த பேச்சாற்றலை
தனித்திருக்கும் போதெல்லாம்
உள்வாங்கிக் கொள்கின்றேன்...


நீ என் அருகிலிருந்த
அந்த நோன்பு நாட்களாகட்டும் - என்
கரம் பிடித்து கோயிலை
வலம் வந்த பிரகாரமாகட்டும்
இன்னும் நினைவில் நீண்டநிழலாய்
நின்று கொண்டுதானிருக்கிறது...


அப்போதிருந்த உனது புன்னகையை
இப்போது காணவில்லை தோழா...!
உன் பொருட்டு ஒவ்வொரு நாளும்
ஒரு பொய்யைச் சொல்லி கடத்துகிறேன்...


ஆடை மாற்றும் நேரத்தில்
காதலை மாற்றிக் கொள்ளும்
பாதகம் நானறியேன்...


என்னையறிந்த நீயுமிதை அறிவாய்...
ஆன போதும்
ஏனிந்த மௌனம்....?

No comments: