Wednesday, August 8, 2012

கானம் - கவிதை - நீ.....

சிந்தனைகள் ஆயிரமிருக்க
நான் தேடியது எதனை?
கிடைக்காத பொருளுக்கு
இந்த இதயத்தில்தான்
எவ்வளவு வேட்கை?
பார்வைக்கு அப்பால் வளரும்
செடிகள் மருந்தாகிப் பயன் தரலாம்
கண்டறிவதில்தான் காலதாமதம்...!!
தொலைவில் இருக்கும் குன்றெல்லாம்
எப்போதும் பசுமையாகவே தெரிகிறது...
ஏறும்போதல்லவா
கள்ளும் முள்ளுமாய்த் தெரிகின்றது...!!
ஆனாலும் ஏறிவிடுகின்றோம்....
ஏறியே ஆகவேண்டும்
என்ற எண்ணமிருந்தால்
எதையும் அடைந்துவிடலாம்...
என் கூரை எரிந்திருந்தாலும்
உச்சியிலிருக்கும் நிலவை
ரசித்திருப்பவள் நான்...
காசு கொடுத்து ஆப்பிளை வாங்கி
அதற்கு நான் சேவகம்
செய்ய மாட்டேன்..

தயங்கித் தயங்கி
உயிர் வாழ்ந்த நான் - நீ
வந்த அந்த வேளையில்
என்னை உயிர்ப்பித்துக் கொண்டேன்....
இப்பொழுது என் மேனியெங்கும்
வண்ணச் சிறகுகள்..
ஆனாலும்
என் எல்லைக்குள் பயணிக்க
என்னை ஆக்கப்படுத்திக்கொண்டேன்...
என் திசை எப்போதும்
உன் வாழ்திசை நோக்கியே...
என் கண்ணீர் எனக்கு மட்டுமே சொந்தம்...
சவங்களின் சமாதானத்தை ஏற்பதற்காக
ஆயுள் தண்டனை அனுபவிக்கமாட்டேன்...
இந்த கானம் - கவிதை - நீ
வேறு எவை என்னை
வசம் கொள்ளப்போகின்றன...??!!

No comments: