Friday, August 24, 2012

கண்ணாளனே.....


 குழலானவனே!  நின்னுடைய கவிக்
கடலில் யானொரு சிறு நுரைச்சிதறல்
தேனைச்சுவையும் ஈப்போல் மொய்த்து
தோடிராகம் இசைத்திடுவேன்; யாரிதையறிவர்...?

எழுது என்கின்றாய்; எங்ஙனம் எழுதுவேன்?
உண்மை அறிந்திலர் உலகத்தார்...
எழுத்துப் பொருள் நீயானால்
எழுது பொருள் நானாவேன்....!

குழலாய் நான்; ஊதும் குமுதவாய் நினது..!
நரம்பாடும் வீணையாய் நான்; ஆட்டுபவன் நீ..!
ஓவியத்திலகமாய் நான்; தூரிகையாய் நீ..!
பசுமையாய் நான்; ஒளிச்சேர்க்கையாய் நீ..!

வல்லவனே வல்லவற்கும் நல்லவனே
சொல்லவனே சொல்லிற்கும் தூயவனே
தேனொழுகும் தமிழில் நீயே என் கர்த்தா
யானெழுதிய மொழியினில் நீயே என் கருத்தாய்

காலையில் கவிக்கதிராய் கலப்பதும்
மாலையில் மோன மயக்கத்தில் அணைப்பதும்
அள்ளித் தெளித்த முத்தத்தில் நனைந்தவளாய்
வெள்ளிச் சிதறலாய் எனை ஆட்கொள்வாய்
சங்கடங்கள் சத்தமின்றி செத்தொழிந்திட
சங்கீதங்கள் யுத்தமின்றி கரை புரண்டோடிட
உள்ளத்து உணர்ச்சிகள் வெள்ளமாய் வெளியேறிட
அள்ளிச்செல்லும் உன் அணைப்பு மெல்லமாய்....

ஒலிற்றவள் கேட்ட வர்ணனையாய்
ஒளியற்றவள் பார்த்த வண்ணமாய்
காலற்றவள் ஆடிய நாட்டியமாய் - உன்
காதலினில் கரைந்தே போகின்றேன்...




No comments: