ஆசைகளை சொன்ன அன்னக்கிளியே....
என் நேசமது உனக்கு புரியவில்லையா...
ஆயிரம் பிறவிகள் அளவு வேண்டாமடி...
எத்தனை பிறவிகள் ஆனாலும் - அது
ஐந்தறிவு ஆறறிவு ஆனாலும்
உன் துணை நான் தானடி...!

பாசம் மட்டுமல்லடி பகிர்ந்துகொள்ள
பலவகைகள் உண்டு!
பசி - புசி, துக்கம் - தூக்கம்
இன்பம் - துன்பம், அழுகை - சிரிப்பு
நிறைவு - குறைவு, காதல் - காமம்
பகிர்ந்து பருகுவோமடி...!

நிழலாய் மட்டுமல்ல நீக்கமற
இணைந்து ஒன்றாய் சுவாசித்து
யாசித்து உணர்வோமடி...!
நீர் முத்துக்களை மெல்லமாய்
முத்தமிட்டு சுவைப்பவளே...
உன் இதழ்வழி நுழைந்து - என்
உயிர் மூச்சால் உன்னை அனுதினமும்
குளிர்வித்து குளிர்வேனடி....!

அணியும் ஆடை மட்டுமல்ல
என் ஆன்மாவும் நீதானடி...!
உப்பாய் இருந்து உயிருள்ளவரை
நினைக்கச் செய்தவளே
என் அறுசுவையும் நீதானடி...!

சுட்டெரிக்கும் வெயிலில்
சுற்றி வந்தால் உன் மேனி
கருத்து விடுமடி...! அதன்பால்
என் இதயமும் கருத்து விடுமடி...!

வியர்வை முத்துக்கள் மட்டுமல்ல
என் கண்ணின் மணிகளையும்
எடுத்துத் தருகிறேனடி ...!
சேர்த்து கோர்த்து - உன்
வெண் சங்கு கழுத்தை மிளிரச் செய்யடி...!

காணும் கலைகள் மட்டுமல்ல - நான்
பார்க்கும் பாரதமும் நீதானடி...!
விரிந்த மார்பு, விரல்கள்,
தாயுமானவன் மடி போதாதடி...!
உச்சி முதல் பாதம் வரை
உன் ஒருத்திக்கு மட்டும் தானடி...!

கண்ணிற்குத் தெரியாத கடவுள் வேண்டாமடி..!
கண்ணிற்குத் தெரிந்த - என்
காவிய தெய்வமே நீ தானடி...!
அன்னையாய்...அம்பிகையாய்
மனைவியாய் ... மந்திரியாய்
என்னை ஆட்கொண்டவளே...

உதிரம் சுமக்க ஆசைப்பட்டு
என்னை உச்சியின் சிகரத்திற்கு
உயர்த்திய என் உயிரே.........
வரமாய் வந்தவள் நீயடி...
என் வாழ்விருக்கும் வரை - உன்னை
வாட விடமாட்டேனடி....

3 comments:
Aalamana kavithaigal
Innum oru piravi eduthalum unnai pondra kavingyayai kana eyalumo.
ரசித்தமைக்கு நன்றி:-)
கவிதையுடன் இணைந்திருங்கள்....
Post a Comment