Friday, August 26, 2011

கண்ணான ராசாவே .....

http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/301353_204796679582193_100001555869268_538975_8212694_n.jpg

கொங்கு நாட்டு கோமகனை
கொளத்தோரம் காணலியே...
சேரநாட்டு சின்னவனை
சோளக்காட்டோரம் காணலியே..
கரும்புக் காட்டுப் பக்கத்தில
காலை மாலை காத்திருந்தேன்
காணாமல் போன மச்சான்
கருக்களிலும் காணலியே...

தங்கச் சிலையாட்டம்
தவிச்சுத்தான் நானிருக்கேன்
தங்கமான மச்சானை
தாலிகட்டவும் காணலியே...
நேசமுள்ள மச்சானே...
நெஞ்சாவி துடிக்குதய்யா
உன்னைக் காணாமல்
காப்படி உசிரும் கூட
கருத்தேதான் போச்சுதய்யா..

என்
நேர்வகிட்டு உச்சியிலே
உன் உசிரைத்தான்
நிறைச்சு வச்சேன்...
உன் உதட்டோர மீசையில
என் உசிரைத்தான்
புதைச்சு வச்சேன் புரியலியா..
தலையெண்ணெய்
வழிஞ்சு போனாலும் - என்
எண்ணம் மட்டும் வழியலியே...
சாதிசனம் வந்தாலும்
தயங்காமல் சொல்லிடுவேன்

கரிசல் காட்டு பூமியிலே
நான்
காத்திருந்த வேளையில - நீ
பூசு மஞ்சள் விதைச்சுவச்ச
இடமெல்லாம்
உன் பாதத்தோட வாசம்தான்
பாசமா படர்ந்திருக்கு...
நேசமா நீ நெருங்குவது
எப்போது?


நெல்லுக்கதிராக நெடுந்தூரம்
வளர்ந்து நின்னேன்...
கோவை கொய்யானு
என்னை கூப்பிட்டு சிரிப்பானே
ஆசையில ஓடிவந்தா
அள்ளித்தான் அணைப்பானே..
ஆசையுள்ள மச்சானே - நீ
கோபப்பட்டும் போகலியே
பொழுது சாயும் காணலியே...

செவ்வந்தி தோட்டத்தில
சேதி ஒன்னு வச்சிருக்கேன்
சீக்கிரமா நீ வந்தால்
சூசுகமா சொல்லிருவேன்...
கண்டாங்கிச் சேலையிலே
கட்டில் ஒன்னு செஞ்சிருக்கேன்
எட்டு முழ வேட்டி கட்டி
நீ வந்து சேருமய்யா.....
அடுத்த வீதி ஆசாரியிடம்
தொட்டில் ஒன்னு செய்யச் சொல்லி
துட்டும் தான் கொடுத்திருக்கேன்...


கருவாச்சி நானிங்கே
காரக் குழம்பு ஆக்கி வச்சேன்
கருத்த மச்சான் நாவிற்கு
நளபாகம் நாளும்தான்
நோகாமல் செஞ்சுவச்சேன்
நோன்பு பல நானிருந்தேன்

நொய்யலாற்றங் கறையினிலே
ஒன்னோட குழலுச்சத்தம்
நொடிக்கொருதரம் கேட்குதய்யா
பாவிமக பாட்டுக் கேட்க - உன்
பாழும் நெஞ்சு துடிக்கலையா...

பக்கத்தில சொந்தமிருந்தும்
துக்கத்தில் நானிருக்கேன்
வாக்கப்பட்டு வருபவளை
வாயாட விட்டு விட்டு
வழிமாறிப் போனதேனோ

புதன் கிழமை சந்தையிலே
வாங்கி வந்த காளை கூட
பொழப்பு நடத்த சோடி தேடுதய்யா
புழக்கடைக்கு பக்கத்திலே
பொழம்பியே கிடக்கிறேன்

நெஞ்சுக்குள்ள இருந்த ஒன்னை
கண்ணுக்குள்ள பூட்டிவச்சேன்
கண்ணுறக்கமில்லாமல்
களைப்பாகி கற்பூரமாய்
கரைஞ்சேனே.....

வெளியூரு சென்றிருந்தால்
கடிதம் ஒன்னு
வரைஞ்சிருப்பேன்
சென்ற இடம்
தெரியவில்லை
விலாசம் எதுவும்
அறியவில்லை!
கண்ணீரில் கடிதம் எழுதி
காற்றோடு அனுப்பி வச்சேன்
கண்ணான ராசாவே
கைக்கு வந்து சேர்ந்துச்சா?







3 comments:

ஆர்வா said...

ஒரு அழகான கிராமிய பாடலை ரசித்தது போல் இருந்தது.. அருமை நண்பா

முனைவர் இரா.குணசீலன் said...

மண்வாசனை நுகர்ந்தேன்..

முனைவர் இரா.குணசீலன் said...

கண்ணீரில் கடிதம் எழுதி
காற்றோடு அனுப்பி வச்சேன்
கண்ணான ராசாவே
கைக்கு வந்து சேர்ந்துச்சா?

அருமை..