Friday, July 29, 2011

இனியென்ன சொல்வதற்கு ???


நான் கவிதை
எழுதுவதில்லை
என் காயங்கள் வலிப்பதில்லை
கோபங்கள் சுடுவதில்லை
ஏமாற்றம் வெறுப்பதில்லை

நானும் இருப்பதில்லை
பெயரளவில் இறப்பதில்லை ...

எரிகின்ற நெருப்பை வாங்கி
எனக்குள்ளே ஊற்றி ஊற்றி
புரிகின்ற காதல் பாடம்
போதித்த புத்தன் ஆவேன்

சரிகின்ற அழகில் கொஞ்சம்
சரியாமல் வாழ்ந்த நெஞ்சம்
புரியாமல் பேசிப் பேசி
போனது உன்னில் தஞ்சம்

கண்ணீரைத் துடைத்து விட்டு
கவிதைகள்
எழுதுகின்றேன்
பெண்ணே நீ பார்க்கும் போதும்
பொய் முகம் காட்டுகின்றேன்

செந்நீரும் சுண்டி
சேர்கின்ற காலமில்லை
சுடுகின்ற நெருப்பெடுத்து
சுடுவதும் காயமில்லை
வடுகொண்ட வார்த்தை எல்லாம்
வாசித்தே பழகிவிட்டேன்
நடுவானில் நிலவின்றி
நாட்களைத் தொலைத்து விட்டேன்

அவசரத் தேவைக்கு
அன்புதான் வேண்டுமென்று
அறிவிப்பு விட்டதில்லை
நீயறிவாய் என்னவென்று

கரையிலே விழுந்த மீனின்
கண்களில் கலக்கமில்லை
தரையிலே இருக்கும் மரத்தின்
இலைகளைக் காணவில்லை
என்பதனாலே எல்லாம்
இயல்பாக இருக்குதென்று
நம்புதல் இருக்குமானால்
நம்பிக்கை சிதைப்பதில்லை

இனியென்ன சொல்வதற்கு
இனிமேலும் கவி எதற்கு--
விடியட்டும் பொழுதெனக்கு
வழக்கம் போல் சுழல்வதற்கு ...

3 comments:

குடந்தை அன்புமணி said...

பிரேமலதாவின் கவிதை தங்கள் தளத்தில் மின்னுகிறது... நன்றி பிரேம லதா....

பிரேமி said...

மிக்க மகிழ்ச்சி ....தொடர்ந்து கவிதையுடன் இணைந்திருங்கள் . நன்றி :-)

இராஜராஜேஸ்வரி said...

விடியட்டும் பொழுதெனக்கு
வழக்கம் போல் சுழல்வதற்கு .../

சுழலும் அழகு கவிதைக்கு பாராட்டுக்கள்.