Monday, August 20, 2012

என் எழுத்து விதி எப்படியோ...?

பொட்டுமேலே பொட்டுவச்சு
பொட்டலிலே போறசாமி
பொட்டுவச்சு எனை கரைசேர்க்க-உன்
பொட்டுருகத் தோணலையா...

 
ஆலமரக்கிளையினிலே
ஊஞ்சல் கட்டி ஆடயிலே
உம் ஓதும் குரல் கேட்டு
உண்மையுடன் காதலானேன்...

அத்துவானக் காட்டுக்குள்ளே

ஆயர் குழல் ஊதையிலே
சாடை சொல்லி ஊதினாலும்
சாமத்திலே நான் வருவேன்...

படுத்தால் பலநினைவு
பாயெல்லாம் கண்ணீரு!
உண்டாலும் உறக்கமில்லை
துவண்டாலும் தூக்கமில்லை...!

சேர்ந்திருந்தோம் சேர்ந்திருந்தோம்

செடியிலிட்டப் பூப்போல.....
செடியறுந்து பூ உதிர்ந்தா
சேருவது எப்போது?

கூடுனமே கூடுனமே-நாம்

கூண்டு வண்டிக் காளைபோல!
ஆகாத காலம் வந்து-நாம்
ஆளுக்கொரு சீமையானோமே...!

பட்சத்தோடு பயமிருக்கு
பறக்கச் சிறகிருக்கு!
எண்ணமிருக்கு-நம்
எழுத்துவிதி எப்படியோ?

மண்ணெதிரி, மரமெதிரி
மாந்தரெல்லாம் என்னெதிரி
புல்லும் எதிரியல்லோ!
பூலோகத்தில் ஏன் பிறந்தேன்?

நன்றாயிருந்தோம்
நாள்தோரும் சிரித்திருந்தோம்
ஊருபட்ட கண்ணாலே
தனிச்சுத்தான் தவிக்கிறோமே.....


உணர்வுக்கும், ஆசைக்கும்
விதைபோட்டு நின்றோமே....
விளைந்ததை விழுதாக்க
வழியமைத்து வாழ்வோமே...

அத்திமரம் நானாவேன்
அத்தனையும் தேனாவேன்
நத்திவரும் மச்சானுக்கு
முத்துச்சரமும் நானாவேன்...!

No comments: