Tuesday, August 14, 2012

உண்மையின் ஓலம்.....

ஒவ்வொரு புல்லையும்
நுகர்கின்றேன்...
பசுமையின் நுனியில்
பனித்துளியின் பிரசவம்...
பார்த்து ரசிக்கும் கண்கள்
பயனற்றுக் கிடக்கின்றன...
பெய்த மழையில்
பெருகிய ஓடையில்
வாடைக்காற்றின் வானொலியில்
இந்தப் பேதையின்
கண்ணீரும் கரைகின்றது...
 
எனது நம்பிக்கைத் திசைகளில்
பூத்திருந்த மலர்களெல்லாம்
பூவிதழ் சுருங்கி மடிகிறது....
நினைவுகளில் உலரும்
உயிர்க்கனவுகளை
ஈரப்படுத்த இப்போது
கண்ணீரால் மட்டுமே
மொழிபெயர்க்கப்படுகிறது....
இந்தத் திசையெங்கும்
ஏகமாய் பறந்து கொண்டிருப்பவை
உனக்காக வரையப்பட்ட
எனது
காகிதச் சிறகுகள்...
சிறகுகளை சுற்றி
பறந்து கொண்டிருப்பதோ
பருந்துகளின் பரிவாரங்கள்...
என் விழிகளில்
முட்டி நிற்கும்
கண்ணீர் ஊடகத்தின் வழியே
அழகிய வெண்புறாவைத் தூதுவிட்டால்
பருந்துக்கு முத்தமிட்டு பரவசமடைகின்றாய்....
உலகம் அறியாது
உள்ளத்தினுள் திணிக்கப்பட்ட
ஒப்பந்தத்திற்குக் கீழே
மிதிபட்டுத் துடிக்கும்
உண்மையின் ஓலம்...!
எனது கரைகளுக்கே
எட்டாத போது
உனது கரைகளைத்
தொட்டாவிடும்...??
நாளைய பொழுதில்
எனது வரிகள்
இங்கு சாட்சியாய் நிற்கும்!
அந்தப் பிரபஞ்ச வெளியில்
உன்னைத் தழுவி
என்னை ஆசுவாசப்படுத்த
எனது சிறைகளை
உடைத்தெறிந்து
எனது சிறகுகளை
தயார்படுத்துவேன்....
அதுவரை உறையாமல்
இரத்தமாகவே இரு.....!!

 
 

No comments: