Tuesday, August 7, 2012

போராளிப் புருசன்.....

காலங்காலமாய்
உன் கரங்களில்
இந்தப் போராளியின்
கருணை முகத்தைத் தாங்கி
நிற்க இணங்குகின்றாய்...!

சரித்திரமும் சாத்திரமும்
பேசுபவனை - உன்
சாதகத்திற்கு சொந்தமாக்க
ஆருடம் பார்க்கின்றாய்...!

வில்லேந்தி போர் செய்யாதவன்
ஆயினும்
சொல்லேந்தி சொற்ப்போர் புரிபவனை
சொந்தம் கொள்ள எண்ணுகின்றாய்...!

காதல் மொழியில் பேசுவான்
சட்டென்று
கட்டவிழ்ந்த புயலாய்
கச்சாலயத்தின் மகிமையை
பெருமையடிப்பான் - இவனை
காதல் செய்ய விரும்புகின்றாய்...!

பெண்மையே! என் இதயம்
சொல்வதைக் கேள்...

தாய் - மண்ணை மட்டும்
நினைப்பவனிற்கு
பெண்ணை நினைப்பது பெருந்துயரம்..!
"நீ மட்டும் இல்லையடி!
இங்கு வீழ்ந்தபடி கிடக்கிறார்கள்
எம் மக்கள் மாக்களாய்!" - என்று
வேதாந்தம் பேசி மெய்யணைப்பான்....!

இருளின் தனிமையிலும்
தேசத்தை சிந்திப்பான்
உணர்வுகளை உசுப்பேற்றுவான்
மேனிசிலிர்க்கும் நிலையிலும்
மெய்ஞானம் பற்றி வாதிடுவான்...!

தோடிராகத்தை
மோகனமாய் செதுக்கிடுவான்
மோகம் களையும் வேளையில்
மடைதிறந்த வெள்ளமாய்
மணிக்கணக்காய் மனிதர்களின்
மர்மம் பற்றி உரைத்திடுவான்...!

கவிகளில் கலைநயம் புரிவான்
மிரட்சியற்ற விழிகளில்
புரட்சியை ஒளிரச்செய்வான்
மிளிரும் புன்னகையிலும்
புரட்சியை விதைத்திருப்பான்...!!

குழந்தைகளுக்காய் குறைபடுவான்
உழைப்பவர்களைக்கண்டால் உருகுவான்
தேசம் செழிக்க மெனக்கெடுவான்
மோசம் செய்ய நினைத்திடமாட்டான்
ஆனாலும்
கொதிக்கும் சோகத்தை கொட்டித்தீர்க்க
எனைத் தீண்டி தணிந்திடுவான்...!

ஆய கலைகள் அறுபத்துநான்கை
கற்றுத் தேர்ந்தவன்
ஆளுக்குத் தகுந்தாற்போல்
ஆளை அசத்திக்காட்டுவதில்
அழுத்தக்காரன்...

இனமென்று பார்க்காமல்
சினம் கொண்டு சீறுவதில்
துர்வாசக முனிவனிற்கும்
குருவானவன் என் வாசகன்...!

தமிழ்மொழிக்கே தன்னுயிர்
என்று
தனித்து முழங்குவான்...!
உயிரும் மெய்யுமாய்
இருந்திடுவோம்
என்று சொல்லி கரம்பிடித்தான்....
இறுக்கிய கரங்கள் இப்போது
தனித்த நிலையில்
தகவல் விசாரிக்கின்றன...!!!

ஆனபோதும்
வேதநாயகனின் வார்த்தைகளை
வேதமாக ஏற்றுக்கொள்வதற்கு
முன்பிருந்தே நானும்...
"சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்...."
ஒத்துப்போகின்றோம்
இவ்விரண்டிலும் இருவர்..!!

No comments: