Wednesday, August 8, 2012

இளந்தளிர்களாய் உன் நினைவுகள்!

என் காலத்தின் பைரவனே....
நினைவுகளை விட்டகலும்
நினைவுகள் எத்தனை எத்தனையோ
மறதியெனும் மரத்தில்
இளந்தளிர்களாய் உன் நினைவுகள்!
பழுத்த இலைகளாய் - அவை
உதிர ஆரம்பிக்கும்போது
உன் நினைவுகளே
பசுமையாய் மீண்டும் பூக்கின்றது!
இலையுதிர்வதிலும் தளிர்ப்பதிலும்
ஏகமாய் என்னை
ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றாய்...!
கள்ளமிலா அன்பெனும்
ஆயுதம் தாங்கி வளைந்த
உந்தன் பார்வையில் நனைந்தது
எந்தன் நெஞ்சமானதால்
எனக்குள் சூழ்ந்து நின்ற காதலச்சமும்
உன்னால் களையப்பட்டது...!
கள்ளிப்பூக்கள் மட்டுமே
சூழ்ந்திருந்த எனது வனத்தில்
முல்லைப்பூக்களை பூக்கச்செய்தவன் நீ.....
தன் வழி தவறி
அறைக்குள் சிக்கிய
பட்டாம்பூச்சியின் தேடுதலுக்குக் கிடைத்த
சோலை வனமாய் எனக்கு நீ....
எங்கெங்கோ பட்ட காயங்களுக்கு
மருந்தாய் எனைத் தாங்கிய மணம்....
இந்த உனது வாசனையை
என் இடமெங்கும் தெளித்து
படுத்துறங்க வேண்டும் பைரவனே......

காதலின் பூரிப்பில் கட்டுரை ஒன்று.....


ஏட்டிலே ஊர்ந்து செல்லும்
எழுதுகோல் எழுதுவதெல்லாம்
உன் ஞாபகப் பக்கங்களையே...

மழைக்கால மேகங்களின்
மங்கிய மாலை நேரத்தில்
மண் வாசனையாய்
யோசனைகள் உன்னைப்பற்றி...

அடம்பிடிக்கும் உன் நினைவுகளோடு
நீந்துகின்றேன் - உன்னில்
உயிர்த்தெழ உணர்வோடு அலைகின்றேன்

கட்டவிழ்ந்த மேகக்கூட்டங்களும்
மொட்டவிழ்ந்த மலர்களும்
பாடிடும் ராகங்கள் தென்றலாய்
எனைத் தீண்டிச் செல்கையில்

மழைச்சாரலின் வேகத்தோடு
கட்டுரை ஒன்று கட்டுகின்றேன்
காதலின் பூரிப்பில்!

முன்னுரையிலேயே
முனைப்போடு உனக்கு
முன்னுரிமை அளிக்க முயல்கின்றேன்

பொருளுரையில் உந்தன்
பெருமையைப் பார்க்கின்றேன்
மதிப்புரையில் மிளிரும் உன்னை
மன்றாடிச் சேர எண்ணுகின்றேன்

முடிவுரையில் நானும்
முடிந்தவரை எழுதுகின்றேன்
நிறைவில் எந்தன்
நினைவிழந்து நிற்கின்றேன்

சுருக்கினேன் என் சுகங்களை
விலக்கினேன் விருப்பங்களை
மாற்றங்கள் எதுவுமில்லை
மறக்கவும் முடியவில்லை...

ஒரு புறம் நானும் மறு புறம் - உன் தடம் படிந்த இடமும்...!!

அடைமழை ஓய்ந்த வேளை
பனி படிந்த அந்த நாளை
விரல்களால்
அழுத்தித் துடைக்கின்றேன்
மெல்லிய திரைகள் விலக
பிரகாசிக்கின்றாய்....
பெரும்பாலான பொழுதுகள்
ஒண்டியிருக்கிறோம்....
ஒரு புறம் நானும்
மறு புறம் - உன் தடம் படிந்த இடமும்...!!
உனக்காக நான்
தனிமையில் தோய்ந்தவளாய்
இங்கே காத்திருக்கின்றேன்
பழைய பஞ்சாங்களில்
புதிதாக நம்பிக்கை தருவதாய்
ஒரு வார்த்தையைத் தேடியபடி!
எப்போதும் என்னால்
உன் திசைக்கு வர முடியாது!
வெட்ட வெளி கூட
இங்கு சிறை தான்!
காற்றுக்கும் காவலுண்டு!
ஆனாலும்
கூரைக்கு மேலாக
மிதக்கும் பௌர்ணமிப் பொழுதில்
நான் மட்டும்
விழித்திருக்கலானேன்...!
காகம் கரைய
மற்றவைகளும் பின்பற்றின!
ஒளியைப் பிளந்து கொண்டு
ஒலியைத் தீட்டித் தீட்டி
விடியலைப் பெரிதாய் வரைய
மெல்லமாய்ப் பூத்தது சூரியனும்...!
விழிகளின் சந்திப்பில்
என் சாளரத்தை
திறந்து வைக்கின்றேன்...!
என்றேனும்
நீ வருவாய் என்ற
நம்பிக்கையில்.......

கானம் - கவிதை - நீ.....

சிந்தனைகள் ஆயிரமிருக்க
நான் தேடியது எதனை?
கிடைக்காத பொருளுக்கு
இந்த இதயத்தில்தான்
எவ்வளவு வேட்கை?
பார்வைக்கு அப்பால் வளரும்
செடிகள் மருந்தாகிப் பயன் தரலாம்
கண்டறிவதில்தான் காலதாமதம்...!!
தொலைவில் இருக்கும் குன்றெல்லாம்
எப்போதும் பசுமையாகவே தெரிகிறது...
ஏறும்போதல்லவா
கள்ளும் முள்ளுமாய்த் தெரிகின்றது...!!
ஆனாலும் ஏறிவிடுகின்றோம்....
ஏறியே ஆகவேண்டும்
என்ற எண்ணமிருந்தால்
எதையும் அடைந்துவிடலாம்...
என் கூரை எரிந்திருந்தாலும்
உச்சியிலிருக்கும் நிலவை
ரசித்திருப்பவள் நான்...
காசு கொடுத்து ஆப்பிளை வாங்கி
அதற்கு நான் சேவகம்
செய்ய மாட்டேன்..

தயங்கித் தயங்கி
உயிர் வாழ்ந்த நான் - நீ
வந்த அந்த வேளையில்
என்னை உயிர்ப்பித்துக் கொண்டேன்....
இப்பொழுது என் மேனியெங்கும்
வண்ணச் சிறகுகள்..
ஆனாலும்
என் எல்லைக்குள் பயணிக்க
என்னை ஆக்கப்படுத்திக்கொண்டேன்...
என் திசை எப்போதும்
உன் வாழ்திசை நோக்கியே...
என் கண்ணீர் எனக்கு மட்டுமே சொந்தம்...
சவங்களின் சமாதானத்தை ஏற்பதற்காக
ஆயுள் தண்டனை அனுபவிக்கமாட்டேன்...
இந்த கானம் - கவிதை - நீ
வேறு எவை என்னை
வசம் கொள்ளப்போகின்றன...??!!

நமக்கேன் வாதமும், வஞ்சணையும்??

எதை நினைத்தழுவது
இப்பொழுது அதற்கு சாத்தியமில்லை
இன்றைய வாழ்வை நியாயப்படுத்த
நேற்றைய வாழ்வை வருத்தும்
புலம்பெயர்ந்த பொழுதுகளை
தூசி தட்டிப்பார்க்க விரும்பவில்லை....
நீ கொடுத்த நம்பிக்கையே
நாளும் எனக்கு ஊக்கமருந்து....
இதோ ஊக்கத்தில் ஓர் ஆக்கம்....!!
பௌர்ணமிப் பொழுதில்
வெளிச்சமாகும் வானம்!
ஒளியில் குளிரும் பூமி....
பூரணச் சந்திரனையும்
கிரகணம் பிடிக்கும்!
நிலவின் ஒரு பதியை
ராட்சத பாம்பு
மெல்லத் தின்று விழுங்கும்!
தேகத்தில் ஒரு பாதி
பலமிழந்து மறைந்தாலும்
மற்றொரு பாதி மிளிர்ந்து
ஒளியில் சிரிக்கும்!
வந்து போகும் வான்மதியே
வளர்வதையும் தேய்வதையும்
வாடிக்கையாய்க் கொண்டிருந்தாலும்
வஞ்சணையின்றி வழிபார்த்து நடக்கிறது!
வந்து போகும் நமக்கேன்
வாதமும், வஞ்சணையும்??
பிறப்பும் இறப்பும்
பொது நலமே...!
சுயநலமின்றி ஒளி காட்டும்
சூரிய சந்திரராய்
சொற்ப நொடிகளாவது வாழ்ந்திருவோமே...!

Tuesday, August 7, 2012

வாய்ப்பளிப்பாயா வாசகனே..??

நினைவுகள் நிரம்பிய
இதயமிது...!
உன்னைச் சார்ந்த நினைவுகள்
நீக்கமற நிறைந்திருப்பதால்
நோக்கும் காட்சிகளெல்லாம்
பசுமையாய் உன்னைப்போல்...!

எல்லையற்ற வான்வெளியில்
முகில்களின் கூட்டம்
தடையின்றி படர்ந்து
புவியினை நோக்கி தன் நேசத்தை
சாரலாய்க் கொட்டுவதைப்போல்
ஆசைகளற்ற உன்னிதயத்தில்
ஒரு முகிலாய் நானும் படர்ந்து
என் நேசத்தை உன்னிடம்
கொட்டிக் கொண்டேயிருக்க
ஆசைதான்....

சந்தங்கள் பல நூறு படைத்தும்
சந்தேகங்கள் தீரவில்லை காதலில்!
கந்தலாய் இதயமும் நொந்தபடி...
அந்தி வந்த போதும் எந்தன்
சிந்தையில் நிம்மதியற்ற நிலை..!

என் எழுத்துக்களைப் பார்க்காதே
என் எண்ணங்களைப் பார் - என்
இதய வீதியில் உன் சார்ந்த
சம்பவங்கள் மட்டுமே கூக்குரலிட்டு
கும்மியடித்துக் கொண்டிருக்கின்றன...

இமைகள் இணையும் தருணங்களிலும்
அவை பிரியும் நேரங்களிலும்
இடைவெளியில்லாமல் தொடர்கின்றாய்....
மறப்பதற்கும் மறுப்பதற்கும்
மனமின்றி மனம் போகும் - உன்
நிழல் வழியே தொடர்கின்றேன்....

யாசகம் கேட்டு நிற்கின்றேன்
வாய்ப்பளிப்பாயா வாசகனே..??
யோசனை தவிர்த்து - நீ
மெதுவாய் விழியசைத்தால்
நானும் வலியிழந்து மோட்சமடைவேனே....

போராளிப் புருசன்.....

காலங்காலமாய்
உன் கரங்களில்
இந்தப் போராளியின்
கருணை முகத்தைத் தாங்கி
நிற்க இணங்குகின்றாய்...!

சரித்திரமும் சாத்திரமும்
பேசுபவனை - உன்
சாதகத்திற்கு சொந்தமாக்க
ஆருடம் பார்க்கின்றாய்...!

வில்லேந்தி போர் செய்யாதவன்
ஆயினும்
சொல்லேந்தி சொற்ப்போர் புரிபவனை
சொந்தம் கொள்ள எண்ணுகின்றாய்...!

காதல் மொழியில் பேசுவான்
சட்டென்று
கட்டவிழ்ந்த புயலாய்
கச்சாலயத்தின் மகிமையை
பெருமையடிப்பான் - இவனை
காதல் செய்ய விரும்புகின்றாய்...!

பெண்மையே! என் இதயம்
சொல்வதைக் கேள்...

தாய் - மண்ணை மட்டும்
நினைப்பவனிற்கு
பெண்ணை நினைப்பது பெருந்துயரம்..!
"நீ மட்டும் இல்லையடி!
இங்கு வீழ்ந்தபடி கிடக்கிறார்கள்
எம் மக்கள் மாக்களாய்!" - என்று
வேதாந்தம் பேசி மெய்யணைப்பான்....!

இருளின் தனிமையிலும்
தேசத்தை சிந்திப்பான்
உணர்வுகளை உசுப்பேற்றுவான்
மேனிசிலிர்க்கும் நிலையிலும்
மெய்ஞானம் பற்றி வாதிடுவான்...!

தோடிராகத்தை
மோகனமாய் செதுக்கிடுவான்
மோகம் களையும் வேளையில்
மடைதிறந்த வெள்ளமாய்
மணிக்கணக்காய் மனிதர்களின்
மர்மம் பற்றி உரைத்திடுவான்...!

கவிகளில் கலைநயம் புரிவான்
மிரட்சியற்ற விழிகளில்
புரட்சியை ஒளிரச்செய்வான்
மிளிரும் புன்னகையிலும்
புரட்சியை விதைத்திருப்பான்...!!

குழந்தைகளுக்காய் குறைபடுவான்
உழைப்பவர்களைக்கண்டால் உருகுவான்
தேசம் செழிக்க மெனக்கெடுவான்
மோசம் செய்ய நினைத்திடமாட்டான்
ஆனாலும்
கொதிக்கும் சோகத்தை கொட்டித்தீர்க்க
எனைத் தீண்டி தணிந்திடுவான்...!

ஆய கலைகள் அறுபத்துநான்கை
கற்றுத் தேர்ந்தவன்
ஆளுக்குத் தகுந்தாற்போல்
ஆளை அசத்திக்காட்டுவதில்
அழுத்தக்காரன்...

இனமென்று பார்க்காமல்
சினம் கொண்டு சீறுவதில்
துர்வாசக முனிவனிற்கும்
குருவானவன் என் வாசகன்...!

தமிழ்மொழிக்கே தன்னுயிர்
என்று
தனித்து முழங்குவான்...!
உயிரும் மெய்யுமாய்
இருந்திடுவோம்
என்று சொல்லி கரம்பிடித்தான்....
இறுக்கிய கரங்கள் இப்போது
தனித்த நிலையில்
தகவல் விசாரிக்கின்றன...!!!

ஆனபோதும்
வேதநாயகனின் வார்த்தைகளை
வேதமாக ஏற்றுக்கொள்வதற்கு
முன்பிருந்தே நானும்...
"சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்...."
ஒத்துப்போகின்றோம்
இவ்விரண்டிலும் இருவர்..!!

Monday, June 4, 2012

வெட்டப்படுவதையே எதிர் நோக்குகின்றேன்.....
 
வெயிற்கால இரவின் தாக்கம்
முன்பனி பெய்யும் நேரத்திலும்
முழுமையாய் மனதினுள்....
"பகைவருக்கருள்வாய்" வேதாந்தம்
புரியாமல் விழிக்கையில்
சொந்தங்களின் போக்கில்
வேதாந்தம் விளங்குகிறது...
 
மொத்த பொழுதுகளும்
ஒற்றை வரிசையாய்
அழுது தொலைக்கின்றன...!
வரப் போகும் நாட்களை
பயத்தோடு எதிர்பார்த்தாலும்
இதயத்தில் இடைவெளியில்லாத
குருட்டு நம்பிக்கை
எதையும் கடப்பேன் என்று...!
 
மறக்க முடியாத நிகழ்வுகள்
மனக்கண்முன் நிழலாட
இன்னல்களை மட்டுமே சந்தித்த 
பாவப்பட்ட இதயம் பண்பட்டு
அன்பிற்கான வட்டியினை
கடந்த பொழுதுகளிலிருந்து
கொடுக்கக் கற்றுக்கொண்டேன்
 
ஒவ்வொரு முறையும்
யாரோ ஒருவரால்
வெட்டப்பட்டாலும் மீண்டும் 
தழைத்து  விடுகின்றேன்....
சில நேரங்களில், தழைப்பதற்கு
நாட்களாகவோ மாதங்களாகவோ.....
ஆனாலும் தழைத்து விடுகின்றேன்!!
 
இயல்பு நிலையிலிருந்து
எப்போதும் எதற்காகவும்
மாற விரும்பவில்லை..
ஆகவே
வெட்டப்படுவதையே
எதிர் நோக்குகின்றேன்.....
மீண்டும் தழைப்பதற்கு....!! 
 
ஆத்மார்த்த  சிநேகிதனே .......
 
தண்ணீரின்  தழும்பல்கள்
விழிகளில்...
வெப்பத்தின் விழுதுகள்
இதயத்தில்....
ஈரத்தின் போக்குகள்
கன்னங்களில்...
இழப்பின் ஆக்கங்கள்
உச்சத்தில்....
அச்சங்கள் எச்சமாக
மிச்சமிருப்பது என்னவோ
மச்சமான வலிகளின் பொழுதுகள்.....!!
வீறுநடைபோடும் விதியின் 
வலிமையை கிலியோடு கவனித்திருக்க
வார்த்தைகளில் வசப்படுத்துவாய்
வாஞ்சையாய் தலை கோதுவாய்
வஞ்சனையில்லாமல் 
இதயச்சுமை ஏற்பாய்!
துக்கம் மறந்து
இளைப்பாருகின்ற
தாய் மடியாய்
தாங்கிப்பிடிப்பாய்
முழுமையாய் அங்கீகரித்து
அன்பிற்குள் அரவணைப்பாய்....
நீயிருக்கும் தைரியத்தில்
கண்ணீரும் கரைமீறத் தயங்கும்!
ஆத்மார்த்த சிநேகிதமாய்
உன்னைவிட வேறென்ன
வேண்டியிருக்கு...!!

 


கண்வளராயோ கற்பகமே.....
சிறுமீனு கடிச்சிருச்சோ - உன்
மேனியெல்லாம் நடுநடுங்க...
சிறு பூச்சி கடிச்சிருச்சோ - உன்
தேகமெல்லாம் நடுநடுங்க...
வலிபொறுக்காமல்
நீயழுத கண்ணீரு ஆறாகப்பெருகி
அலை அலையா அடிக்குதம்மா...!
கிலியோடு அழுகதகண்ணீரு
குளமாகத் தேங்கியிங்கு
கொசுவெல்லாம் வளருதம்மா...!
பூக்கவிருக்கும் பொன்னரும்பே - என்
பொக்கிசமே கண்வளராய்..!
மனமே மருக்கொழுந்தே
மண்மணக்கும் மல்லிகையே - என்
மைவிழியோடு கண்வளராய்....!!
வாடாத பூவே-வளரும் பிறையே
வருணத்தின் துளியழகே கண்வளராய்...!!
நாலூரும் மயங்கிநிற்கும்
நளினத்தின் நடையழகே கண்வளராய்...
போகாத  நிலமில்லே -நான்
நீந்தாத நீரில்லே, மண்மயங்கும் பேரழகே 
மதி மறையும் முன்னே கண்வளராய்..!
நந்தவனம் பூஞ்சோலை
நாலுபக்கம் உண்டுபண்ணி 

நாள்தோறும் வாசம் மாறாமல்  
காத்திருப்பேன் கண்வளராய்....
பலநூறு வேலைகள்
தெரிஞ்சவரு உங்கப்பா....
பாலும் நீரும் பக்குவமா பிரிப்பாரே....
கலந்திருக்கும் நீரெல்லாம்
உன் கண்ணீர்தானென்றால்
கலங்கித்தான் போவாரே....
விடியும் வரை விசும்பாமல் நீயுறங்கு.!
விடிந்த பின்னே வீதியோரம்
உன் விருப்பம்போல விளையாடு....!!
 


 

Friday, April 20, 2012

இதுதான் காதலா....?

கவிதையின் கருத்துருவே!
’உள்ளன்பு’ உணரவில்லை
உன்னைக்காணும் வரை...
இதற்கு மேல் சொல்லவும்
மொழியில்லை என்னிடம்...
 http://www.geotamil.com/pathivukalnew/images/stories/manakkan_chapter4_1.jpg
என்னை நேசித்து நெகிழ்ந்தவனே...
உன் மனம் நோகாமல் இருந்து
இறக்கத்தான் நினைக்கின்றேன்...
பச்சைப் பசேலெனும் தோட்டத்தினூடே
பலகவி படைக்கும் உன் வார்த்தைகள்
சொல்லும் உன் காதலை...
 
இச்சை கொண்ட இதயம் இனித்திட
இலகுவாய் வார்த்தைகளை வீசுவாயே...
அதுதான் நான் உணரும் கீர்த்தனை..!!
எத்தனையோ விடயங்களை
அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும் இருந்தவள்
முழுமையாய்ப் புரிந்தது
உன்னை மட்டுமே....
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsULuO72-i3i_-ARkAu0HIYNkI96yHRBxbwlNdexWGnxhjhJDJycxnkbj1RbBRHEWDOMYu7XQYJ8IvI_dCQAvnmUPBE83v5GMHGdy52K2WnuT_QiGzroCj_5xSBLdZpFh-Qu8WYmJxkJ7c/s400/Lovely+Heart.jpg
எத்தனையோ கசப்புகள்
நம்மிடையே தோன்றினாலும்
விழிநீரில் தள்ளாடும்போதெல்லாம்
கசிந்துருகி உன்னிருப்பை - என்னிடம்
வார்த்தைகளால் வாஞ்சையாய் கொட்டுவாயே
இதுதான் காதலா....?

சிறு குழந்தை போல் அடம்பிடித்து
அழுது ஆர்ப்பரிக்கும் என்னை
இழுத்து அரவணைத்து - உன்
ஆத்மார்த்தமான அன்பை
உள்ளங்கை சூட்டினால் அழுத்திப்
பிடித்து ஆறுதலளிப்பாயே....
அதுதான் காதலோ....?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEho5xjlzAldILED_z1mtEBGemOcw8JzL1rxKdMcMn21YApeMhooUmnu5gzrHGm0NCAY1OinrYazoSU-c_A7t6KP-BfUIhYzgrV1jv0kR748co1FELhThIO09RI918ksS7rJ0NGzL3g4OeJn/ 
 
நலமின்றி துவண்டிருந்த நேரத்தில்
நொடியும் விலகாமல் - ஒரு
தாய்மையாய் தாங்கினாயே....
மீண்டும் நலமிழக்க இதயம் ஏங்குகிறது!
காதலின் கவித்துவத்தை - உன்
வாசனை வரிகளால் சுவையோடு
நீ சொல்லி இதழ் பதித்த - என்
காதுமடல்கள் இன்னும் சிவந்தபடி....

உனைப் பிரியும் நேரங்களிலெல்லாம்
விழிகளிலிருந்து பிரியும் நீரை - உன்
பார்வையினால் தடுத்து நிறுத்தி
எவரும் அறியாமல் தலையசைப்பாயே...
அந்த தருணங்கள் மீண்டும் வேண்டாமடா!
என்னை ஆறுதல் படுத்தி - நீ
கலங்கிபோய் கையசைப்பாயே....
இந்த நிறைந்த காதலிற்கு முன்
வேறெதுவுமே எனக்கு மிகச்சாதாரணமடா......











 


Thursday, April 19, 2012

தொடமுடியாத தூரத்தில் நீ .........

உன்
நினைவுகளால் நிரம்பிய
இந்த இடத்தை
சுற்றி சுற்றி பார்க்கின்றேன்
நடந்த நிகழ்வுகள்
முன்னும் பின்னும் சுழல
கவிதையாய் மிதக்கின்றேன்....
 
கவலைகளில் காயம் படிந்த
கனத்த இதயம் - உன்
விழிகள் வீசிய நேசத்தில்
அடுத்தவர்க்கு அழகு சேர்க்கும்
பட்டாம்பூச்சியாய் ஆனது!
கானகத்தினுள் ஊடுருவி
ஓசை தரும் காற்றைப்போல்
எனக்குள் ஊடுருவி
இசையாய் பரிணமிக்கின்றாய்...
எழுதிய எண்ணங்களை
வார்த்தைகளாக சேகரித்து - உன்
வாசிப்பிற்காக வைத்திருக்கின்றேன்
என்றாவது ஒரு நாள் வந்து
பார்வையால் மீட்டிச் செல்வாய்
என்ற நம்பிக்கையிலேயே.....
 
தொடமுடியாத தூரத்தில்
நீ இருந்தாலும்
இரு இமைகளுக்கான
இடைவெளியாக எண்ணியே
இணக்கமாகின்றேன்...
மோகத்தைக் கொல்ல முடியாமல்
தாகத்தைத் தீர்த்துக் கொள்ள
தேகத்தைக் கொல்லும்
மாந்தர்களுக்கு மத்தியில் - நீ
ஒரு புத்தனாய்
வலம் வருகின்றாய்....
 
எங்கு திரும்பினாலும்
நீயாகவே தெரிகின்றாய்....
யாருடன் பேசினாலும் எதிரில்
நீ பேசுவதாகவே நிற்கின்றாய்...
உலகமே மறந்து போய்
உன் நினைவுகளே
உலகமாய்த் தெரிகிறது....
என் பாரங்களை
உன்னிடம் இறக்கிவைக்கும்போது
தேவனின் கைகளில் தஞ்சமாகும்
ஆட்டுக்குட்டியாய் உன்னிடம்
அடைக்கலம் ஆகின்றேன்....

Wednesday, February 1, 2012

அனைத்துமே அந்நியமாய்....




விழிகள் விண்மீன்களை

வருடினாலும்

விரல்கள் என்னவோ - உன்

பெயரோடு விளையாடுகின்றன!

அர்த்தமானதாய்த் தெரிந்த

அந்த நேரங்கள் எல்லாம் - இன்று

அபத்தமாய்த் தெரிகின்றன!

அந்த நேரத்திற்கு அப்புறம்

அந்நியமாயிற்று அனைத்துமே..!

கல்லடிபட்டு பெயர்ந்த

கால்விரல் நகத்தின் காயத்தில்

அருகம்புல் மாட்டிக்கொண்டது போன்ற

வலியாய் உன் நினைவுகள்!

நினைவுகளில் எத்தனையோ

சூழ்ந்திருக்கும்

சுகம் துக்கம் எல்லாம்

எப்படியொன்று சொல்லிட

முடிந்திடவில்லை!
எழுத நினைத்தவையெல்லாம்

மனசில் நிறைந்துள்ளது!

எழுத எழுத

சுகமும் துக்கமும்

உன்னைச் சார்ந்தவையாகவே

சுழல்கின்றன.....

மரத்துப்போகவைக்கும் - உன்

போக்கினில்

மெல்லிய உணர்வுகளும்

மெல்லச்சாகின்றன!

மழைத்தண்ணீர் இல்லாத

கருவேலமரமாய்

இதயமும்வறண்ட நிலையில்...!!

எத்தனை வெறுமைகள்

என்னுள் வந்து சேர்ந்தாலும் - உன்

பேறுகளைக் கேட்டு

பெருமையடைகின்றேன்...

உனக்கென்று இருக்கும்

வார்த்தைக்கலைகள்

என்னிடம் சிதைந்தபடி

சிலந்தியாய்ப் பின்னியுள்ளன!

நினைப்பதும், நடப்பதும்

வேறாக இருந்தாலும்

நினைவுகள் எல்லாம்

வேராய் நீண்டுகிடக்கின்றன!

கனவுகளை இழந்துவிட்ட

கண்களுக்கும், இதயத்திற்கும்

காலங்கள் எப்படியிருந்தால் என்ன??!!

Tuesday, November 29, 2011

உயிரோட்டமாய் ஓர் கடிதம்...

http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/s320x320/313561_248546288540565_100001555869268_672078_458079142_n.jpg
கதவோரம் கதவாய்
நின்று கொண்டிருக்கும் - என்
இனிய செல்லத்திற்கு....

சேகரித்து வைக்கின்றேன்
கனவுகளை பொக்கிசமாக....
இறந்து போன நிமிடங்களை
இயக்கிப் பார்க்கும்
இதயத்து நினைவுகள்....
இரவின் பிடியினில்
இலவசமாய் தாரை வார்க்கும்
பனித்துளிகளின் மத்தியில்
உனக்கு
உயிரோட்டமாய் ஓர் கடிதம்...

உடல் நலம் எப்படி? - இங்கு
அது நல்லபடி.....
மன நலம் எப்படி? - இங்கு
அது உன் வசப்படி....
விரைவில் உன்னிடம்
நான்....
வந்தபின் நம் செயல்பாடுகள்
இப்படியே.....

காற்றுக்குள் ரகசியமாய்
காதல்கதை பேசிடுவோம்
கவலைகளைத் தொலைத்துவிட்டு
கனவுகளை விதைத்திடுவோம்
பொன்தமிழில் பாடிடுவோம்
பூமியெங்கும் வலம் வருவோம்

வரவொன்றும் செலவொன்றும்
வகை வகையா செய்திடுவோம்
வயசோட கனவுகளை
வரமாக செதுக்கிடுவோம்
சுதி வேறு லயம் வேறாய்
சுவரமாக இணைந்திடுவோம்...

மவுனத்தின் மயக்கத்தை
மனசாலே போக்கிடுவோம்
பருவத்தின் தோட்டத்திலே
பல கலைகள் விளைச்சிடுவோம்
வெட்கங்கள் சூழ்ந்தாலும்
வேலியதை கலைந்திடுவோம்

உருவத்தின் நிழல்களை
உயிராக வளர்த்திடுவோம்
உலகத்தின் பார்வையினில்
உணர்வுகளை செதுக்கிடுவோம்
பழங்காதல் பெருமைகளில்
புதுவாழ்வைக் கண்டிடுவோம்


பொழுது விடியவேண்டும்....

http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/388516_248499145211946_100001555869268_671744_2134297394_n.jpg

கூரையிலிருந்து
விழும் நீரை சேமிக்க
பல வடிவப் பாத்திரங்களை
பாதுகாப்பாய் வைக்கின்றேன்!
விழுந்த நீர்
உடைசல் வழியே
வீட்டிற்குள் ஓர்
ஓடம் அமைக்கிறது..!

ஒட்டுத் துணியும்
நனைந்து கொண்டிருக்க
விட்டுப்போன
நெருப்பை மூட்ட முயற்சிக்க
நனைந்த தீக்குச்சி
நக்கலாய் நகைக்கிறது!

ஈரமான மண் அடுப்பினுள்
குளிருக்கு பயந்து போய்
ஒண்டியிருக்கும் பூனைக்குட்டியை
புறப்பட வைக்க
மனம் இசையவில்லை!
விரிந்த சுவர் வீரியமாய்
பதம் பார்ப்பதற்குள்
வீட்டை சரி செய்ய வேண்டும்...

காலமெல்லாம் காதல் செய்து
வாழ்ந்து பார்க்க கரம் பிடித்து
கூட்டி வந்தவனை
காலன் கூட்டிச்சென்றுவிட்டான்
காலராவினில்...
காரணத்தைக் கேட்டால்
சுற்றுப்புறம் தூய்மையில்லை
வந்தது பதில் வலுவாய்...

வக்கத்த எங்களைக் காட்டி
ஓட்டுக்கேட்ட சீமான்கள்
எங்களையும் கவனிக்கவில்லை
எங்கள் சுற்றுப்புறத்தையும்
சுற்றிப்பார்க்கவில்லை
அவர்கள்
சுற்றுவது எல்லாமே
அயல் தேசமே....

உள்ளூரில் உப்பிற்குக் கூட
வழியில்லாமல்
நாங்கள் பிழைப்பு நடத்துகிறோம்...
பொறுப்பாய் வாழ்ந்த
மச்சான்
பொருமையின்றி
பூமியிலே எனைத்தவிக்கவிட்டு
பரலோகம் சென்றுவிட்டான்

நாளெல்லாம் வாழ்வது
நரகத்தில் என்றால்
நனைந்த பாயின்
ஓரங்களில்
நாயகனின் வாசமோ நளினமாய்...

ஆசையாய்ப் பிறந்த மகனையும்
மச்சானின் மானத்தையும்
அணைத்துக் கொண்டு
கிடக்கின்றேன்...
அடுத்த ஈரம் கண்களின்
வழியே மகனை நனைப்பதற்குள்
பொழுது விடியவேண்டும்
எங்களுக்கும் சேர்த்து.....

Friday, November 25, 2011

இன்னொரு பிறவியும் வேண்டும்......

http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/386738_246304122098115_100001555869268_666884_2085412291_n.jpg


என் காலத்திற்குரியவனே....
நீ
இமை விரித்துப் பார்க்கையிலே
என்னிதயம் மட்டுமல்ல
என் வாழ்வும் ஒளி பெறுகிறது...
ஆனால்
என் பார்வையோ பழுதாகிறது...
உன்
வருகைக்குப் பின்னேதான்
நந்தவனங்களாய்
என் காலங்கள்
பூத்துக்குலுங்கின...
நொந்த இதயமோ
துளிர் விட்டு
தூறலாய் இசைத்தன....
நீ
தலை நிமிர்ந்து நடக்கையில்
உன் பாதையின் நிழலாய்
தலை குனிந்தே தொடர்கின்றேன்
நீ
அடி எடுத்து உள்ளே நுழைந்தாய்
என் இல்லமும் இதயமும்
அகலிகைகளாய்
சாப விமோசனம் பெற்றன....
உனக்கு
பௌர்ணமி இரவுகள்
இன்பத்தை இழைத்தாலும்
எனக்கு
உன் பொன் தமிழ் மட்டுமே
எழுச்சியை அளிக்கின்றது...
எத்தனையோ
சிந்தனைகளில் - நீ
ஆழ்ந்திருந்தாலும்
இலைமறை காயாக
உன் புன்முறுவலை
எனக்கு விட்டுச்செல்வாயே
அதை மீண்டும் வாங்குவதற்கு
இன்னொரு பிறவியும்
வேண்டுமென்று - உன்
ஆண்டவனை அணுகுகின்றேன்...
உன்
வெயில்காலப் பார்வையில்
பயந்து ஒதுங்கி பயணித்தாலும்
உன்
குளிர்கால மவுனத்தில்
குறைந்தே போகின்றேன்....
ஆயினும்
எந்த நிலையிலும்
என்னோடு நீயிருந்தால்
என் காலங்கள்
வசந்தமாகும்...
என் உணர்வுகள்
உயிர்ப்பெறும்!

Sunday, November 20, 2011

உன் கவியே ஆறுதலய்யா......

http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/304122_243208315741029_100001555869268_658261_1555613096_n.jpg

வாக்கு சொல்லி வன்மையாய் வம்பளந்தவரே
போக்கு காட்டி பொழப்புத்தனம் செய்தவரே
இட்டுக் கட்டிப் பாடுற புள்ளையை
சட்டென விட்டுப் போறதென்னவோ?

பட்டணத்து வண்டியிலே பவுசாகப் போறவரே
விரைவு வண்டி நீயேறி விரைவாகப் போகையிலே
குருத்தான எம் மனசும், சிறுத்தான என்னுடம்பும்
கருத்தேதான் போகுமய்யா; கரையேறி வாருமய்யா

கரை வேட்டி கட்டிக்கிட்டு கரம் தூக்கி
கடவுளை நீ கும்பிடுகையில்
கருப்பண சாமியா கண்முன்னே
காட்சியா நிற்குறீரே......!!

ஒத்தையிலே நானிருந்தாலும்
சத்தான உம் பேச்சும் சங்கடமில்லாமலே
முத்தாக முறையாக இனிக்குமய்யா...
மத்ததெல்லாம் மறந்தேதான் போச்சுதய்யா....

சொப்பனத்திலே நான் மிதந்தேன்
சொந்தமாக உனை நினைச்சு
கப்பங்கட்டும் அடிமை போல
கருக்களிலும் காத்திருப்பேன்...

ஊட்டி மலைச் சாரலிலே
பாட்டுக் கட்டி இருந்திருப்பேன்
அலையடிக்கும் கடல் போல
அடிமனசில் தவிச்சிருப்பேன்

உம் பேச்சு கேட்காமல்
ஒரு நாழி இருந்ததில்லை!
மௌனத்தில் நீ போய் உட்கார்ந்தா
மரணத்தோட பேச்சு வார்த்தை நடத்திருவேன்....

மூவாறு நாளைக் கடத்திட
வழியேதும் தெரியவில்லை....
மூணு ஜென்மம் கடந்தது போல்
முழியும்தான் பிதுங்குதய்யா...

பொட்டச்சியின் பொலம்பலில்
பொட்டல் வெளியும் நடுங்குது
சொந்தமென்று யாருமில்லை - என்
சொர்க்க புரியும் நீதானய்யா...!

கால நதியின் கார்மேகமே - என்
கண்ணீரின் அருமருந்தே
கரம் பிடித்து நீ சொன்ன - உன்
கவியே என் ஆறுதலய்யா...!

தாலி ஒண்ணு கட்டிக்கிட்டு
தாரமாய் உன்னோட வாரேனய்யா
தங்கமகன் நீ இல்லேனாலும்
தரம் கெட்டுப் போகமாட்டேனய்யா.....

Wednesday, November 16, 2011

உனக்காய் ஒரு கவிதை

http://img.phombo.com/img1/photocombo/6644/cache/Art_of_Painting__Chinese_Girl_Illustration_wallpapers_1280_x_960_pictures-4.jpg_romance_girl_bi41162_wallpaper_display.jpg

வீரியமாய் பெய்யும் மழைக்கு
ஒரு கவிதை
மெலிதாய் விழும் தூரலுக்கு
ஒரு கவிதை
சில்லென்று வீசும் தென்றலுக்கு
ஒரு கவிதை
மெல்லமாய் எட்டிப்பார்க்கும் கதிரவனிற்கு
ஒரு கவிதை
வெட்கமாய் மறைந்து செல்லும் நிலவிற்கு
ஒரு கவிதை
மழையை சபித்துப் பறக்கும் பட்சிக்கு
ஒரு கவிதை
பரந்து கிடக்கும் இலைச்சருகுகளுக்கு
ஒரு கவிதை
மழை நீரில் விளையாடும் மழலைக்கு
ஒரு கவிதை
என்னை அறிமுகம் செய்த அப்பா அம்மாவிற்கு
ஒரு கவிதை
இத்தனையும் கொடுத்த பரம்பொருளுக்கு
ஒரு கவிதை
பார்த்து ரசிக்கும் பலவற்றுக்கு
ஒரு கவிதை
தினமும் இப்படித்தான்
எழுத எத்தணித்து அமர்கின்றேன்
காகிதத்தில் நீ...
அத்தனையும் மறந்தபடி
ஆரம்பிக்கின்றேன் மறுபடியும்
உனக்கான கவிதையை!!

Saturday, October 8, 2011

கண்ணீரே அருமருந்து......


துணையும் துடுப்புமின்றி
வான கடலில்
காற்றின் வேகம் கணிக்காமல்
நீந்திச் செல்லும்
விந்தை நிலவாய் - நானும்
நீந்திச் செல்கின்றேன்....
எதிரில் வருவதும் போவதும்
அறியவில்லை...!!
ஆயிரம் ஆசைகள் மனதினில்
சுழலுது... - ஆயினும்
அற்ப ஆசையும் கண்ணுக்கு
மறையுது!
கதிரொளி, நிலவொளி
இருந்தென்ன லாபம்?
கண்ணொளி மிளிராமல்
மங்கியே கிடக்குது!
உள்ளம் அமைதியின் உருவகமாக
தென்றலின் துணையோடு
நீந்துமென நினைந்திருக்க
ஏமாற்றமே ஏகாந்தமாய்
வியாபித்திருக்கிறது!
சிறுமீனை இரையாக்கும்
பெரிய மீன்களையே பெரும்பாலும்
பார்த்துச் சலிக்கின்றேன்....
நத்தையைத் தின்னும் நாரையாய்
உள்ளத்தைக் குதறும் உயர்ந்தோரே
நிறைந்திருக்கின்றனர்...
உடையை மாற்றுவதுபோல்
உள்ளத்தில் புதைந்திருக்கும்
நேசத்தை மாற்ற முடியாமல்
நிசத்தை நினைந்து நிதானிக்கின்றேன்....
முள்ளையும் மலரையும்
தொட்டுப்பார்த்து குணம்றிந்தவள்
நின்னைத் தொடாமலே
நின் மனமறிந்தவள் நானடா...
விளக்கைத் தொட்டு
சாகும் விட்டில்போல் - உன்
நினைவாலேயே சாகின்றேன்...
விரிசலில் வளரும் விதையாய் - உன்
பிரிவினில் என் காதலை
கண்ணியமாய் வளர்க்கின்றேன்....
ஆறுதலுக்கு என் கண்ணீரே
அருமருந்தானதால்
அழுது தொலைந்தே தெளிகின்றேன்...




Sunday, September 18, 2011

எல்லை என் தொல்லைக்கு எப்போது?

http://img.phombo.com/img1/photocombo/6644/cache/Art_of_Painting__Chinese_Girl_Illustration_wallpapers_1280_x_960_pictures-8.jpg_Art_paintings_of_girls_b764_display.jpg

வெள்ளி மறைந்த நேரம்
ஒளி சுமந்த கதிரவன்
வீதியெல்லாம் சிவக்க
விதிகாட்டும் வழியினிலே
உறங்காத விழிகளும்
சிவப்பாய் விழித்தன!

மதியும் மறைந்து
அலைகடலின் ஆழத்திற்குள்
அதிவிரைவாய்ப் பயணிக்க
எண்ண ஓட்டமும்
அதிவேகமாய் முந்தைய இரவின்
நிகழ்வை நினைத்து தடுமாறியது!

உன் எண்ணச் சிதறல்களால்
கல்லாகிக் காணாமல் போனேன்
காயங்கள் வடுவாகிக் கண்டேன்
கண்ணீரும் வற்றிப்போக
வழியில்லாமல் போனேன்.....

என்
கனவுக்கும் கால் ஒடிந்தது
கண்டு இடிந்தேதான் போனேன்
ஆறுதல் சொல்ல ஆளின்றி
ஆழிப்பேரலையானேன்....
http://img.phombo.com/img1/photocombo/6644/cache/Art_of_Painting__Chinese_Girl_Illustration_wallpapers_1280_x_960_pictures-9.jpg_Art_paintings_of_girls_bi41153_display.jpg
கற்பனை சுகத்தில் மயங்கும் - உனக்கு
மனச்சோகங்கள் எப்போதும்
கலக்கத்தைத் தருவதில்லை...
அர்த்தமற்ற செயலுக்கு
வார்த்தைகளால்
அக்கினி மழை பொழிந்து
வஞ்சிக்கின்றாய்!

உதடு மீறிய உனது சொற்களால்
புதைந்து போன ரணங்களும்
புத்துயிர் பெறுகின்றன!
உன்னோடு உரையாடும்
நேரமெல்லாம்
நெருப்புக்குளியல்தான்!
இறுதியில் சாட்சி சொல்ல
சாம்பல் கூட மிஞ்சுவதில்லை....

வாடைக் காற்றின் வசந்தத்தில்
வஞ்சியிவளின் உள்ளமும் எரிய
சூழ்ந்து நிற்குமிடமெல்லாம்
கருகிய வாசனை!
வாடையில் வருந்திய மயிலுக்குப்
போர்வை தந்த புண்ணியபூமியில்
பிறந்தவன் தானே நீயும்!!
http://img.phombo.com/img1/photocombo/6644/cache/Art_of_Painting__Chinese_Girl_Illustration_wallpapers_1280_x_960_pictures-15.jpg_Art_paintings_of_girls_bi638_display.jpg
ஈர உணர்வுகளை
இழந்து போன உனக்கு
இதயத்தின் வலியை
உணர முடியாது!
வலி மிகுந்த எனக்கோ
விதி வலியது என்பதும்
உணரமுடிகிறது!

போக்கிடம் எனக்கில்லை
போகுமிடம் தெரியவில்லை...
எல்லை என் தொல்லைக்கு
எப்போது?