Wednesday, February 1, 2012

அனைத்துமே அந்நியமாய்....




விழிகள் விண்மீன்களை

வருடினாலும்

விரல்கள் என்னவோ - உன்

பெயரோடு விளையாடுகின்றன!

அர்த்தமானதாய்த் தெரிந்த

அந்த நேரங்கள் எல்லாம் - இன்று

அபத்தமாய்த் தெரிகின்றன!

அந்த நேரத்திற்கு அப்புறம்

அந்நியமாயிற்று அனைத்துமே..!

கல்லடிபட்டு பெயர்ந்த

கால்விரல் நகத்தின் காயத்தில்

அருகம்புல் மாட்டிக்கொண்டது போன்ற

வலியாய் உன் நினைவுகள்!

நினைவுகளில் எத்தனையோ

சூழ்ந்திருக்கும்

சுகம் துக்கம் எல்லாம்

எப்படியொன்று சொல்லிட

முடிந்திடவில்லை!
எழுத நினைத்தவையெல்லாம்

மனசில் நிறைந்துள்ளது!

எழுத எழுத

சுகமும் துக்கமும்

உன்னைச் சார்ந்தவையாகவே

சுழல்கின்றன.....

மரத்துப்போகவைக்கும் - உன்

போக்கினில்

மெல்லிய உணர்வுகளும்

மெல்லச்சாகின்றன!

மழைத்தண்ணீர் இல்லாத

கருவேலமரமாய்

இதயமும்வறண்ட நிலையில்...!!

எத்தனை வெறுமைகள்

என்னுள் வந்து சேர்ந்தாலும் - உன்

பேறுகளைக் கேட்டு

பெருமையடைகின்றேன்...

உனக்கென்று இருக்கும்

வார்த்தைக்கலைகள்

என்னிடம் சிதைந்தபடி

சிலந்தியாய்ப் பின்னியுள்ளன!

நினைப்பதும், நடப்பதும்

வேறாக இருந்தாலும்

நினைவுகள் எல்லாம்

வேராய் நீண்டுகிடக்கின்றன!

கனவுகளை இழந்துவிட்ட

கண்களுக்கும், இதயத்திற்கும்

காலங்கள் எப்படியிருந்தால் என்ன??!!

1 comment:

Anonymous said...

''..கால்விரல் நகத்தின் காயத்தில்


அருகம்புல் மாட்டிக்கொண்டது போன்ற


வலியாய் உன் நினைவுகள்!...''
சுப்பர் வரிகள்...நல்ல கவிதை. வாழ்த்துகள்
வேதா. இலங்காதிலகம்.