Monday, August 13, 2012

நினைவாலயம்.....

அன்பென்னும் ஆயுதம்
நுட்பத்திலும் நுட்பமானது
அன்பென்ற விதையை
இருவரும்
தூவிக்கொண்டோம்..- செடி

துளிர்த்து வளர்ந்தது
நாளுமாய்...
உன்னை நேசித்தவள்
உலகையே நேசிக்கலானேன்
அன்பே அனைத்துமாய் நின்றது...
அன்பே வேருமாகி
அன்பே விருட்சமுமாகி...
நமது அன்பென்னும் ஆலயம்
படர்ந்தன எல்லையில்லாமல்....
நிலைகொள்ளாமல் வீசுகின்ற
காற்றினைப் போல்
அங்குமிங்குமாய் அலைக்கழிந்த நான்
உன் அன்பினால்
உன்னைச் சுற்றியே பனியானேன்..
என் இமைகளின் துடிப்பிலும்
உன் பெயர் அன்பாய் ஒலிப்பதால்
வார்த்தைகள் இல்லா கவிகளையே
வடிவமைக்கின்றேன்....
உன் அன்பான அசைவுகளில்
என் ஆத்மாவும் அசைவதால்-என்
சீவனின் அலைகள்
உன் பாதங்களைத் தொட்டே
பயணிக்கின்றன....
அன்பின் வழியில்
விருட்சமளவு உன்னைப் புரிந்திருந்தாலும்
என் புரிதலுக்கு அப்பால் அல்லவா!
நீ இருந்தாய்! நீயொரு மர்மதேசம்!
இந்த இரகசியமே - இன்றும்
நம் காதலைக் காத்து வருகிறது!
தண்ணீராய் நின்றவனே...
என் செந்நீரில் கலந்தவன் நீ!
இந்த இரத்தத்தின் இவ்வுறவு - ஒரு
அன்பின் - காதலின்
நினைவாலயமாய்த் திகழட்டும்...

உயில் ஒன்று என்னவனிற்கு.....

உயிரில் கலந்த என்னவனிற்கு
உயில் ஒன்று எழுதுகிறேன்
துயில் கொள்ளும் முன்பு - இந்த
மயில் சொல்லும் வார்த்தைகளை
வாசித்து வசப்படு...!


கண்ணிற்குத் தெரியும்
பூக்கள் அல்ல நீ.....
காய்த்துத் தொங்கும்
கனியல்ல நீ....
மாறாக
மண்ணுக்குள் நெளிந்தோடும்
வேர்களல்லவா நீ..!!

பட்டாடை உடுத்தி பகட்டு பேசும்
பெண் பித்தனல்ல நீ.....
எளிய ஆடை அணிந்து
ஏற்றமிகு செயல் செய்யும்
செயல் வீரனல்லவா நீ..!!

செய்யும் காரிய காரணங்களை
கருத்தாய் என்னோடு பகிர்வது
உன் பெருமையென்றால்
உனக்கு மட்டும் சேவகம் செய்து
படைத்தளபதியாய்
இருப்பதில் எனக்கும் பெருமையே....

என் நெஞ்சோடு உனை
புதைத்து வைத்திருக்கிறேன்...
நீ பத்திரமாய் இருக்கிறாய்!
என் எண்ணங்களோ
அலைந்து திரிகிறது
உன் பின்னால்....

ஆதவனின் முகங்கண்டு
அடங்கிப்போகும் வெண்மதியாய்
அம்புலியைக் கண்டு மலரும் அல்லியாய்
மாறிக்கொண்டேயிருக்கின்றேன்....

என் இதயத்தை உடைத்து
வெளியேறிச் செல்ல
உன்னால் ஒரு போதும்
இயலாது....




மனதில் அல்ல மாயவனே!
ரத்தத்தில் கலந்து
உடம்பு முழுக்க
ஓட
வைத்திருக்கிறேன்
என் காதலை....


அது எப்போதும்
உன்னை காக்கும்
என்ற எண்ணத்தோடு
காத்திருக்கின்றேன்
உன் காதலுக்காய்....

பொய் ஒன்று சொல்கின்றேன்....

விடியலில் வரும்
கதிரவனைக் கண்டு
நட்சத்திரங்கள் வேண்டுமானால்
காணாமற் போகலாம்!
ஆனால்

என் விடியலின்
விடிவெள்ளியே நீதானே...
ஒளியினில்
இருள் மறைவது போல்
உன்
ஒலியினில்
என்
சோகம் மறைந்தே போகலாம்...

ஓடி வரும் நதி
எதிரில் இருக்கும்
தடைகளைக் கடந்து
இளைப்பாறாமல் கடலை நோக்கி
பயணிப்பது போல்
என் இளைப்பாரற்ற
பயணமும்
உன்னை நோக்கியே இருக்கும்..
எப்பொழுதும்
எனது எல்லாக் காரியங்களும்
நீ இல்லாத போது
நிகழ்ந்து விடுவதில்லை...
ஒவ்வொரு முறையும்
முயன்றுதான் பார்க்கிறேன் ...
இங்கு
ஆணிவேரே அறுந்துபட்டால்
மரம்
எங்கிருந்து தழைக்கும்?
நீயே
இல்லையென்றால்
நான்
எங்கிருந்து வாழ்வது?
நான் உன்னிடம்
துளையில்லாத மூங்கிலாக
இருக்க விரும்பவில்லை
உன் உயிரின் ஒலியில்
இனிய இசையைத் தரும்
புல்லாங்குழலாய்
இருக்கவே விரும்புகிறேன்...
உன்னைக் காணும் போதெல்லாம்
மௌனத்தில்
என் மனம் பேசுவதை
நீ
அறியவில்லையா? 
உயிருக்கும் உடலுக்கும்
உள்ள தொடர்புதான்
உனக்கும் எனக்குமான தொடர்பு!
எனது கவிதைகள்
அறியும் என் நேசம் - ஆனால்
எப்போதும் என்னை
அறிந்ததில்லை நீ...!!
இருப்பினும்
இன்னும் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
நான்தான் உன் உலகம் என்று....!!

அன்பான அப்பா......

சிறு வித்தில் எனக்கு
இந்த பிரபஞ்சத்தைக் காட்டிய
பெருந்தகையே....
திசைகளறியாப் பருவத்தில்
திங்களாய் ஞாயிறாய்

வழிகாட்டிய வாசுதேவரே...
இதுவா அதுவா
என்று தாவிக்குதிக்கக்காத்திருக்கும்
மதில் மேல் பூனையாய்
இருந்திருந்த வேளையில்
விரல் பிடித்து
நல்வழி பார்த்து குதிக்கச்செய்த
குறுந்தொகையே....
ஒரு நூலின் நுனியில் நான்
மறு நுனியில் உன் கரங்கள்
எல்லையற்ற சுதந்திரத்தை
எடுத்துக்கொடுத்து
எல்லை கடக்க எத்தணித்தால்
லாவகமாய் இழுத்துப்பிடித்து
இதமாய் எடுத்துரைப்பாயே
அந்தப் பக்குவம் யாருக்கு வரும்?
வெயில் மழை பாராமல்
எங்களுக்காக உழைத்து
ஓடாய்ப்போன ஒப்பில்லா
உப்பிலியப்பரே...
எத்தனை ரணகளங்கள்
அத்தனையும் எங்களுக்காய்
சுமந்த சுக்கிரீவரே....
சுகத்தையும் துக்கத்தையும்
ஒன்றாய்ப்பார்க்க கற்றுக் கொடுத்த
கற்பக விருட்சமே.....
காலங்கள் எத்தனையானாலும்
அத்தனை காலங்களிலும்
எங்களோடு நீ வரவேண்டும்...
எத்தனை பிறப்பானாலும்
அத்தனை பிறப்பிலும்
”அப்பா” நீயே அப்பாவாகவேண்டும்
வரம் வேண்டி வணங்குகின்றேன்

உன்னை.....!!

வடதிசையில் எனக்கு சூரியோதயம்....

உள்ளங்கைக்குள் உலகமாம்
எல்லாம் கணப்பொழுதினுள்
எத்தகைய பொய்யிது..!
எப்போதும் உன் நினைவான
தருணங்களுடனேயே இருப்பதால்
நினைவு சுழற்சிக்குள்
கனவுப் பொருளாகிக் காணாமலேயே
போகின்றேன்....
எனக்கும் உனக்குமான
இடைப்பட்ட பயணமோ
உயிர் துறக்கும் தூரம்
யார் அறிவார் இதனை?
நுனிப்புல் மார்கழியில்
பனித்துளியால் கொஞ்சப்படும்
அந்த அழகான காலையை
பார்க்கும் பொழுது - உன்
நேசத்தின் வாசம்
என்னை மெல்லமாய்
தழுவிச் செல்லும்....!
ஒவ்வொரு நாளும்
என்னை செதுக்கி வைத்து
சேமித்துக் கொண்டிருக்கின்றேன்
நீ வந்து நிற்பாய்....- ஒரு
சில வினாடிகளிலேயே
உன் இதழ் பிரியா புன்னகையில்
நான் மொத்தமாய் கலைந்து கிடப்பேன்...
நீ விதைக்கும் புன்னகையில்தான்
அன்பின் அகராதியை அறிகின்றேன்...
உன்னைப்பற்றிய தீராத நினைவுகள்
திமிறியபடி கிடப்பதால்
மறதிக்கு மார்க்கமின்றி அலைகின்றேன்......
என்னுடைய நேற்று மட்டுமல்ல
இன்றும் - நாளையும் கூட
நீயாகத்தான் இருப்பாய்....!!
நிலவொளிரும் இரவுகளில்
வடதிசையிலிருந்து
பாதி இரவுகளுக்கு அப்பால்
கண்விழித்து - நீ
எழுதுகிற கடிதங்களில் எல்லாம்
உன்
காதலைக் கொட்டித் தீர்த்திருப்பாய்!
அப்போதெல்லாம்
வடதிசையில் தான்
எனக்கு சூரியோதயம்....!!
அன்பே....
எவை கிடைத்தாலும்
எவற்றை இழந்தாலும்
பசிக்கு குட்டை நீரைக்குடிப்பதாய்
போக்குக்காட்டிய
காதல் மான்களாய்
விட்டுக்கொடுத்து வாழும்
நம் காதல் யாரிடமிருக்கு...!!??

Friday, August 10, 2012

தாய்மையின் வாசனை...


மணமாய் இருக்க வேண்டும்
அதற்காய் கூடுதலாய்
முகத்திற்கும், உடம்பிற்கும்
அத்தோடு ஆடைகளுக்கும்
சேர்த்து கலந்து
வாசனைத் திரவியங்களை
அள்ளி அப்பிக் கொள்கின்றாள்...

வியர்வையின் வேகம்
வெள்ளமாய் வெளியேறினாலும்
அத்தனையையும் மீறி
ஆடைகளுக்குள்ளிருந்து
சொட்டு சொட்டாய் அலுவலக
கோப்புகளில் இறங்குகிறது
அவளின் தாய்மையின் வாசனை....

அவசர அவசரமாய் அலுவலக
கழிப்பறையில் நுழைந்து
கண்ணீரோடு பீச்சிவிடுகிறாள்...
பாலில் தெறிக்கிறது
பசியைத் தின்றலறும்
பச்சிழங்குழந்தையின் அழுகுரல்.....

காவு வாங்கும் காதல்....

ஒவ்வொரு நாழிகையும் - நீ
அணிந்து கொள்ளும் முகத்திரையில்
உன் காதல் என்னைக் காவு வாங்குகிறது!
இதய தாகத்திற்கு
நீர் வார்க்க உன்னையழைத்தால் - என்
விழிகளுக்கு நீர் வார்க்க விரும்புகிறாய்...
உன்னுடன் நானும்
என்னுடன் நீயும்
பொருதிய முடிச்சுகள் இறுகியிருக்க
முடிச்சவிழ்ப்பிற்கு
ஆள் சேர்த்துக் கொண்டிருக்கின்றாய்...
கீதையை கரைத்துக் குடித்திருக்கிறேன் என்பாய்
சீதைக்காக வருந்துகிறேனென்று மெனக்கெடுவாய்...
சிலம்புக்கும் விளக்கம் சொல்வாய்...
என் புலம்பலை மட்டும் ஒதுக்கிடுவாய்...
நொய்யலாறு நொடிந்திருப்பதால்
ஆடிப்பெருக்கினிலே தீபமேற்ற - என்
கண்ணீரை தாரை வார்த்திருக்கின்றேன்....
பல நேரங்களில்
தேர்வுக்குத் தயாராகும்
இளைஞனைப்போல் - உன் பாவனைகளும்
பாம்பாய் படமெடுக்கின்றன....
எத்தனை தேர்வு எழுதினாலும்
உன் வினாத்தாளும் நானே - உன்
விடைத்தாளும் நானே....!
உன்னுடைய ஒவ்வொரு
அசைவுகள் கண்டு - என்
ஆத்மா மட்டும்
தன்னந்தனியாய்
அழுதுகொண்டே உள்ளது...
பல நேரங்களில்
நம் உரையாடலின் இறுதியில்
மழைத்துளியாய் உதிர்ந்திடுவேன்
விழும் விழிநீரிலும் உன்பால்
என் காதல் நிறைந்திருக்கும்....
விழுந்த நீர்வீழ்ச்சி ஒருபோதும்
நிமிர்வதில்லை
அதுபோலத்தான் நானும்
அருவியாய் விழுந்தாலும்
என் பாதையோட்டம்
உன் நிலம் பார்த்தே விரைந்திருக்கும்...

வாரநாட்கள் நீ.......

அன்பே...

திங்களுக்கும் ஞாயிறுக்குமிடையில்
இருக்கும் கிரகங்களாய்
நீயாக வேண்டும்...
சப்த நாட்களும் சப்தமின்றி
உன்னோடு சம்-சாரம் செய்யவேண்டும்...
ஞாயிறின் விடியலில் தொடங்கி
சனியின் அந்திமம் வரை
சுருதி குறையாமல்
சுவரம் சேர்த்து கானமிசைக்க வேண்டும்...
 
இப்படி ஒவ்வொரு நாளும்
எனக்குள் உரமாகிப்போன - உன்னை
என் வாரநாட்கள் என்பேன்...
என்னுள் நாளாகிப்போன நீ
என் வாழ்வாகிப் போனாலென்ன?

புதிரற்ற பதிலோடு - உன்
எழுத்தையும் உள்ளத்தையும்
தயக்கமின்றி தாரைவார்ப்பாயா?
விசனமின்றி விடையளிக்க
விரைந்து வா....
விசாரதனே.....!!

Thursday, August 9, 2012

காவியக் காதல்.....

என் இதய வாசலை
பால்நிலா எட்டிப்பார்த்தது!
என் இமைகளுக்குள்
கனவுகள் தஞ்சம்புகுந்தன!
மௌனம் சூழ்ந்த
அந்த வேளையில் - உன்
மறுமொழியில் என்னை
ஆக்கிரமிக்கின்றாய்...
எப்பொழுதும் உன்
சொப்பனத்தில் வாழ்வதால்
மனதிற்குள் ஒன்றிரண்டு
சஞ்சலங்கள்!
பூங்காற்றாய் எனைச்சூழ்ந்து
அள்ளிக்கொள்ளும் - உன்
மெல்லிய உரசலில்
வெட்கங்கள் போர்வையாகி
எனை மூடுகின்றன...
என் பாடலின் கரு
நீயாக இருப்பதால் இணைந்து
தாளமிசைக்க விழிகள்
என்னவோ உன்னைத்தான்
விளிக்கின்றன....!
ஓடி வரும்
வசந்தத்தின் ஆசிபெற்று
மரங்களும், செடிகளும்
உயிர்ப்பெறுவது போல்
உன் வருகை கண்டு
என் வசந்தமும்
பூத்துக்குலுங்குகிறது...!
பயத்தைக் கொடுத்த
பகற்பொழுதுகளும்
இரக்கமற்ற
இரவுப்பொழுதுகளும்
என்னோடு
கைகுலுக்கி சமாதானமாகின்றன...!
என் சொற்களுக்கு சாணை
பிடித்துத் தந்தவன் நீ...!
தமிழின் காலமெல்லாம்
உன் காலமென்றால்
உன் காலமெல்லாம் - என்
காலமாகும்....!
கவிதைகளால் சந்தித்த
நமக்கு
கவிதையே சுவாசமானது!
உன் சுவாசத்தை நானும்
என் சுவாசத்தை நீயும்
இயக்குவதால்
நம் காதல்
இங்கு காவியமாகிறது...!

Wednesday, August 8, 2012

பறந்து கொண்டிருக்கிறது மனம்...!

எனது நிகழ்கால
விதியின் வீதியினில்
உனக்கான மலரை - எனது
பக்கக்கிளைகள் ரகசியமாகப்
பூக்கச்செய்கின்றன...!

மௌனமாய் புதைந்து கிடந்த
வார்த்தைகளோ மெல்லமாய்
வெளியேறுகின்றன...!

பாலைக்கும் சோலைக்குமிடையே
திசைமாறிப் பறக்கும் சிறகுகளாய்
பறந்து கொண்டிருக்கிறது மனம்...!

வெட்டப்பட்ட நகங்களாய் - என்
எண்ணங்கள் உன்னிடமே
வந்து விழுகின்றன...!

என் தனிமையின் சுமைகளில்
உன் நினைவுகளே கனங்களாய்...
வறண்டு கிடக்கும் பூமிக்கு
மழைபோல் எனக்கு எப்போதும் நீ...

பாராட்டு தரும் உற்சாகத்தை விட
நீ தரும் பாடங்கள் பலமிக்கவை...!
உன்னைக் கண்டு மருண்ட
நாட்களிலெல்லாம் - உன்
உரிமையை என்னிடம் காட்டி
நம்பிக்கையை நட்டுவைப்பாய்....!

எனது வனத்தினுள்
காற்றாய் ஊடுருவிய - உன்
வாசனையில் என் வதனமும்
குளிர்காய்கிறது...!

ஆலய மணிச்சத்தத்திலும்,
பள்ளியறைப் பாடல்களிலும்
உன்னைத் தேடியே
பரிதவிக்கிறது இதயம்...!


கோயில் கோபுரத்தில்
கூடு கட்டிக் காத்திருக்கும்
மாடப்புறாவிற்கும் எனக்கும்
வித்தியாசமேதுமில்லை...!

பயமற்றுப்போன
உன் இதயத்திலிருந்து
எனக்கான காதல் - ஒரு
புதையலைப்போல் வந்தடைகிறது...!

ஈரமற்றுப்போன
உலகத்தார் முன்போ
நிசம் புரிந்து தவிக்கிறது
நம் நாடகம்...!

என் நினைவில்
உன்னைச் சார்ந்தவையெல்லாம்
முகில் கூட்டமாய் உலவுகின்றன!

இடர்பாடுகள் நிறைந்த
நிகழ்வுகளின் ஏக்கத்தில் திணறுகையில்
உலவும் கூட்டங்களெல்லாம்
விழி வழியே விழுகின்றன...!

என்னவனாய் நீயான பின்னே
எல்லாமே நீயாகி நிலைத்திருக்கின்றேன்
உன்னாலே இருக்கின்றேன் - இதுவே
உலகில் இன்று ஒருவரும்
அறியாத உண்மை...!!

இளந்தளிர்களாய் உன் நினைவுகள்!

என் காலத்தின் பைரவனே....
நினைவுகளை விட்டகலும்
நினைவுகள் எத்தனை எத்தனையோ
மறதியெனும் மரத்தில்
இளந்தளிர்களாய் உன் நினைவுகள்!
பழுத்த இலைகளாய் - அவை
உதிர ஆரம்பிக்கும்போது
உன் நினைவுகளே
பசுமையாய் மீண்டும் பூக்கின்றது!
இலையுதிர்வதிலும் தளிர்ப்பதிலும்
ஏகமாய் என்னை
ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றாய்...!
கள்ளமிலா அன்பெனும்
ஆயுதம் தாங்கி வளைந்த
உந்தன் பார்வையில் நனைந்தது
எந்தன் நெஞ்சமானதால்
எனக்குள் சூழ்ந்து நின்ற காதலச்சமும்
உன்னால் களையப்பட்டது...!
கள்ளிப்பூக்கள் மட்டுமே
சூழ்ந்திருந்த எனது வனத்தில்
முல்லைப்பூக்களை பூக்கச்செய்தவன் நீ.....
தன் வழி தவறி
அறைக்குள் சிக்கிய
பட்டாம்பூச்சியின் தேடுதலுக்குக் கிடைத்த
சோலை வனமாய் எனக்கு நீ....
எங்கெங்கோ பட்ட காயங்களுக்கு
மருந்தாய் எனைத் தாங்கிய மணம்....
இந்த உனது வாசனையை
என் இடமெங்கும் தெளித்து
படுத்துறங்க வேண்டும் பைரவனே......

காதலின் பூரிப்பில் கட்டுரை ஒன்று.....


ஏட்டிலே ஊர்ந்து செல்லும்
எழுதுகோல் எழுதுவதெல்லாம்
உன் ஞாபகப் பக்கங்களையே...

மழைக்கால மேகங்களின்
மங்கிய மாலை நேரத்தில்
மண் வாசனையாய்
யோசனைகள் உன்னைப்பற்றி...

அடம்பிடிக்கும் உன் நினைவுகளோடு
நீந்துகின்றேன் - உன்னில்
உயிர்த்தெழ உணர்வோடு அலைகின்றேன்

கட்டவிழ்ந்த மேகக்கூட்டங்களும்
மொட்டவிழ்ந்த மலர்களும்
பாடிடும் ராகங்கள் தென்றலாய்
எனைத் தீண்டிச் செல்கையில்

மழைச்சாரலின் வேகத்தோடு
கட்டுரை ஒன்று கட்டுகின்றேன்
காதலின் பூரிப்பில்!

முன்னுரையிலேயே
முனைப்போடு உனக்கு
முன்னுரிமை அளிக்க முயல்கின்றேன்

பொருளுரையில் உந்தன்
பெருமையைப் பார்க்கின்றேன்
மதிப்புரையில் மிளிரும் உன்னை
மன்றாடிச் சேர எண்ணுகின்றேன்

முடிவுரையில் நானும்
முடிந்தவரை எழுதுகின்றேன்
நிறைவில் எந்தன்
நினைவிழந்து நிற்கின்றேன்

சுருக்கினேன் என் சுகங்களை
விலக்கினேன் விருப்பங்களை
மாற்றங்கள் எதுவுமில்லை
மறக்கவும் முடியவில்லை...

ஒரு புறம் நானும் மறு புறம் - உன் தடம் படிந்த இடமும்...!!

அடைமழை ஓய்ந்த வேளை
பனி படிந்த அந்த நாளை
விரல்களால்
அழுத்தித் துடைக்கின்றேன்
மெல்லிய திரைகள் விலக
பிரகாசிக்கின்றாய்....
பெரும்பாலான பொழுதுகள்
ஒண்டியிருக்கிறோம்....
ஒரு புறம் நானும்
மறு புறம் - உன் தடம் படிந்த இடமும்...!!
உனக்காக நான்
தனிமையில் தோய்ந்தவளாய்
இங்கே காத்திருக்கின்றேன்
பழைய பஞ்சாங்களில்
புதிதாக நம்பிக்கை தருவதாய்
ஒரு வார்த்தையைத் தேடியபடி!
எப்போதும் என்னால்
உன் திசைக்கு வர முடியாது!
வெட்ட வெளி கூட
இங்கு சிறை தான்!
காற்றுக்கும் காவலுண்டு!
ஆனாலும்
கூரைக்கு மேலாக
மிதக்கும் பௌர்ணமிப் பொழுதில்
நான் மட்டும்
விழித்திருக்கலானேன்...!
காகம் கரைய
மற்றவைகளும் பின்பற்றின!
ஒளியைப் பிளந்து கொண்டு
ஒலியைத் தீட்டித் தீட்டி
விடியலைப் பெரிதாய் வரைய
மெல்லமாய்ப் பூத்தது சூரியனும்...!
விழிகளின் சந்திப்பில்
என் சாளரத்தை
திறந்து வைக்கின்றேன்...!
என்றேனும்
நீ வருவாய் என்ற
நம்பிக்கையில்.......

கானம் - கவிதை - நீ.....

சிந்தனைகள் ஆயிரமிருக்க
நான் தேடியது எதனை?
கிடைக்காத பொருளுக்கு
இந்த இதயத்தில்தான்
எவ்வளவு வேட்கை?
பார்வைக்கு அப்பால் வளரும்
செடிகள் மருந்தாகிப் பயன் தரலாம்
கண்டறிவதில்தான் காலதாமதம்...!!
தொலைவில் இருக்கும் குன்றெல்லாம்
எப்போதும் பசுமையாகவே தெரிகிறது...
ஏறும்போதல்லவா
கள்ளும் முள்ளுமாய்த் தெரிகின்றது...!!
ஆனாலும் ஏறிவிடுகின்றோம்....
ஏறியே ஆகவேண்டும்
என்ற எண்ணமிருந்தால்
எதையும் அடைந்துவிடலாம்...
என் கூரை எரிந்திருந்தாலும்
உச்சியிலிருக்கும் நிலவை
ரசித்திருப்பவள் நான்...
காசு கொடுத்து ஆப்பிளை வாங்கி
அதற்கு நான் சேவகம்
செய்ய மாட்டேன்..

தயங்கித் தயங்கி
உயிர் வாழ்ந்த நான் - நீ
வந்த அந்த வேளையில்
என்னை உயிர்ப்பித்துக் கொண்டேன்....
இப்பொழுது என் மேனியெங்கும்
வண்ணச் சிறகுகள்..
ஆனாலும்
என் எல்லைக்குள் பயணிக்க
என்னை ஆக்கப்படுத்திக்கொண்டேன்...
என் திசை எப்போதும்
உன் வாழ்திசை நோக்கியே...
என் கண்ணீர் எனக்கு மட்டுமே சொந்தம்...
சவங்களின் சமாதானத்தை ஏற்பதற்காக
ஆயுள் தண்டனை அனுபவிக்கமாட்டேன்...
இந்த கானம் - கவிதை - நீ
வேறு எவை என்னை
வசம் கொள்ளப்போகின்றன...??!!

நமக்கேன் வாதமும், வஞ்சணையும்??

எதை நினைத்தழுவது
இப்பொழுது அதற்கு சாத்தியமில்லை
இன்றைய வாழ்வை நியாயப்படுத்த
நேற்றைய வாழ்வை வருத்தும்
புலம்பெயர்ந்த பொழுதுகளை
தூசி தட்டிப்பார்க்க விரும்பவில்லை....
நீ கொடுத்த நம்பிக்கையே
நாளும் எனக்கு ஊக்கமருந்து....
இதோ ஊக்கத்தில் ஓர் ஆக்கம்....!!
பௌர்ணமிப் பொழுதில்
வெளிச்சமாகும் வானம்!
ஒளியில் குளிரும் பூமி....
பூரணச் சந்திரனையும்
கிரகணம் பிடிக்கும்!
நிலவின் ஒரு பதியை
ராட்சத பாம்பு
மெல்லத் தின்று விழுங்கும்!
தேகத்தில் ஒரு பாதி
பலமிழந்து மறைந்தாலும்
மற்றொரு பாதி மிளிர்ந்து
ஒளியில் சிரிக்கும்!
வந்து போகும் வான்மதியே
வளர்வதையும் தேய்வதையும்
வாடிக்கையாய்க் கொண்டிருந்தாலும்
வஞ்சணையின்றி வழிபார்த்து நடக்கிறது!
வந்து போகும் நமக்கேன்
வாதமும், வஞ்சணையும்??
பிறப்பும் இறப்பும்
பொது நலமே...!
சுயநலமின்றி ஒளி காட்டும்
சூரிய சந்திரராய்
சொற்ப நொடிகளாவது வாழ்ந்திருவோமே...!

Tuesday, August 7, 2012

வாய்ப்பளிப்பாயா வாசகனே..??

நினைவுகள் நிரம்பிய
இதயமிது...!
உன்னைச் சார்ந்த நினைவுகள்
நீக்கமற நிறைந்திருப்பதால்
நோக்கும் காட்சிகளெல்லாம்
பசுமையாய் உன்னைப்போல்...!

எல்லையற்ற வான்வெளியில்
முகில்களின் கூட்டம்
தடையின்றி படர்ந்து
புவியினை நோக்கி தன் நேசத்தை
சாரலாய்க் கொட்டுவதைப்போல்
ஆசைகளற்ற உன்னிதயத்தில்
ஒரு முகிலாய் நானும் படர்ந்து
என் நேசத்தை உன்னிடம்
கொட்டிக் கொண்டேயிருக்க
ஆசைதான்....

சந்தங்கள் பல நூறு படைத்தும்
சந்தேகங்கள் தீரவில்லை காதலில்!
கந்தலாய் இதயமும் நொந்தபடி...
அந்தி வந்த போதும் எந்தன்
சிந்தையில் நிம்மதியற்ற நிலை..!

என் எழுத்துக்களைப் பார்க்காதே
என் எண்ணங்களைப் பார் - என்
இதய வீதியில் உன் சார்ந்த
சம்பவங்கள் மட்டுமே கூக்குரலிட்டு
கும்மியடித்துக் கொண்டிருக்கின்றன...

இமைகள் இணையும் தருணங்களிலும்
அவை பிரியும் நேரங்களிலும்
இடைவெளியில்லாமல் தொடர்கின்றாய்....
மறப்பதற்கும் மறுப்பதற்கும்
மனமின்றி மனம் போகும் - உன்
நிழல் வழியே தொடர்கின்றேன்....

யாசகம் கேட்டு நிற்கின்றேன்
வாய்ப்பளிப்பாயா வாசகனே..??
யோசனை தவிர்த்து - நீ
மெதுவாய் விழியசைத்தால்
நானும் வலியிழந்து மோட்சமடைவேனே....

போராளிப் புருசன்.....

காலங்காலமாய்
உன் கரங்களில்
இந்தப் போராளியின்
கருணை முகத்தைத் தாங்கி
நிற்க இணங்குகின்றாய்...!

சரித்திரமும் சாத்திரமும்
பேசுபவனை - உன்
சாதகத்திற்கு சொந்தமாக்க
ஆருடம் பார்க்கின்றாய்...!

வில்லேந்தி போர் செய்யாதவன்
ஆயினும்
சொல்லேந்தி சொற்ப்போர் புரிபவனை
சொந்தம் கொள்ள எண்ணுகின்றாய்...!

காதல் மொழியில் பேசுவான்
சட்டென்று
கட்டவிழ்ந்த புயலாய்
கச்சாலயத்தின் மகிமையை
பெருமையடிப்பான் - இவனை
காதல் செய்ய விரும்புகின்றாய்...!

பெண்மையே! என் இதயம்
சொல்வதைக் கேள்...

தாய் - மண்ணை மட்டும்
நினைப்பவனிற்கு
பெண்ணை நினைப்பது பெருந்துயரம்..!
"நீ மட்டும் இல்லையடி!
இங்கு வீழ்ந்தபடி கிடக்கிறார்கள்
எம் மக்கள் மாக்களாய்!" - என்று
வேதாந்தம் பேசி மெய்யணைப்பான்....!

இருளின் தனிமையிலும்
தேசத்தை சிந்திப்பான்
உணர்வுகளை உசுப்பேற்றுவான்
மேனிசிலிர்க்கும் நிலையிலும்
மெய்ஞானம் பற்றி வாதிடுவான்...!

தோடிராகத்தை
மோகனமாய் செதுக்கிடுவான்
மோகம் களையும் வேளையில்
மடைதிறந்த வெள்ளமாய்
மணிக்கணக்காய் மனிதர்களின்
மர்மம் பற்றி உரைத்திடுவான்...!

கவிகளில் கலைநயம் புரிவான்
மிரட்சியற்ற விழிகளில்
புரட்சியை ஒளிரச்செய்வான்
மிளிரும் புன்னகையிலும்
புரட்சியை விதைத்திருப்பான்...!!

குழந்தைகளுக்காய் குறைபடுவான்
உழைப்பவர்களைக்கண்டால் உருகுவான்
தேசம் செழிக்க மெனக்கெடுவான்
மோசம் செய்ய நினைத்திடமாட்டான்
ஆனாலும்
கொதிக்கும் சோகத்தை கொட்டித்தீர்க்க
எனைத் தீண்டி தணிந்திடுவான்...!

ஆய கலைகள் அறுபத்துநான்கை
கற்றுத் தேர்ந்தவன்
ஆளுக்குத் தகுந்தாற்போல்
ஆளை அசத்திக்காட்டுவதில்
அழுத்தக்காரன்...

இனமென்று பார்க்காமல்
சினம் கொண்டு சீறுவதில்
துர்வாசக முனிவனிற்கும்
குருவானவன் என் வாசகன்...!

தமிழ்மொழிக்கே தன்னுயிர்
என்று
தனித்து முழங்குவான்...!
உயிரும் மெய்யுமாய்
இருந்திடுவோம்
என்று சொல்லி கரம்பிடித்தான்....
இறுக்கிய கரங்கள் இப்போது
தனித்த நிலையில்
தகவல் விசாரிக்கின்றன...!!!

ஆனபோதும்
வேதநாயகனின் வார்த்தைகளை
வேதமாக ஏற்றுக்கொள்வதற்கு
முன்பிருந்தே நானும்...
"சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்...."
ஒத்துப்போகின்றோம்
இவ்விரண்டிலும் இருவர்..!!

Monday, June 4, 2012

வெட்டப்படுவதையே எதிர் நோக்குகின்றேன்.....
 
வெயிற்கால இரவின் தாக்கம்
முன்பனி பெய்யும் நேரத்திலும்
முழுமையாய் மனதினுள்....
"பகைவருக்கருள்வாய்" வேதாந்தம்
புரியாமல் விழிக்கையில்
சொந்தங்களின் போக்கில்
வேதாந்தம் விளங்குகிறது...
 
மொத்த பொழுதுகளும்
ஒற்றை வரிசையாய்
அழுது தொலைக்கின்றன...!
வரப் போகும் நாட்களை
பயத்தோடு எதிர்பார்த்தாலும்
இதயத்தில் இடைவெளியில்லாத
குருட்டு நம்பிக்கை
எதையும் கடப்பேன் என்று...!
 
மறக்க முடியாத நிகழ்வுகள்
மனக்கண்முன் நிழலாட
இன்னல்களை மட்டுமே சந்தித்த 
பாவப்பட்ட இதயம் பண்பட்டு
அன்பிற்கான வட்டியினை
கடந்த பொழுதுகளிலிருந்து
கொடுக்கக் கற்றுக்கொண்டேன்
 
ஒவ்வொரு முறையும்
யாரோ ஒருவரால்
வெட்டப்பட்டாலும் மீண்டும் 
தழைத்து  விடுகின்றேன்....
சில நேரங்களில், தழைப்பதற்கு
நாட்களாகவோ மாதங்களாகவோ.....
ஆனாலும் தழைத்து விடுகின்றேன்!!
 
இயல்பு நிலையிலிருந்து
எப்போதும் எதற்காகவும்
மாற விரும்பவில்லை..
ஆகவே
வெட்டப்படுவதையே
எதிர் நோக்குகின்றேன்.....
மீண்டும் தழைப்பதற்கு....!! 
 
ஆத்மார்த்த  சிநேகிதனே .......
 
தண்ணீரின்  தழும்பல்கள்
விழிகளில்...
வெப்பத்தின் விழுதுகள்
இதயத்தில்....
ஈரத்தின் போக்குகள்
கன்னங்களில்...
இழப்பின் ஆக்கங்கள்
உச்சத்தில்....
அச்சங்கள் எச்சமாக
மிச்சமிருப்பது என்னவோ
மச்சமான வலிகளின் பொழுதுகள்.....!!
வீறுநடைபோடும் விதியின் 
வலிமையை கிலியோடு கவனித்திருக்க
வார்த்தைகளில் வசப்படுத்துவாய்
வாஞ்சையாய் தலை கோதுவாய்
வஞ்சனையில்லாமல் 
இதயச்சுமை ஏற்பாய்!
துக்கம் மறந்து
இளைப்பாருகின்ற
தாய் மடியாய்
தாங்கிப்பிடிப்பாய்
முழுமையாய் அங்கீகரித்து
அன்பிற்குள் அரவணைப்பாய்....
நீயிருக்கும் தைரியத்தில்
கண்ணீரும் கரைமீறத் தயங்கும்!
ஆத்மார்த்த சிநேகிதமாய்
உன்னைவிட வேறென்ன
வேண்டியிருக்கு...!!

 


கண்வளராயோ கற்பகமே.....
சிறுமீனு கடிச்சிருச்சோ - உன்
மேனியெல்லாம் நடுநடுங்க...
சிறு பூச்சி கடிச்சிருச்சோ - உன்
தேகமெல்லாம் நடுநடுங்க...
வலிபொறுக்காமல்
நீயழுத கண்ணீரு ஆறாகப்பெருகி
அலை அலையா அடிக்குதம்மா...!
கிலியோடு அழுகதகண்ணீரு
குளமாகத் தேங்கியிங்கு
கொசுவெல்லாம் வளருதம்மா...!
பூக்கவிருக்கும் பொன்னரும்பே - என்
பொக்கிசமே கண்வளராய்..!
மனமே மருக்கொழுந்தே
மண்மணக்கும் மல்லிகையே - என்
மைவிழியோடு கண்வளராய்....!!
வாடாத பூவே-வளரும் பிறையே
வருணத்தின் துளியழகே கண்வளராய்...!!
நாலூரும் மயங்கிநிற்கும்
நளினத்தின் நடையழகே கண்வளராய்...
போகாத  நிலமில்லே -நான்
நீந்தாத நீரில்லே, மண்மயங்கும் பேரழகே 
மதி மறையும் முன்னே கண்வளராய்..!
நந்தவனம் பூஞ்சோலை
நாலுபக்கம் உண்டுபண்ணி 

நாள்தோறும் வாசம் மாறாமல்  
காத்திருப்பேன் கண்வளராய்....
பலநூறு வேலைகள்
தெரிஞ்சவரு உங்கப்பா....
பாலும் நீரும் பக்குவமா பிரிப்பாரே....
கலந்திருக்கும் நீரெல்லாம்
உன் கண்ணீர்தானென்றால்
கலங்கித்தான் போவாரே....
விடியும் வரை விசும்பாமல் நீயுறங்கு.!
விடிந்த பின்னே வீதியோரம்
உன் விருப்பம்போல விளையாடு....!!