Wednesday, March 23, 2011

வயக்காட்டு ஓரத்திலே

http://a34.idata.over-blog.com/600x406/3/05/97/00/Wf9.jpg




ஆண்: வயக்காட்டு ஓரத்திலே
வண்டிகட்டி வந்திருக்கேன்
வாடிபுள்ளே என்னைத் தேடி புள்ளே
உனை கட்டிக்கிட்டு சோடி போட்டு
போகப் போறேன் வாடி புள்ளே
எனைத் தேடிபுள்ளே...

பெண்: பருத்திக்காட்டு பக்கத்திலே
பட்டுக்கட்டி வாரேன் மச்சான்
உனைத் தேடி மச்சான் - எனை
கட்டிக்கிட்டு கூட்டிப் போனால்
தாரேன் மச்சான் என்னைத்
தாரேன் மச்சான்...

(வயக்காட்டு ஓரத்திலே )


ஆண்: தென்னங்காத்து அடிச்சுப் போச்சு
தெருவெல்லாம் உறங்கிப் போச்சு
வந்த நிலவும் மறைஞ்சு போச்சு
வாசமுள்ள ரோசாவே நீ எங்கிருக்க
வாட்டமுள்ள மச்சான் நான் இங்கிருக்கேன்...

பெண்: ஊருசனம் உறங்க்கிக் கிடக்கு
உறவுசனம் முழிச்சுக் கிடக்கு
உன்னை நினைச்ச மனசு கூட தவிச்சுக்கிடக்குது
என் ஆசை ராசா..கூண்டுக்குள்ளே நானிருந்தாலும்
கோழி கூவும் முன்னே வந்து நிற்பேனே...



(வயக்காட்டு ஓரத்திலே)



ஆண்: பச்சை மலை இருளும் கூட பயமிருக்கும்
ஆந்தை சத்தம் அலரல் கூட அரட்டலாக்கும்
எட்டுக்கட்டும் வெட்டியான் பாட்டு கூட பயமுருத்தும்
ஒத்தையடிப் பாதையிலே ஒத்தை சனம் காணலியே
என் அனிச்சம் பூவே எப்படி நீ வந்து சேரப் போறியோ
இந்த மாமன் மனசும் கூட நடுக்கமாகுதே....




பெண்: பச்சை மலை இருளிலும் நம்ம
பேச்சியம்மன் காத்து நிற்பா
ஊருசுத்தும் சுடலை சாமி
என்கூடத்தானே சேர்ந்து வராரு
எட்டு அடி எடுத்து வச்சா நம்ம
காவக்கார அய்யனாரும் சேர்ந்துருவாரு
மிரட்டும் சத்தம் எல்லாம் என்
மாமன் பேரைக் கேட்டாலே மிரண்டு போகுமே
மின்னும் பூச்சி வெளிச்சத்திலே - உன்
கண்ணுக்குள்ள வந்து நிப்பேன்
கலங்காதே என் கருத்த மச்சானே...!


(வயக்காட்டு ஓரத்திலே)




1 comment:

senthilkumar said...

mm super varikal but song kettku thaan solla mudium eppadi irukku nu