Thursday, April 28, 2011

வேண்டுமே.....

மாலை நேரச் சூரியன்
மயங்கிய நேரம்!
கடற்கரையின் காலடியில்
பார்க்குமிடமெல்லாம்
உன் பாதங்களின்
சுவடுகளாய் தெரிகிறது!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்....!!
Join Only-for-tamil
நேற்று சந்தித்த
இறுதிச் சந்திப்பில்
நீ கொடுத்த
முத்தத்தின் ஈரம்
இன்னும் காயாமல்...
எப்போதும் காயாமல்
இருக்க வேண்டுமே!!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்!!

என்னை
யார் கடந்து சென்றாலும்
நீ கடந்து போவது
போன்றதொரு சிலிர்ப்பு!!
எப்பொழுதும் நீ
என்னை கடக்க வேண்டுமே!!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்!
Join Only-for-tamil
உன் எழுத்துக்களிலும்
என் எண்ணங்களிலும்
வளர்ந்த நமது காதல்
பெரு மழையாய்
பொழிகிறது!
வறண்ட வானிலை
வராமலே இருக்க வேண்டுமே!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்!!

நமது முதல் சந்திப்பில்
என்னிடமே வந்து
என்னை விசாரித்த
உனது சீண்டலை நானும்
என் கரங்களை எடுத்து
உன் மார்போடு சேர்த்து நீயும்
பரவசமடைந்தோம்...!!
பரவசம் பருவந்தோறும்
படர வேண்டுமே...!!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்
Join Only-for-tamil
பயணம் இனிதானது
உன்னோடு பயணித்தால்...
வாழ்க்கைப் பயணமும்
உன் ஒருவனோடு இருந்தால்...
பேரிரைச்சல் பெருமமைதி
ஆக வேண்டுமே....
அதுவும் உன் ஒருவனால்
மட்டுமே மாற்றப்படும்...!

உன்னை வெல்வேன்...




கொல்கின்ற தனிமையில்
காலத்தை அளக்கின்றேன்
உறவைக் கொடுத்து
உயிரைப் பிடுங்கும்
உன் வார்த்தையில்
உலகம் மறந்து போனது...
என் காதலின் கண்ணீரில்
கடல் மட்டமும் உயருது!
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQafE9sSE3aUkyXcuOE_7KOM1t6FTwBmdDBxESE1pdvLG-Zseee
மூச்சுக் காற்றாய்
உள்ளே நுழைந்தவனின்
விழிகளின் சந்திப்பில்
விலகலின் வேகம்!

உனக்காகவே உயிர்க்கின்றேன்
உனக்காகவே மரிக்கின்றேன்
என் விதியின்
எண்ணம்தான் என்ன?
விளங்கவில்லை!!!

எங்கேனும் ஒரு தென்றல்
உன்னால் என்னுயிரை
தொட்டுச் செல்லாதா?
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTsPO5ud-Te40yoKwRwQ-p45rUCJgXuIonqDJYJLK-FimAaxSZY
ஏக்கமாய் எழுதும் எனது
கவிதைகள்
மிதந்து வரும் போது
உன் பார்வையின் பாரம்
பட்டுச் சாகாமலே பறக்கின்றன!

என் இல்லத்தின் விளக்கொளி
மட்டும் நீயல்ல!
என் இதயத்தின்
கர்ப்பக்கிரகமும் நீயே...

உயிருக்குள் உயிராய்
ஊடுருவிய உன்னை
என் உணர்வில் மட்டுமல்ல..
என் உதிரத்திலும் கரைப்பேன்...

சேர்த்து வச்ச ஆசைகள்
எல்லாம் அடைக்கலமாய்
உன் காலடியில் கொட்டுகின்றேன்

புறந்தள்ளி என்னைக் கொல்லும்
உன் உள்ளத்தில் எனக்கோர்
இடம் கொடு இல்லையேல்
கொஞ்சம் விஷம் கொடு..
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQqPo1rsAAaROXt02wgzEOW8YlaUg1dXqTIebamc3zC7fv3ILh79A
கண்ணீரில் கரைந்தாலும்
காலத்தை இழந்தாலும்
காதலில் உன்னை வெல்வேன்...




Wednesday, March 30, 2011

விழித்துக்கொள் மானிடா!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZlXCo1nQvD0BpPNfjen_wUeWZ8TnxuxPzG4cO3fBGejhHot2hGg8tA5z2s_PzIEY0WG3C8pz3fAox4zOB_o2ACWaSehKY9_i88cuXOcjgOuAc8HkBJl3ZYg1_WtbLMRaO8mEztBloc-n9/s1600/naxalite-rule.jpg


விழித்தெழுந்து விழித்துக்கொள் மானிடா!
பொய்ச்சொல் வீரர்கள்
பொடிநடையாய் வருகின்றனர்....
தேடியதை தருகின்றனராம்.... - நம்
உழைப்பில் வாங்கி நமக்கே....

கூவி கூவி விற்கின்றனர் - நமது
தன்மானத்தை இந்த புண்ணியவான்கள்!
சுயமரியாதை சுவரொட்டி
விளம்பரமாய் சிரிக்கின்றது!
நாளுக்கொன்றாய் நமது உரிமைகள்
நாட்காட்டியாய் கிழிக்கப்படுகிறது!

மனித நேயம் முற்றிலும் மறந்து
மனமற்ற சமுதாயமே மலர்ந்துள்ளது!
பாரதம் இங்கு பங்கு போடப்படுகின்றது...
கேட்கும் திறன் இல்லையென்றாலும்
கேள்வி கேட்க கற்றுக் கொள்ளுவோம்...

பொறுத்தாள்வார் பூமி ஆள்வார் - இங்கு
பொறுத்திருந்தால் பூமியே புதைந்துவிடும்
அகிலத்தில் அநியாயம் ஆட்டம் போடுகிறது!
அடங்கி இருந்தால் அடிவானமும் அழிந்துவிடும்!
அங்கிருக்கும் விண்மீன்களும் விலை பேசப்படும்!
சொல்லிச்சாகும் நானே இதற்கு துணிவாய் நின்று
தரகு பேச தயாராகிவிடுவேன் தயக்கமின்றி...

கள்ளங்களும், கயமைகளும் நிறைந்த - இந்த
உரசியல் கொண்ட அரசியல் நமது
வெள்ளை நிலவையும் விட்டுவைக்காது...!
வேரில் நெருப்பு வைத்தால்
விளைச்சல் எங்கிருந்து வரும்?
என் தேசத்தை சுவைத்துப் பார்க்க
பூவா தலையா போட்டுப் பார்க்கின்றனர்!

தொய்வடைந்த தோழர்களே!
சட்டங்களும், திட்டங்களும் போட்டு
கேலிச்சரித்திரம் பேசும் - இந்த
போலிச் சமுதாயத்தை மாற்றிடுவோம்..!

Thursday, March 24, 2011

விட்டு விட்டுத் தொடர்வதில்....

விட்டு விட்டுத்
தொடர்வதில்
நீயும் என் தந்தையும்
ஒன்றுடா...
என் காதலை
எப்படி விட்டு விட்டு
ஏற்கிறாயோ
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcS-f6elC2ZK0fNbTtoYX-2k9hW2sYL4yS3BZKqBaT59exZil9zD
அப்படியே
சிறுமியாய் இருக்கும்
காலச் சூழ்நிலையில்
தந்தையின் கைவிரல்பிடித்து
நடக்கையில்
எதிர்திசையில் வரும்
வணக்கங்களுக்கு
பதில் வணக்கம் சொல்வதிலேயே
என் தந்தையின் கைவிரல்கள்
எனக்கு கிடைக்காமலேயே
போய்விடும்....
உன் காதலும் அப்படித்தானோ...

Wednesday, March 23, 2011

வயக்காட்டு ஓரத்திலே

http://a34.idata.over-blog.com/600x406/3/05/97/00/Wf9.jpg




ஆண்: வயக்காட்டு ஓரத்திலே
வண்டிகட்டி வந்திருக்கேன்
வாடிபுள்ளே என்னைத் தேடி புள்ளே
உனை கட்டிக்கிட்டு சோடி போட்டு
போகப் போறேன் வாடி புள்ளே
எனைத் தேடிபுள்ளே...

பெண்: பருத்திக்காட்டு பக்கத்திலே
பட்டுக்கட்டி வாரேன் மச்சான்
உனைத் தேடி மச்சான் - எனை
கட்டிக்கிட்டு கூட்டிப் போனால்
தாரேன் மச்சான் என்னைத்
தாரேன் மச்சான்...

(வயக்காட்டு ஓரத்திலே )


ஆண்: தென்னங்காத்து அடிச்சுப் போச்சு
தெருவெல்லாம் உறங்கிப் போச்சு
வந்த நிலவும் மறைஞ்சு போச்சு
வாசமுள்ள ரோசாவே நீ எங்கிருக்க
வாட்டமுள்ள மச்சான் நான் இங்கிருக்கேன்...

பெண்: ஊருசனம் உறங்க்கிக் கிடக்கு
உறவுசனம் முழிச்சுக் கிடக்கு
உன்னை நினைச்ச மனசு கூட தவிச்சுக்கிடக்குது
என் ஆசை ராசா..கூண்டுக்குள்ளே நானிருந்தாலும்
கோழி கூவும் முன்னே வந்து நிற்பேனே...



(வயக்காட்டு ஓரத்திலே)



ஆண்: பச்சை மலை இருளும் கூட பயமிருக்கும்
ஆந்தை சத்தம் அலரல் கூட அரட்டலாக்கும்
எட்டுக்கட்டும் வெட்டியான் பாட்டு கூட பயமுருத்தும்
ஒத்தையடிப் பாதையிலே ஒத்தை சனம் காணலியே
என் அனிச்சம் பூவே எப்படி நீ வந்து சேரப் போறியோ
இந்த மாமன் மனசும் கூட நடுக்கமாகுதே....




பெண்: பச்சை மலை இருளிலும் நம்ம
பேச்சியம்மன் காத்து நிற்பா
ஊருசுத்தும் சுடலை சாமி
என்கூடத்தானே சேர்ந்து வராரு
எட்டு அடி எடுத்து வச்சா நம்ம
காவக்கார அய்யனாரும் சேர்ந்துருவாரு
மிரட்டும் சத்தம் எல்லாம் என்
மாமன் பேரைக் கேட்டாலே மிரண்டு போகுமே
மின்னும் பூச்சி வெளிச்சத்திலே - உன்
கண்ணுக்குள்ள வந்து நிப்பேன்
கலங்காதே என் கருத்த மச்சானே...!


(வயக்காட்டு ஓரத்திலே)




Thursday, March 17, 2011

"மா" தவம்

http://upload.wikimedia.org/wikipedia/commons/5/57/Ranilaxmibai-1.JPG




மாதராய்ப் பிறந்திட "மா" தவம்
செய்ததும் உண்மையே...

பாரதி கண்ட புதுமைப் பெண்ணும் நானே..
பாசத்தில் என் தாய்வழி வந்த
அடிமைப்பெண்ணும் நானே...
வீட்டில் காணும் சிறுபூச்சிக்கும்
பயப்படுவேன்...
நாட்டில் காணும் விஷப்பூச்சியுடனும்
போரிடுவேன்!!

அந்த மூன்று நாட்களில்
முட்டிபோட்டு அழுதாலும் - எங்களவர்
பெண்மையை சீண்டும்பொழுது
சிலிர்த்தெழுந்து சிப்பாயாய்
வெட்டிப்போட்டு விரைந்திடுவேன்!

வறுமைவந்து வாட்டினாலும்
என் கருப்பையைக் கூட விலைபேசுவேன்!
ஒருவருக்குப் புண்ணியமாய்..! - ஆனால்
ஒருபோதும் என் கற்பை விலைபேசமாட்டேன்...

இலக்கியத்தில் நுகர்பொருளாய்
வலம் வந்த போதும்
நடைமுறை வாழ்க்கையில் மறைமகளாகவே
வலம் வருவோம்...

மாதராய்ப் பிறந்திட "மா" தவம்
செய்ததும் உண்மையே...

Wednesday, March 9, 2011

ஆணிவேரானவன் நீ!



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYtck4qTWZL1N2VqcWQT8uCoPTE8xz9ysOJ61gbvfjuv0-phaVGMZQ7ImdgbS6p0VTtBhcT1lZkAje5HW4fd_jWXtQ2_heEJkdJ2FV5FyVL53WAf2qkT2i5IfoipmE9cEyPYXs3vduVHGc/s320/sad.jpg



செல்லமே....
இரவுப் பொழுது மெல்லமாய்
இறக்கின்றது....ஆனால்
என் இரவு மட்டும் எப்போதும்
வெளிச்சமாகவே இருக்கின்றது!

இயலாமையிலேயே
இதயமும் கிடப்பதால்
எனது காகிதப்பேடும்
வெற்றிடமாகவே கிடக்கிறது...

உன் ஞாபக சின்னங்கள்
நெஞ்சோடு சிதறிக்கிடப்பதால்
என் கண்ணீரின் தூறலில்
கரைந்தே போகின்றேன்...

உன் முகம் மட்டுமல்ல
நீ விடும் மூச்சுக்காற்றும்
எனக்கு ராசிதான் - அதையே
நான் சுவாசிப்பதால்...

என் குலசாமிக்கும் உனக்கும்
ரொம்ப வித்தியாசமில்லையடா
நான் உன்னைக் கேட்டு
கையேந்தினால் சாமியும்
உன்னைப்போலவே எப்போதும்
கல்லாகவே நிற்கின்றது....

நீயோ
எனை காக்க வைத்து
களிப்டைகின்றாய்...
நானோ காத்திருந்து
காயமடைகின்றேன்...
என் தேசம் மட்டுமல்ல
என் நேசமும் தப்பானதல்ல!!

உனக்காய்
காத்திருக்கையில்
நான் காணாமலே ஆகலாம்
ஆதலால் அன்பே - நான்
மறையுமுன் வந்துவிடு
என் சாம்பலையாவது
தொட்டுவிட்டுப் போ
எனக்கு மோட்சம் கிடைக்கட்டும்

நேற்றைய நினைவிலும்
நாளைய கனவிலும்
காலத்தை கழிக்கின்றேன்
என் எண்ணத்தின்
ஆணிவேரானவன் நீ!

என் ஆவியை உன்னிடம்
தொலைத்ததால் பார்ப்பவர்களுக்கு
நான் பாவியானேன்!

தொலைதூர இடத்தில் நீ

இருந்தாலும்
தொலையாத நினைவுகளுடன்
உன்னை தொடர்கின்றேன்

எனை நினைக்க மறந்து
நீ பறந்தாய்!
நினைத்தே இருப்பதால்
நான் இறந்தேன்.....

Wednesday, February 16, 2011

எங்ஙனம் எரிவேன்....?







http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ_Uwfsj-qd4ezuE4mWQg7w6krQnz5sgCg9G8skR73ndPzs-CPfrg

அன்பே...

தேன் சிந்தும் சோலையில்
தெம்மாங்கு பாடும் மாலையில்
உன் பார்வையில்
ஆயிரம் சந்தங்கள்!
பார்த்த எனக்கோ
பல்லாயிரம் சரணங்கள்!

புத்தருக்கு ஓர் போதிமரம்
எனக்கோ நீயோர் ஜீவனுரம்!
உன் வாசகம் பார்த்த
நான் யாசகம் கேட்கின்றேன்!

உனை
எண்ணி நான் எழுதும்
எழுத்தெல்லாம்
என்னவனே உந்தன் சேதி
சொல்லாதோ! - உனை
எண்ணி இருக்கின்ற
கன்னி முகம் பார்க்க
கரைதாண்டி வரமாட்டாயா??

பூமியைத் தேடி வரும்
மழை நீருக்கு
பூமி ஒரு போதும் தடை
செய்ததில்லை! - எனை
நீ வந்தடைய எந்த
இடையூறும் இல்லையடா!

நகரத் தவிக்கும்
என் நேரங்களும் - நீ
என்னில் வந்து சேரும்வரை
அவைகளும் என்னோடு
சேர்ந்து அழுது தீர்க்கின்றன...

எனக்கான அங்குசம் நீ...
வாழ்க்கைப் பாகனாய் - எனை
வழிநடத்திச் செல்!
வஞ்சமில்லாத எந்தன்
நெஞ்சத்தில் வந்து போகும்
வழிப்போக்கன் அல்ல நீ..!

எதுவாக இருந்தாலும்
உனை மீற முடியாத
சுதந்திரம் எனக்கு எதற்கு?

எரிய இருக்கும் உடம்பினில்
ஒரு பாகமாய் இதயம் என்ற
உயிர் மூச்சாய் நீ இருக்கையில்
நான்
எங்ஙனம் எரிவேன்....?

தினம்தோறும் இரவில்
தாயாய் தாலாட்டிட - உன்
மடியிலே கண்துயில
வரம் கேட்டு உன் வாசற்படிவந்து
நிற்கின்றேன் வரம் தருவாய் என்ற
நம்பிக்கையில்......



Monday, January 31, 2011

ஒப்பில்லா மன்னவனே!

http://www.myorkutglitter.com/wp-content/uploads/2009/03/love-hurts.gif




வசந்தமற்ற வாழ்க்கையில்
வசந்தமாய் வந்தவனே....
உன்
நேசத்தினால், செத்தவள்
மீண்டும் உயிர்த்தெழுகின்றேன்....

சுற்றங்கள் எனை சூழ்ந்திருந்தாலும் - அவை
மற்றவையாகத்தான் தெரிகின்றன..!
சுற்றமே நீதான் என நெஞ்சமும்
சுகப்பட்டு சொல்கின்றது...


அடியார்க்கு பணியாத
எனது உள்ளமும் - உன்
பார்வைக்கு பணிந்து
கிடப்பது எப்படி?

வாழ்ந்தேனே கனவின்றி
முந்நாள்....
வந்தாயே கனவாக
இந்நாள்....

குளிர்ந்தேனே இரவோடு
சுகமாய்....
இணைந்தேனே உறவோடு
உயிராய்....

எந்நாளும் மாறாது
என் எண்ணம் - யார்
சொன்னாலும் போகாது
உன் வண்ணம்...

யாரோடு நீ கொஞ்சிப்
போனாலும்
பாரோடு உன் வழியில்
பயணிப்பேன்...

நிஜம் வேண்டாமென்று
நீ தள்ளிச் சென்றாலும்
நிழலாய் உன் பெயர் சொல்லி
உன்னவள் நானே - என்று
உரக்கக் கூவுவேன்...

ஒப்பில்லா மன்னவனே!
உப்பில்லா உணவும்
உன் கரம் பட்டால் சுவையாகும்..!
பண்புள்ள இந்த பாவையும்
உன் பக்கத்தில் வந்தால் பாக்கியமாகும்...!

Tuesday, December 28, 2010

நீயும் நானும்....






http://de.trinixy.ru/pics2/20071023/podb/9/love_11.jpg




இணையம் தந்த இணையில்லா
இலக்கணச் சுடரே....
உயிரின் ஓசையில் என்னுள்ளே
இசையாய் பரிணமித்தாய் - உன்
முகம் காணா காதலில் - என்
அகத்திரை கிழித்து ஐக்கியமானாய்...

தடுமாறும் மனதை தகர்த்தெறிந்து
தைரியம் கொடுத்த தடாகம் நீ...
எனக்காக நீ வரைந்த பாடல்களில்
உன் ஜீவனை காண்கின்றேன்...

கரங்கள் இறுக்கி நாம்
கவிதை பாடவில்லை...
உடல் உரசி உஷ்ணம் கிளப்பி - நாம்
கண்ணியத்தை கறைக்கவில்லை
கட்டி அணைத்து காதல்
செய்ய வேண்டும் என்று
அவசியம் கருதவில்லை


இறுக்கித்தழுவி இதழ்கள் வருடி - நாம்
இணைந்து இருக்கவில்லை...
ஒருமுறை கூட நாம் சந்தித்து
சரித்திரம் பேசவில்லை - ஆனாலும்
நாமும் இதயம் யாசித்து நேசிக்கின்றோம்...

காற்றோடு மட்டுமே நாம்
பாஷைகளை பரிமாருகின்றோம்...
நிஜத்தை மட்டும் நாம்
நிறைவாக நேசிப்பதால் - நம்
நிழற்படத்தை இருவருமே
விரும்பவில்லை...


வானத்தைப் பார்த்து ஏங்கும்
பூமியாய் மனம் இருந்தாலும்
செழிப்போடு இருப்பதாகவே
சிரித்து நாடகமாடுகின்றோம்...

நீ நினைப்பதை நான் சொல்வதால்

"அடியே என் பிம்பம் நீயடி" - என்று
சொல்லி குதூகளிப்பாய்... - உன்
மகிழ்வை சத்தமின்றி நானும்
ரசித்து அகமகிழ்வேன்...

உணர்வுள்ள விஷயங்கள்
உயிரூட்டமாய் ஒத்துப்போவதில்
இருவருக்குமே எல்லையில்லா
பெருமிதம்! இருந்தபோதும்....

இருவரும் இணைந்து
வசந்தமான வாழ்க்கை வாழ
ஆசைப்படுகின்றோம்...- உறவுச்
சிக்கலில் இணைந்து கிடப்பதால்
விதிவழியே நிற்கின்றோம்
வழி தெரியாமல்....வலியோடு...

உறவிற்கு உயிரூட்ட முடியாமல்
தொலைத்த இதயத்தை
மீட்க முடியாமல் தடுமாறி
உயிர் வதை படுகின்றோம்...
ராப்பகலாய் பேசித் தீர்க்கின்றோம்
தீர்வுதெரியாமல் விழிக்கின்றோம்

கனவுகள் கலைந்தாலும்
நினைவுகளோடு வாழ
தயாராகி தண்ணீர்குடித்து
தாகம் தீர்க்கின்றோம்...

காதல் செய்ததில் - விட்டுக்
கொடுத்து வாழப் பழகினோம்!
பழக்கம் இங்கு கைகொடுத்தது...
பார்க்காமல் பிரிகின்றோம்
உயிர் கொடுத்த உறவுகளுக்காக!!

என்னை நீ விட்டுக் கொடுத்து
விலகி விதியை சபித்து
நிற்கின்றாய்...
உன்னை நான் விட்டுக் கொடுத்து
விலகி விழிநீரோடு
நிற்கின்றேன்...

ஆனால்
நம் காதலை யாருக்காகவும்
விட்டுக் கொடுக்க இருவருமே
இசையவில்லை...
எங்கிருந்தாலும் நம்
காதல் கலங்கமில்லமால்
வாழ்ந்து கொண்டிருக்கும்
என்ற நம்பிக்கையில்
நீயும் நானும்.....

Thursday, December 23, 2010

அன்பான அம்மாவே...

http://i.pbase.com/o4/30/52730/1/91859921.IQKYu39G.IMG_0137.JPG




"அம்மா" இந்த மூன்றெழுத்தில் - எனக்கு
மூச்சுக் கொடுத்த மூன்றாம் பிறையே...
உன் திருக்கல்யாணத்தில் - நீ
கலைமகளாய்த் தெரிந்தாயாம்!!
இப்பொழுதும் அப்படித்தானே இருக்கிறாய்!

"பாண்டிய மன்னன் முப்பெருங்கடலில்
மூழ்கித்தான் முத்தெடுத்தான், நான்
முழுகாமல் முத்தெடுத்தேன்" - என்று
என்னிடம் பாடுவாயே!! பாக்கியமானேனே...
முத்தின் பெருமை சிப்பியின் தியாகத்தால்
இது உலகறிந்த உண்மையம்மா...

கல்யாண நாளிலிருந்து கணவனிற்காக
வாழ்ந்து கண்ணியம் காத்தாய்....
கருவுற்ற நாளிலிருந்து மகனிற்காக
வாழ்ந்து பெண்ணியம் காத்தாய்...
உன் அவதாரம்தான் என்ன?

ஒரு சிறு உதிரமாய் உன்னுள் நான்
உதித்து உயிர்ப்பெற - நீ
மசக்கையில் பட்ட பாடெல்லாம்
பார்த்தவர்கள் சொல்லி அறிந்ததைவிட
உள்ளிருந்து உணர்ந்து உறைந்தேன்

பத்தியமிருந்து என்னை பத்திரப்படுத்தி
நித்திரையின்றி நித்தம் தவித்து
சத்தமின்றி தொட்டு தொட்டு
முத்தம் பதித்து பொக்கிஷமாய்
போற்றி பெருமையாய் சிலிர்ப்பாய்...

எனக்காக வாழ்க்கையில்
சோக சுமைகளை சுமந்து
உறவில் சிரித்த உயிரோவியமே...!

எத்தனை ரணகளங்கள் எதனை ஏமாற்றங்கள்
அத்தனையும் உன் அன்பான உன் நெஞ்சில்
எனக்காக ஏந்திய தீபச் சுடரே...!

எங்களின் சந்தோஷத்திற்கு பாலம் அமைத்து
உடலை வருத்தி; உயிரை வெறுத்து
உள்ளத்தினுள் ஊமையாய் அழுத உத்தமியே...!

அன்னையாய் வந்து அன்பால் வளர்த்து
ஆசிரியையாய் இருந்து அறிவால் போற்றி
அம்பிகையாய் நின்று ஆசியை தந்து
ஜணனம் கொடுத்து மரணம் பெற்ற
என் மாசில்லா மணிவிளக்கே...

இனியொரு ஜென்மம் வேண்டுமம்மா...
பிறப்பும் பெண்ணாய் இருந்திட வேண்டுமம்மா...
உன்னை என் கருவறையில் சுமந்திட வேண்டுமம்மா...!
அதற்கு உன் வரம் வேண்டுமம்மா...


Wednesday, December 22, 2010

உறங்காத நினைவுகள்



http://www.punjabicomments.co.cc/wp-content/uploads/2010/11/jionda-reh.jpg






பனி உறைந்த விடியல்
விடிந்த இரவை நினைத்து
அர்த்தமற்ற ஆத்திரம்!
உறங்காத உன் நினைவுகளோ
சுவை மிகுந்த தருணங்கள்...

பகலில் உன்னிடம் பழகுவதற்கு

இந்த இரவில்தான் ஒத்திகை...!
நீ விட்டுச் சென்ற நேரங்களில்
இந்த தலையணையும், போர்வையுமே
என்னை விட்டு அகலாத தோழிகள்!

எத்தனையோ முறை ஊடலால் - நீ

உக்கிரவார்த்தைகள் உபயோகப்படுத்தி
வெளியேறிச் செல்கையில் - என்
விழிநீரை தனக்குள் வாங்கிய
என் தலையணையும் தாய்மடியே...

உன் குறுநகையில் கண்ட

காதலின் சுகம் கணக்கிலடங்கா...
இடர்பாடில்லமல் இசைகொண்ட - உன்
பேச்சை கேட்கவே காதுகளில் - நான்
எந்தவித கனத்தையும் சேர்ப்பதில்லை

வெயில் கால மழையில் என்னில்

வந்த வசந்த காலம் நீ - மழை
நீரைத் தாங்கும் தாவர இலையாய்
உன் பச்சை வண்ண நினைவுகள்
பசலையாய் என்னுள்ளே...

நிலவை மறைக்கும் மேகமாய்

மோகங்கள் தேகத்தை சூழ்ந்தாலும்
வேகமாய் தவிர்த்து தளிர்ப்பேன்
என் பரிதவிப்பை ஒருநாளும்
உன்னிடம் உடைப்பதில்லை...!

உன் கேலி என் பெண்மையை மட்டுமல்ல

என் காதலையும் கொச்சையாக்கினால்
ஆறாத வடுவாய் அதையும் நான் - உன்
நினைவோடு சேர்ந்து சுமக்க வேண்டும்
சுகமான சுமையை மட்டுமே விரும்புகிறேன்

நினைவுகளை சுமந்து கொண்டே

வாசலில் கோலமிட அமர்கின்றேன்
ஒரு புள்ளி, ஒரு வளைவு
சுற்றி இழுத்து முடிக்கின்றேன்
உன் பெயரே கோலமாய் வாசலில்...!









Friday, December 17, 2010

அறிதலும் புரிதலுமாய்....

http://sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc4/hs1140.snc4/148231_131111070284088_100001555869268_180096_6639433_n.jpg



விண்மீன்கள் விட்டுச்சென்ற விடியல்

விழிகளோ நெருப்புக் குளியலாய்...

நெஞ்சமோ தணலாகி தவிப்பாய்...

அறிதலும் புரிதலுமாய் நம்முள் காதல்


உரையாடலால் உலா வரும் _ நம்

குரல்கள் தென்றலாய் தேசமெங்கும்

கதைப்பதற்கு அவசியமான செயல்கள்

ஏதுமில்லை...ஆன போதும் கேட்பாரற்று

சலனமின்றி கிடக்கும் எனது இனிய

அலைபேசியும் வருத்தத்தில் முழுவதுமாய்

உனக்கும் எனக்கும் இடையிலான

வெற்றிடத்தை சொல்லி விம்முகிறது....


அறிதலும் புரிதலுமாய் நம்முள் காதல்

உணர்வு பரிமாற்றங்கள் மென்மையாய்

வரம்பு மீறா வார்த்தைகளுடன் _ உன்

தெரிவிக்கமுடியாத ஏக்கத்தை

நமக்குள் நடக்கும் ரகசிய யுத்தத்தில்

சத்தமின்றி _ நீ _ இட்டுச் சென்ற

முத்தமும் என்னுள் மொத்தமாய்....

Wednesday, December 15, 2010

என் காதலின் கவிதை

http://s2.hubimg.com/u/43157_f520.jpg




என் காதலின் கவிதையை
விரல் கொண்டு எழுதுவதால்
வீணாகப் போகுமென்று - என்
விழி இமைகளின் விளிம்பில்
மையிட்டு எழுதுகிறேன்...

என் காதலின் கவிதையை
அதரம் கொண்டு எழுதுவதால்
அழிந்து போகுமென்று - என்
உதிரத்தின் வாயிலாக
உறைய எழுதிகிறேன்...

அன்பே...
அக்கரையிலிருந்தும்
ஆள்கிறாய் என்னை
நானோ
நெடுந்தூர வானமாய்
தொடர்கின்றேன் உன்னை...

வெற்றிடமாய் இருந்த
இதயமோ நீ
வந்து தங்கியதால்
நந்தவனமானது!

அனுமதியின்றி உள்ளே
நுழைந்த உன்னை எந்த
சட்டத்தின் கீழ் தண்டிப்பது?
விசாரணையின்றி உனை - என்
விழிகளுக்குள் சிறை
வைக்கின்றேன்....

கண்களுக்குள் கவிபாடும்
கண்ணாளனே...
உன் மேல் கொண்ட மோகத்தால்
நான் கொண்டேன் மௌனம்...
உயிராய் உணர்வாய் உன்னுள்
எப்போது நான் வருவேன்?

வாழ்வென்பது உன்னோடுதான்
அதுவரை நான் பண்போடுதான்
உறவென்பது உன் உயிரோடுதான்
அதுவரை நான் உன் நினைவோடுதான்.....

வரமாய் வந்தவள் நீ

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSCKHyQmzl4ief_9wJ4dBCdHBE-CRhOrS249RtKs37tPrm_Uzj8



ஆசைகளை சொன்ன அன்னக்கிளியே....
என் நேசமது உனக்கு புரியவில்லையா...
ஆயிரம் பிறவிகள் அளவு வேண்டாமடி...
எத்தனை பிறவிகள் ஆனாலும் - அது
ஐந்தறிவு ஆறறிவு ஆனாலும்
உன் துணை நான் தானடி...!
Join Only-for-tamil

பாசம் மட்டுமல்லடி பகிர்ந்துகொள்ள
பலவகைகள் உண்டு!
பசி - புசி, துக்கம் - தூக்கம்
இன்பம் - துன்பம், அழுகை - சிரிப்பு
நிறைவு - குறைவு, காதல் - காமம்
பகிர்ந்து பருகுவோமடி...!
Join Only-for-tamil

நிழலாய் மட்டுமல்ல நீக்கமற

இணைந்து ஒன்றாய் சுவாசித்து
யாசித்து உணர்வோமடி...!
நீர் முத்துக்களை மெல்லமாய்
முத்தமிட்டு சுவைப்பவளே...
உன் இதழ்வழி நுழைந்து - என்
உயிர் மூச்சால் உன்னை அனுதினமும்
குளிர்வித்து குளிர்வேனடி....!
Join Only-for-tamil
அணியும் ஆடை மட்டுமல்ல
என் ஆன்மாவும் நீதானடி...!
உப்பாய் இருந்து உயிருள்ளவரை
நினைக்கச் செய்தவளே
என் அறுசுவையும் நீதானடி...!
Join Only-for-tamil
சுட்டெரிக்கும் வெயிலில்
சுற்றி வந்தால் உன் மேனி
கருத்து விடுமடி...! அதன்பால்
என் இதயமும் கருத்து விடுமடி...!
Join Only-for-tamil
வியர்வை முத்துக்கள் மட்டுமல்ல
என் கண்ணின் மணிகளையும்
எடுத்துத் தருகிறேனடி ...!
சேர்த்து கோர்த்து - உன்
வெண் சங்கு கழுத்தை மிளிரச் செய்யடி...!
Join Only-for-tamil
காணும் கலைகள் மட்டுமல்ல - நான்
பார்க்கும் பாரதமும் நீதானடி...!
விரிந்த மார்பு, விரல்கள்,
தாயுமானவன் மடி போதாதடி...!
உச்சி முதல் பாதம் வரை
உன் ஒருத்திக்கு மட்டும் தானடி...!
Join Only-for-tamil
கண்ணிற்குத் தெரியாத கடவுள் வேண்டாமடி..!
கண்ணிற்குத் தெரிந்த - என்
காவிய தெய்வமே நீ தானடி...!
அன்னையாய்...அம்பிகையாய்
மனைவியாய் ... மந்திரியாய்
என்னை ஆட்கொண்டவளே...
Join Only-for-tamil
உதிரம் சுமக்க ஆசைப்பட்டு
என்னை உச்சியின் சிகரத்திற்கு
உயர்த்திய என் உயிரே.........
வரமாய் வந்தவள் நீயடி...
என் வாழ்விருக்கும் வரை - உன்னை
வாட விடமாட்டேனடி....
Join Only-for-tamil

Tuesday, December 14, 2010

சித்திரமும், சித்தனும்

இனி
கண்களை குளிர்விக்கும்
மின்னஞ்சல்களோ

இதயத்தை மலரவைக்கும்
மின்னஞ்சல்களோ
உம்மை வந்து சேரப் போவதில்லை!

உங்களது வேதனைக் கதைகளை
உங்களின் இதய வீதிகளே
பறைசாற்றட்டும்!


விழிகளுக்குள் உன் விழி
வைத்துப் போற்றினாள்...
விடியும்வரை விசாலமாய் கனாக் கண்டாள்...
விடிந்தபின் கண்ட கனாக்கள் யாவும்
விட்டில் பூச்சிகளாய் மாறியதும் துடித்து
துவண்டாள்...


தலைகாவிரிக்குக் கண்ணீரை தாரை
வார்த்தவள்
வைகைநதியாய் கண்ணீரும்
வற்றிப் போகவும்
வானம் பார்த்த பூமியாய்
வாடித்தான் போனாள்...
வாசமானவன் வாசல் வரை
சென்றுதான் பார்த்தாள்...


எத்தனை ஜனனம் ஆனாலும் _ நான்
அத்தனை ஜனனத்திலும் உயிராய்
உன்னுடன்

உடன்வருவேன் என்று உருகி
உரைத்தவன்
ஊமையாய் உடன்கட்டை
ஏறிவிட்டான்...


சொல்லாமல் தத்தளித்த சோலைக் குயில்கள்
சொல்லிப்பறந்தன திசை எங்கும்...
சிரித்து விளையாடியவள்
சித்திரமாய் சுவற்றில்!
சித்தம் சிதைந்தவன் சித்தனாய்
பூவுலகில்!