என் காலத்திற்குரியவனே....
நீ
இமை விரித்துப் பார்க்கையிலே
என்னிதயம் மட்டுமல்ல
என் வாழ்வும் ஒளி பெறுகிறது...
ஆனால்
என் பார்வையோ பழுதாகிறது...
உன்
வருகைக்குப் பின்னேதான்
நந்தவனங்களாய்
என் காலங்கள்
பூத்துக்குலுங்கின...
நொந்த இதயமோ
துளிர் விட்டு
தூறலாய் இசைத்தன....
நீ
தலை நிமிர்ந்து நடக்கையில்
உன் பாதையின் நிழலாய்
தலை குனிந்தே தொடர்கின்றேன்
நீ
அடி எடுத்து உள்ளே நுழைந்தாய்
என் இல்லமும் இதயமும்
அகலிகைகளாய்
சாப விமோசனம் பெற்றன....
உனக்கு
பௌர்ணமி இரவுகள்
இன்பத்தை இழைத்தாலும்
எனக்கு
உன் பொன் தமிழ் மட்டுமே
எழுச்சியை அளிக்கின்றது...
எத்தனையோ
சிந்தனைகளில் - நீ
ஆழ்ந்திருந்தாலும்
இலைமறை காயாக
உன் புன்முறுவலை
எனக்கு விட்டுச்செல்வாயே
அதை மீண்டும் வாங்குவதற்கு
இன்னொரு பிறவியும்
வேண்டுமென்று - உன்
ஆண்டவனை அணுகுகின்றேன்...
உன்
வெயில்காலப் பார்வையில்
பயந்து ஒதுங்கி பயணித்தாலும்
உன்
குளிர்கால மவுனத்தில்
குறைந்தே போகின்றேன்....
ஆயினும்
எந்த நிலையிலும்
என்னோடு நீயிருந்தால்
என் காலங்கள்
வசந்தமாகும்...
என் உணர்வுகள்
உயிர்ப்பெறும்!
4 comments:
இந்த கவிதையில் யாரை/ எதை உருவகப்படுத்தி கவிதை பாடியிருக்கிறீர்கள் ?
அட, அதை எப்படி சொல்வது ஷர்பு? (பப்ளிக், பப்ளிக்)...:-))
உங்களின் செயலும் சிந்தனையும் ....... போலவே இருக்கிறது!
:-)
ஆமாம் ஆமாம்! என் செயலும் சிந்தனையும் ....... போலவேதான் இருக்கிறது...:-)
Post a Comment