பனி உறைந்த விடியல்
விடிந்த இரவை நினைத்து
அர்த்தமற்ற ஆத்திரம்!
உறங்காத உன் நினைவுகளோ
சுவை மிகுந்த தருணங்கள்...
பகலில் உன்னிடம் பழகுவதற்கு
இந்த இரவில்தான் ஒத்திகை...!
நீ விட்டுச் சென்ற நேரங்களில்
இந்த தலையணையும், போர்வையுமே
என்னை விட்டு அகலாத தோழிகள்!
எத்தனையோ முறை ஊடலால் - நீ
உக்கிரவார்த்தைகள் உபயோகப்படுத்தி
வெளியேறிச் செல்கையில் - என்
விழிநீரை தனக்குள் வாங்கிய
என் தலையணையும் தாய்மடியே...
உன் குறுநகையில் கண்ட
காதலின் சுகம் கணக்கிலடங்கா...
இடர்பாடில்லமல் இசைகொண்ட - உன்
பேச்சை கேட்கவே காதுகளில் - நான்
எந்தவித கனத்தையும் சேர்ப்பதில்லை
வெயில் கால மழையில் என்னில்
வந்த வசந்த காலம் நீ - மழை
நீரைத் தாங்கும் தாவர இலையாய்
உன் பச்சை வண்ண நினைவுகள்
பசலையாய் என்னுள்ளே...
நிலவை மறைக்கும் மேகமாய்
மோகங்கள் தேகத்தை சூழ்ந்தாலும்
வேகமாய் தவிர்த்து தளிர்ப்பேன்
என் பரிதவிப்பை ஒருநாளும்
உன்னிடம் உடைப்பதில்லை...!
உன் கேலி என் பெண்மையை மட்டுமல்ல
என் காதலையும் கொச்சையாக்கினால்
ஆறாத வடுவாய் அதையும் நான் - உன்
நினைவோடு சேர்ந்து சுமக்க வேண்டும்
சுகமான சுமையை மட்டுமே விரும்புகிறேன்
நினைவுகளை சுமந்து கொண்டே
வாசலில் கோலமிட அமர்கின்றேன்
ஒரு புள்ளி, ஒரு வளைவு
சுற்றி இழுத்து முடிக்கின்றேன்
உன் பெயரே கோலமாய் வாசலில்...!
3 comments:
kavithayin kanave ungalathu padaipu
கவிதையில் அர்த்தமும் அருமை வார்த்தைகளும் அருமை அவற்றுள் நீங்கள் வெளிப்படுத்திய காதலும் அருமை. தொடருங்கள் ....
நன்றி நண்பரே....கவிதையுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்:-))
Post a Comment