இன்று ஒரு சிக்கல்
என் எழுதுகோல்
எழுதிப் பழகியதுண்டு
ஆனால்
அழுது பழகியதில்லை..
எண்ணக்கருவறையில்
உதித்து நின்ற
வார்த்தைக் கருக்களெல்லாம்
வலிமையிழந்து வலியோடு
கரைகின்றன....
விரலுக்கும் எழுதுகோலிற்கும்
இடையே இருந்த நெருக்கம்
உனக்கும் எனக்குமானது…
ஆனபோதும்
கைவிட்ட விரலை நினைத்து
எழுதுகோல் கலங்குகிறதா, - இல்லை
கண்டு கொள்ளாத
உன்னை நினைத்து கண்ணீர் சிந்துகிறதா
தெரியவில்லை…
”இருந்தும் இல்லாமலிரு” வள்ளலார்
வாசகம் கற்றவன் நீ…- உன்
வாசகியாய் வந்தவளை வாசிக்கத்
தவறிவிட்ட தமிழன் நீ…!!
பாட்டும் தொகையுமாய் படித்த தமிழை
என் செவியோடு சேர்த்தவன் நீ… - உன்
பாட்டும் கவியுமாய் இருந்தவளை
கண்ணாக காக்க மறந்த கவிஞன் நீ…
எங்கெல்லாமோ சுற்றி வந்து
கதை சொன்னவன் நீ… - உன்
கதையின் நாயகி நானே என்றவன்
சுபம் போட்டு சுழிக்காதவன் நீ…
நாளும் இரண்டுமாய் பேசி
‘நா’ நயத்தோடு வாழ்பவன் நீ… - என்
சுகமோ துக்கமோ நீயிருப்பதினால்
எதுவும் என்னை பாதிக்கவில்லை…
பிரிவின் ஆறு இலக்கணமும்
உன்னிடம் தோற்று நிற்கிறது - இது
இலக்கணம் மீறிய செயலானாலும்
உன் புன்னகையால் சோகம் துறந்தது…
அணைப்பதும் ஆளுமை செய்வதும்
உன் பேரன்பினால் மட்டுமே என்பதினால்
மறந்த தருணங்களும் உணர்ந்த பொழுதுகளும்
இங்கு மோட்சமடைகின்றன….