Saturday, October 8, 2011

கண்ணீரே அருமருந்து......


துணையும் துடுப்புமின்றி
வான கடலில்
காற்றின் வேகம் கணிக்காமல்
நீந்திச் செல்லும்
விந்தை நிலவாய் - நானும்
நீந்திச் செல்கின்றேன்....
எதிரில் வருவதும் போவதும்
அறியவில்லை...!!
ஆயிரம் ஆசைகள் மனதினில்
சுழலுது... - ஆயினும்
அற்ப ஆசையும் கண்ணுக்கு
மறையுது!
கதிரொளி, நிலவொளி
இருந்தென்ன லாபம்?
கண்ணொளி மிளிராமல்
மங்கியே கிடக்குது!
உள்ளம் அமைதியின் உருவகமாக
தென்றலின் துணையோடு
நீந்துமென நினைந்திருக்க
ஏமாற்றமே ஏகாந்தமாய்
வியாபித்திருக்கிறது!
சிறுமீனை இரையாக்கும்
பெரிய மீன்களையே பெரும்பாலும்
பார்த்துச் சலிக்கின்றேன்....
நத்தையைத் தின்னும் நாரையாய்
உள்ளத்தைக் குதறும் உயர்ந்தோரே
நிறைந்திருக்கின்றனர்...
உடையை மாற்றுவதுபோல்
உள்ளத்தில் புதைந்திருக்கும்
நேசத்தை மாற்ற முடியாமல்
நிசத்தை நினைந்து நிதானிக்கின்றேன்....
முள்ளையும் மலரையும்
தொட்டுப்பார்த்து குணம்றிந்தவள்
நின்னைத் தொடாமலே
நின் மனமறிந்தவள் நானடா...
விளக்கைத் தொட்டு
சாகும் விட்டில்போல் - உன்
நினைவாலேயே சாகின்றேன்...
விரிசலில் வளரும் விதையாய் - உன்
பிரிவினில் என் காதலை
கண்ணியமாய் வளர்க்கின்றேன்....
ஆறுதலுக்கு என் கண்ணீரே
அருமருந்தானதால்
அழுது தொலைந்தே தெளிகின்றேன்...




2 comments:

Unknown said...

விந்தை நிலவுக்கு...! விண்ணும் கடலும்.... வழியாகிறதே...அடடே!!

பிரேமி said...

நன்றி தோழமையே.... தொடர்ந்து காதலாற்றுப்படையுடன் இணைந்திருங்கள்....:-)